சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

வள்ளலார் அருளிய திருஅருட்பா


கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி


2.094.52   வள்ளலார் திருஅருட்பா  
தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
தயவு தான்நினக் கில்லை உயிரையும்
விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.

Back to Top
5.052.08   வள்ளலார் திருஅருட்பா  
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

6.001.02   வள்ளலார் திருஅருட்பா  
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
6.006.07   வள்ளலார் திருஅருட்பா  
வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

6.008.06   வள்ளலார் திருஅருட்பா  
தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.

6.016.04   வள்ளலார் திருஅருட்பா  
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.

Back to Top
6.017.05   வள்ளலார் திருஅருட்பா  
களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.

6.019.01   வள்ளலார் திருஅருட்பா  
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.

6.020.62   வள்ளலார் திருஅருட்பா  
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

6.030.04   வள்ளலார் திருஅருட்பா  
வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.

6.037.02   வள்ளலார் திருஅருட்பா  
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்­ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

Back to Top
6.037.39   வள்ளலார் திருஅருட்பா  
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

6.107.01   வள்ளலார் திருஅருட்பா  
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

6.132.01   வள்ளலார் திருஅருட்பா  
கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

Back to Top

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:36 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruarupa lang tamil