சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

ரமண மஹரிஷி அருளிய அருணாச்சலசிவ அக்ஷரமணிமாலை

Audio

அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
அருணாச்சலசிவ அருணாச்சலா !
அருணாச்சலசிவ அருணாச்சலசிவ
அருணாச்சலசிவ அருணாச்சலா !

அருணாச்சலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாச்சலா !

அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று
அபின்னமாய் இருப்போம் அருணாச்சலா !

அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்
அமர்வித்து என்கொல் அருணாச்சலா !

ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாச்சலா !

இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாச்சலா ! -----5

ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய்
இதுவோ உனது அருள் அருணாச்சலா !

உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல்
உறுதியாய் இருப்பாய் அருணாச்சலா !

ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட
உன் அழகைக் காட்டு அருணாச்சலா !

எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில்
இதுவோ ஆண்மை அருணாச்சலா !

ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க
இது உனக்கு அழகோ அருணாச்சலா !-----10

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது
அகத்தில் நீ இலையோ அருணாச்சலா !

ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார்
உன் சூதேயிது அருணாச்சலா !

ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய்
உனை யார் அறிவார் அருணாச்சலா !

ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை
ஆளுவது உன் கடன் அருணாச்சலா !

கன்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக்
காணுவது எவர் பார் அருணாச்சலா !----15

காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்
கலந்து எனோடு இருப்பாய் அருணாச்சலா !

கிரி உரு ஆகிய கிருபைக் கடலே
கிருபை கூர்ந்து அருளுவாய் அருணாச்சலா !

கீழ்மேல் எங்கும் கிளர் ஒளி மணி என்
கீழ்மையைப் பாழ்செய் அருணாச்சலா !

குற்றம் முற்று அறுத்து எனைக் குணமாய்ப் பணித்தாள்
குரு உருவாய் ஒளிர் அருணாச்சலா !

கூர்வாட் கண்ணியர் கொடுமையில் படாது அருள்
கூர்ந்து எனைச் சேர்ந்து அருள் அருணாச்சலா !!----20

கெஞ்சியும் வஞ்சியாய்க் கொஞ்சமும் இரங்கிலை
அஞ்சல் என்றே அருள் அருணாச்சலா !

கேளாது அளிக்கும் உன் கேடு இல் புகழைக்
கேடு செய்யாது அருள் அருணாச்சலா !

கையினில் கனி உன் மெய்ரசம் கொண்டு உவகை
வெறி கொள அருள் அருணாச்சலா !

கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக்
கொண்டெ ங்கென் வாழ்வேன் அருணாச்சலா !

கோபம் இல் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்
குறை என்செய்தேன் அருணாச்சலா ! ---- 25

கௌதமர் போற்றும் கருணை மாமலையே
கடைக்கணித்து ஆள்வாய் அருணாச்சலா !

சகலமும் விழுங்கும் கதிர் ஒளி இன(ன்) மன
சலசம் அலர்த்தியிடு அருணாச்சலா !

சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவா யான்
சாந்தமாய்ப் போவன் அருணாச்சலா !

சித்தம் குளிரக் கதிர் அத்தம் வைத்து அமுத
வாயைத்திற அருண்மதி அருணாச்சலா !

சீரை அழித்து நிர்வாணமாச் செய்து அருள்
சீரை அழித்து அருள் அருணாச்சலா !---- 30

சுகக்கடல் பொங்கச் சொல் உணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடு அங்கு அருணாச்சலா !

சூது செய்து என்னைச் சோதியாது இனி உன்
ஜோதி உருக்காட்டு அருணாச்சலா !

செப்படி வித்தை கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படு வித்தை காட்டு அருணாச்சலா !

சேராய் எனில் மெய் நீராய் உருகிக் கண்நீர்
ஆற்று அழிவேன் அருணாச்சலா !

சை எனத் தள்ளில் செய்வினை சுடும் அலால்
உய்வகை ஏது உரை அருணாச்சலா !---- 35

சொல்லாது சொலி நீ சொல் அற நில் என்று
சும்மா இருந்தாய் அருணாச்சலா !

சோம்பியாய்ச் சும்மா சுகம் உண்டு உறங்கிடில்
சொல் வேறு என்கதி அருணாச்சலா !

சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே
சலியாது இருந்தாய் அருணாச்சலா !

ஞமலியில் கேடா நான் என் உறுதியால்
நாடி நின் உறுவேன் அருணாச்சலா !

ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற
ஞானம் தெரித்தருள் அருணாச்சலா !---- 40

ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே
நேர் நின்றனை என் அருணாச்சலா !

தத்துவம் தெரியாது அத்தனை உற்றாய்
தத்துவம் இது என் அருணாச்சலா !

தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் அருணாச்சலா !

திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாச்சலா !

தீரம் இல் அகத்தில் தேடி உந்தனை யான்
திரும்ப உற்றேன் அருள் அருணாச்சலா !---- 45

துப்பறிவு இல்லா இப்பிறப்பு என் பயன்
ஒப்பிட வாய் ஏன் அருணாச்சலா !

தூய்மன மொழியர் தோயும் உன் மெய் அகம்
தோயவே அருள் என் அருணாச்சலா !

தெய்வம் என்று உன்னைச் சாரவே என்னைச்
சேர ஒழித்தாய் அருணாச்சலா !

தேடாது உற்ற நல் திருவருள் நிதி அகத்
தியக்கம் தீர்த்து அருள் அருணாச்சலா !

தைரியமோடும் உன் மெய் அகம் நாட யான்
தட்டழிந்தேன் அருள் அருணாச்சலா !---- 50

தொட்டு அருட்கை மெய் கட்டிடாய் எனில் யான்
நட்டமாவேன் அருள் அருணாச்சலா !

தோடம் இல் நீ அகத்தோடு ஒன்றி என்றும்
சந்தோடம் ஒன்றிட அருள் அருணாச்சலா !

நகைக்கு இடம் இலை நின் நாடிய எனை அருள்
நகையிட்டுப் பார் நீ அருணாச்சலா !

நாணிலை நாடிட நானாய் ஒன்றி நீ
தாணுவாய் நின்றனை அருணாச்சலா !

நின் எரி எரித்து எனை நீறு ஆக்கிடுமுன்
நின் அருள் மழை பொழி அருணாச்சலா !---- 55
நீ நான் அறப்புலி நிதம் களிமயமாய்
நின்றிடும் நிலை அருள் அருணாச்சலா !
நுன்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
எண்(ண) அலை இறும் என்று அருணாச்சலா !

நூலறிவு அறியாப் பேதையன் எந்தன்
மால் அறிவு அறுத்து அருள் அருணாச்சலா

நெக்கு நெக்கு உருகி யான் புக்கிட உனைப்புகல்
நக்கனா நின்றனை அருணாச்சலா

நேசம் இல் எனக்கு உன் ஆசையைக் காட்டி நீ
மோசம் செயாது அருள் அருணாச்சலா !---- 60

நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில்
நாடி உட்கொள் நலம் அருணாச்சலா

நொந்திடாது உந்தனைத் தந்து எனைக் கொண்டிலை
அந்தகன் நீ எனக்கு அருணாச்சலா

நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாச்சலா

பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள்
பற்றிட அருள்புரி அருணாச்சலா

பார்த்தருள் மால் அறப் பார்த்தினை எனின் அருள்
பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாச்சலா ! ----- 65

பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள்
பித்தம் தெளி மருந்து அருணாச்சலா

பீதியில் உனைச் சார் பீதியில் எனைச்சேர்
பீதி உந்தனக்கு ஏன் அருணாச்சலா

புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை
புல்லிடவே அருள் அருணாச்சலா

பூமணம் மா மனம் பூரண மனம் கொளப்
பூரண மனம் அருள் அருணாச்சலா

பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன்
பெருமை யார் அறிவர் அருணாச்சலா ! ----- 70

பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப்
பேயன் ஆக்கினை என் அருணாச்சலா

பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல்
பற்றுக் கோடாய்க் கா அருணாச்சலா

பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன்
போதத்தைக் காட்டினை அருணாச்சலா

போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட்
போராட்டம்காட்டு அருணாச்சலா

பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன்
பவிசு கண்டுற அருள் அருணாச்சலா ! ----- 75

மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள்
மலை மருந்தாய் ஒளிர் அருணாச்சலா

மானங்கொண்டு உருபவர் மானத்தை அழித்து
அபிமானமில்லாது ஒளிர் அருணாச்சலா

மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான்
வஞ்சியாது அருள் எனை அருணாச்சலா

மீகாமன் இல்லாமல் மாகாற்று அலை கலம்
ஆகாமல் காத்தருள் அருணாச்சலா

முடி அடி காணா முடி விடுத்து அனைநேர்
முடுவிடக் கடனிலை அருணாச்சலா ! ----- 80

மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத்
தூக்கி அணைந்து அருள் அருணாச்சலா

மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம்
மெய் கலந்திட அருள் அருணாச்சலா

மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர்ச் சேர்ந்து நீ
மேன்மை உற்றனை என் அருணாச்சலா

மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்மை
வசம் ஆக்கினை அருணாச்சலா

மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில் நீ
நட்டம் ஆடினை என் அருணாச்சலா ! ----- 85

மோகம் தவிர்த்து உன் மோகம் வைத்தும் என்
மோகம் தீராய் என் அருணாச்சலா

மௌனியாய்க் கல்போல் மலராது இருந்தால்
மௌனம் இது ஆமோ அருணாச்சலா

யவன் என் வாயில் மன்ணினை அட்டி
என் பிழைப்பு ஒழித்தது அருணாச்சலா

யாரும் அறியாது என் மதியினை மருட்டி
எவர் கொளை கொண்டது அருணாச்சலா

ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது
எனை ரமித்திடச் செயவா அருணாச்சலா ! ----- 90

ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில்
ரமித்திடுவோம் வா அருணாச்சலா

லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனை
பட்சித்தாய் பிராணனோடு அருணாச்சலா

லாபம் நீ இகபரலாபம் இல் எனை உற்று
லாபம் என் உற்றனை அருணாச்சலா

வரும்படி சொலிலை வந்து என்படிஅள
வருந்திடு உன் தலைவிதி அருணாச்சலா

வாவென்று அகம் புக்கு உன் வாழ்வு அருள் அன்றே
என் வாழ்வு இழந்தேன் அருள் அருணாச்சலா ! ----- 95

விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர்
விட்டிட அருள்புரி அருணாச்சலா
வீடு விட்டு ஈர்த்து உளவீடு புக்குப் பைய உன்
வீடு காட்டினை அருள் அருணாச்சலா

வெளிவிட்டேன் உம்செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாச்சலா

வேதாந்தத்தே வேறு அற விளங்கும்
வேதப் பொருள் அருள் அருணாச்சலா

வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா
வைத்து எனை விடாது அருள் அருணாச்சலா ! ----- 100

அம்புவில் ஆலிபோல் அன்பு உரு எனில் எனை
அன்பாக் கரைத்து அருள் அருணாச்சலா

அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன்
உன் அருள்வலை தப்புமோ அருணாச்சலா

சிந்தித்து அருள்படச் சிலந்தி போல் கட்டிச்
சிறையிட்டு உண்டனை அருணாச்சலா

அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
அன்பன் ஆயிட அருள் அருணாச்சலா

என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ
எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாச்சலா ! ----- 105

என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என்
புன்மொழி கொள அருள் அருணாச்சலா

பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாச்சலா

மாலையளித்து அருணாசல ரமண என்
மாலை அணிந்து அருள் அருணாச்சலா ! ----- 108

அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாச்சலா !
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாச்சலா !


Back to Top
This page was last modified on Thu, 09 May 2024 04:32:47 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

arunachala aksharamanamalai