| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
| Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
| Thirumurai |
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன பண் - கௌசிகம் (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=jhBhyYkXIlw |
|
3.044
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று பண் - கௌசிகம் (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=JAw1peLxdJo |
|
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும் பண் - கௌசிகம் (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=5Vuf3r9DVnc |
|
3.046
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை பண் - கௌசிகம் (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uSnIymbkLcs |
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து, பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=VoxehYAATnU |
|
3.048
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு பண் - கௌசிகம் (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=DNcF10ZwiTY |
|
3.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் பண் - கௌசிகம் (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் ) Audio: https://www.youtube.com/watch?v=5dzknic0_uA Audio: https://www.youtube.com/watch?v=RYMXxRvZB8I |
|
3.050
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும் பண் - கௌசிகம் (திருத்தண்டலைநீணெறி நீணெறிநாதேசுவரர் ஞானாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=XlEG3q_gV_U |
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே! பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை) Audio: https://sivaya.org/audio/3.051 Seyyanae ThiruAalavaay.mp3 Audio: https://www.youtube.com/watch?v=FKdAEZH4Pms |
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய், பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=bAtyDGetrng |
|
3.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானைக் காவல் வெண்மதி மல்கு பண் - கௌசிகம் (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=iOb0adHiqjU |
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன் பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) ) Audio: https://www.youtube.com/watch?v=ArwIB72oZ48 |
|
3.055
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரை ஆர் கொன்றையினாய்! விடம் பண் - கௌசிகம் (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=sw6WWvnkIic |
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
யாமாமா நீ யாமாமா யாழீகாமா பண் - கௌசிகம் (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=wEt3BJdWfIo |
|
7.094
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அழல் நீர் ஒழுகியனைய சடையும், பண் - கௌசிகம் (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை) Audio: https://www.youtube.com/watch?v=k0dLDNxuICw |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.043  
சந்தம் ஆர் முலையாள் தன
பண் - கௌசிகம் (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
|
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார் வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார் கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள் எந்தையார், அடி என் மனத்து உள்ளவே. | [1] |
|
மான் இடம்(ம்) உடையார், வளர் செஞ்சடைத் தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார் கான் இடம் கொளும் தண்வயல் காழியார் ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே. | [2] |
|
மை கொள் கண்டத்தர், வான்மதிச் சென்னியர் பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் கை கொள் மான்மறியார், கடல் காழியு ஐயன், அந்தணர் போற்ற இருக்குமே. | [3] |
|
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் கற்றை வார்சடை வைத்தவர், காழியுள பொற்றொடியோடு இருந்தவர், பொன்கழல், உற்றபோது, உடன் ஏத்தி உணருமே! | [4] |
|
நலியும் குற்றமும், நம் உடல் நோய்வினை, மெலியும் ஆறு அது வேண்டுதிரேல், வெய்ய கலி கடிந்த கையார், கடல் காழியு அலை கொள் செஞ்சடையார், அடி போற்றுமே! | [5] |
|
பெண் ஒர் கூறினர்; பேய் உடன் ஆடுவர் பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர்; கண்ணும் மூன்று உடையார் கடல் காழியு அண்ணல் ஆய அடிகள் சரிதையே! | [6] |
|
பற்றும் மானும் மழுவும் அழகு உற, முற்றும் ஊர் திரிந்து, பலி முன்னுவர் கற்ற மா நல் மறையவர் காழியு பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே! | [7] |
|
எடுத்த வல் அரக்கன் முடிதோள் இற அடர்த்து, உகந்து அருள் செய்தவர் காழியுள கொடித் தயங்கு நன் கோயிலுள், இன்புஉற, இடத்து மாதொடு தாமும் இருப்பரே. | [8] |
|
காலன் தன் உயிர் வீட்டு, கழல் அடி, மாலும் நான் முகன்தானும், வனப்பு உற ஓலம் இட்டு, முன் தேடி, உணர்கிலாச் சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே. | [9] |
|
உருவம் நீத்தவர் தாமும், உறு துவர் தரு வல் ஆடையினாரும், தகவு இலர்; கருமம் வேண்டுதிரேல், கடல் காழியு ஒருவன் சேவடியே அடைந்து, உய்ம்மினே! | [10] |
|
கானல் வந்து உலவும் கடல் காழியு ஈனம் இ(ல்)லி இணை அடி ஏத்திடும் ஞானசம்பந்தன் சொல்லிய நல்-தமிழ், மானம் ஆக்கும், மகிழ்ந்து உரைசெய்யவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.044  
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
பண் - கௌசிகம் (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
|
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர் சந்தமால், அவர் மேவிய சந்தமே. | [1] |
|
வான் இலங்க விளங்கும் இளம்பிறை- தான் அலங்கல் உகந்த தலைவனார் கான் இலங்க வரும் கழிப்பாலையார் மான் நலம் மடநோக்கு உடையாளொடே. | [2] |
|
கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர் பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்; கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே? | [3] |
|
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் தண் அலங்கல் உகந்த தலைவனார் கண் நலம் கவரும் கழிப்பாலையுள அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே? | [4] |
|
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும் பாரினார் உடனே பரவப்படும், காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம் சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே! | [5] |
|
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர் கொள்வனார், இடு வெண்தலையில் பலி; கள்வனார்; உறையும் கழிப்பாலையை உள்ளுவார் வினை ஆயின ஓயுமே. | [6] |
|
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும், எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும் பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக் கண்ணினார், உறையும் கழிப்பாலையே! | [7] |
|
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள துலங்க ஊன்றிய தூ மழுவாளினார் கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே. | [8] |
|
ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த் தாட்சியால் அறியாது தளர்ந்தனர்; காட்சியால் அறியான் கழிப்பாலையை மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே. | [9] |
|
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக் கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம் ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே! | [10] |
|
அம் தண் காழி அருமறை ஞானசம்- பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச் சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் முந்தி வான் உலகு ஆடல் முறைமையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.045  
அந்தம் ஆய், உலகு ஆதியும்
பண் - கௌசிகம் (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
|
அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான், வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன், சிந்தையே புகுந்தான்-திரு ஆரூர் எம் எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ? | [1] |
|
கருத்தனே! கருதார் புரம் மூன்று எய்த ஒருத்தனே! உமையாள் ஒருகூறனே! திருத்தனே! திரு ஆரூர் எம் தீவண்ண! அருத்த! என், எனை அஞ்சல்! என்னாததே? | [2] |
|
மறையன், மா முனிவன், மருவார் புரம் இறையின் மாத்திரையில்(ல்) எரியூட்டினான், சிறைவண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் இறைவன்தான், எனை ஏன்றுகொளும் கொலோ? | [3] |
|
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரிந்து எல்லி வந்து, இடுகாட்டு எரி ஆடுவான்- செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்; அல்லல் தீர்த்து, எனை, அஞ்சல்! எனும்கொலோ? | [4] |
|
குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி, விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை, திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்- வருந்தும்போது எனை, வாடல்! எனும்கொலோ? | [5] |
|
வார் கொள் மென்முலையாள் ஒரு பாகமா, ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்- சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்; ஆர்கணா, எனை, அஞ்சல்! எனாததே? | [6] |
|
வளைக்கை மங்கை நல்லாளை ஓர்பாகமா, துளைக்கையானை துயர் படப் போர்த்தவன்- திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்; இளைக்கும்போது, எனை ஏன்று கொளும்கொலோ? | [7] |
|
இலங்கை மன்னன் இருபதுதோள் இறக் கலங்க, கால்விரலால், கடைக் கண்டவன்- வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்; அலங்கல் தந்து, எனை, அஞ்சல்! எனும்கொலோ? | [8] |
|
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப் படியவன், பனி மா மதிச் சென்னியான்- செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் அடிகள் தான்; எனை, அஞ்சல்! எனும்கொலோ? | [9] |
|
மாசு மெய்யினர், வண் துவர் ஆடை கொள காசை போர்க்கும் கலதிகள், சொல் கொளேல்! தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம் ஈசன்தான் எனை ஏன்று கொளும்கொலோ? | [10] |
|
வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம், சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை, மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப் பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
பண் - கௌசிகம் (திருத்தலம் திருக்கருகாவூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
குழத்தைப் பேறு- கருக் கலையாமல் பாதுகாக்க ஓத வேண்டிய பதிகம்
|
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே, மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக் கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [1] |
|
விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம், கமுதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூர் அமுதர்; வண்ணம் அழலும் அழல்வண்ணமே. | [2] |
|
பழக வல்ல சிறுத்தொண்டர், பா இன் இசைக் குழகர்! என்று குழையா, அழையா, வரும், கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [3] |
|
பொடி மெய் பூசி, மலர் கொய்து, புணர்ந்து உடன், செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் அடிகள்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [4] |
|
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட, செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம் ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [5] |
|
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட, ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்; காய் சினத்த விடையார் கருகாவூர் எம் ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே. | [6] |
|
வெந்த நீறு மெய் பூசிய வேதியன், சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்- கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் எந்தை; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே. | [7] |
|
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் மண்ணு கோலம்(ம்) உடைய அம்மலரானொடும் கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [9] |
|
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள், சொல் தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்! கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம் ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [10] |
|
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ நிலவு பாடல் உடையான் தன நீள்கழல் குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ் சொல வலார் அவர் தொல்வினை தீருமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.047  
காட்டு மா அது உரித்து,
பண் - கௌசிகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
குலச்சிறையார் அரசனை அணுகி ஞானசம்பந்தர் திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம் என்றார். மன்னன் ஞானசம்பந்தர் என்ற நாம மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை உணர்ந்து அவரை அழைப்பீராக என்று கூறினான். சமணர்கள் அரசனிடம் இந்நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் நடுநிலை பிறழேன் என மறுத்தான். குலச்சிறை யாரும் அரசியாரும் ஞானசம்பந்தரைச் சென்று தரிசித்துத் திருமடத் திற்குத் தீயிட்ட செயலுக்கு மிக வருந்தியவர்களாய் மன்னன் வெப்பு நோயால் வாடுவதை விண்ணப்பித்துத் தாங்கள் எழுந்தருளி நோயைக் குணப்படுத்தினால் உய்வோம் எனக் கூறி நின்றனர். ஞான சம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம் எனக் கூறிப் புறப்பட்டுத் திருக் கோயிலை அடைந்து காட்டு மாவது உரித்து என்ற திருப்பதிகத்தால் போற்றி இறைவன் திருவுளக் குறிப்பை அறிந்தார்.
|
காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல், நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்; வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை ஓட்டி வாது செயத் திரு உள்ளமே? | [1] |
|
மத்தயானையின் ஈர் உரி மூடிய அத்தனே! அணி ஆலவாயாய்! பணி பொய்த்த வன் தவ வேடத்தர் அம் சமண் சித்தரை அழிக்கத் திரு உள்ளமே? | [2] |
|
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம் திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள் பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்- தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே? | [3] |
|
ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே? ஆதியே! திரு ஆலவாய் அண்ணல்! நீதி ஆக நினைந்து, அருள்செய்திடே! | [4] |
|
வையம் ஆர் புகழாய்! அடியார் தொழும் செய்கை ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய் கையில் உண்டு உழலும் அமண்கையரைப் பைய வாது செயத் திரு உள்ளமே? | [5] |
|
நாறு சேர் வயல்-தண்டலை மிண்டிய தேறல் ஆர் திரு ஆலவாயாய்! செப்பாய் வீறு இலாத் தவ மோட்டு அமண்வேடரைச் சீறி, வாது செயத் திரு உள்ளமே? | [6] |
|
பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும் தொண்டருக்கு எளியாய்! திரு ஆலவாய் அண்டனே! அமண் கையரை வாதினில் செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே? | [7] |
|
அரக்கன் தான் கிரி ஏற்றவன் தன் முடிச் செருக்கினைத் தவிர்த்தாய்! திரு ஆலவாய் பரக்கும் மாண்பு உடையாய்! அமண்பாவரை, கரக்க, வாதுசெயத் திரு உள்ளமே? | [8] |
|
மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி ஆலவாய் உறையும்(ம்) அண்ணலே! பணி மேலைவீடு உணரா வெற்று அரையரைச் சால வாது செயத் திரு உள்ளமே? | [9] |
|
கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்- அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே? தெழிக்கும் ம்புனல் சூழ் திரு ஆலவாய் மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே! | [10] |
|
செந்து எனா முரலும் திரு ஆலவாய் மைந்தனே! என்று, வல் அமண் ஆசு அற, சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்- பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.048  
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு
பண் - கௌசிகம் (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி )
|
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக் கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய மங்கையான், உறையும் மழபாடியைத் தம் கையால்-தொழுவார் தகவாளரே. | [1] |
|
விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது ஓர் கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்; மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே. | [2] |
|
முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்- குழுவினான், குலவும் கையில் ஏந்திய மழுவினான், உறையும் மழபாடியைத் தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே! | [3] |
|
கலையினான், மறையான், கதி ஆகிய மலையினான், மருவார் புரம் மூன்று எய்த சிலையினான், சேர் திரு மழபாடியைத் தலையினால் வணங்க, தவம் ஆகுமே. | [4] |
|
நல்வினைப் பயன், நால்மறையின் பொரு கல்வி ஆய கருத்தன், உருத்திரன், செல்வன், மேய திரு மழபாடியைப் புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே. | [5] |
|
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்; ஆடினான், எரிகான் இடை மாநடம்; பாடினார் இசை மா மழபாடியை நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே. | [6] |
|
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய் மன்னினான் உறை மா மழபாடியைப் பன்னினார், இசையால் வழிபாடு செய்து உன்னினார், வினை ஆயின ஓயுமே. | [7] |
|
தென் இலங்கையர் மன்னன் செழு வரை- தன்னில் அங்க அடர்த்து அருள் செய்தவன் மன் இலங்கிய மா மழபாடியை உன்னில், அங்க உறுபிணி இல்லையே. | [8] |
|
திருவின் நாயகனும், செழுந்தாமரை மருவினானும், தொழ, தழல் மாண்பு அமர் உருவினான் உறையும் மழபாடியைப் பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே | [9] |
|
நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர் வலிய சொல்லினும், மா மழபாடியு ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே, மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே. | [10] |
|
மந்தம் உந்து பொழில் மழபாடி எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான், கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்- பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
பண் - கௌசிகம் (திருத்தலம் நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர்
நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க
|
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது; வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே. | [1] |
|
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால், வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது; செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்; நம்பன் நாமம் நமச்சிவாயவே. | [2] |
|
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. | [3] |
|
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்; நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன், நாமம் நமச்சிவாயவே. | [4] |
|
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின், எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே. | [5] |
|
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய பந்தனையவர் தாமும் பகர்வரேல், சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே. | [6] |
|
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும், உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்- வரதன் நாமம் நமச்சிவாயவே. | [7] |
|
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும், மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை நலம் கொள் நாமம் நமச்சிவாயவே. | [8] |
|
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன் பாதம் தான் முடி நேடிய பண்பராய், யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே. | [9] |
|
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள் வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்- விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய் நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே. | [10] |
|
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும் சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.050  
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும்
பண் - கௌசிகம் (திருத்தலம் திருத்தண்டலைநீணெறி ; (திருத்தலம் அருள்தரு ஞானாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நீணெறிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
|
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம் கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே! | [1] |
|
இகழும் காலன் இதயத்தும், என் உளும், திகழும் சேவடியான் திருந்தும்(ம்) இடம் புகழும் பூமகளும் புணர் பூசுரர் நிகழும் தண்டலை நீணெறி; காண்மினே! | [2] |
|
பரந்த நீலப் படர் எரி வல்விடம் கரந்த கண்டத்தினான் கருதும்(ம்) இடம் சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் நிரந்த தண்டலை நீணெறி; காண்மினே! | [3] |
|
தவந்த என்பும், தவளப்பொடியுமே, உவந்த மேனியினான் உறையும்(ம்) இடம் சிவந்த பொன்னும் செழுந் தரளங்களும் நிவந்த தண்டலை நீணெறி; காண்மினே! | [4] |
|
இலங்கை வேந்தன் இருபது தோள் இற, விலங்கலில் அடர்த்தான் விரும்பும்(ம்) இடம் சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும் நிலம் கொள் தண்டலை நீணெறி; காண்மினே! | [8] |
|
கரு வரு உந்தியின் நான்முகன், கண்ணன், என்று இருவரும் தெரியா ஒருவன்(ன்) இடம் செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்- நிருபர் தண்டலை நீணெறி; காண்மினே! | [9] |
|
கலவு சீவரத்தார், கையில் உண்பவர் குலவமாட்டாக் குழகன் உறைவு இடம் சுலவு மா மதிலும், சுதை மாடமும், நிலவு தண்டலை நீணெறி; காண்மினே! | [10] |
|
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை, தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார் மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.051  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
பண் - கௌசிகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர். சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட ஓதவேண்டிய பதிகம்
|
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே! | [1] |
|
சித்தனே! திரு ஆலவாய் மேவிய அத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [2] |
|
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச் சொக்கனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே! | [3] |
|
சிட்டனே! திரு ஆலவாய் மேவிய அட்டமூர்த்தியனே! அஞ்சல்! என்று அருள் துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [4] |
|
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் அண்ணலே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எண் இலா அமணர் கொளுவும் சுடர் பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே! | [5] |
|
தஞ்சம்! என்று உன் சரண் புகுந்தேனையும், அஞ்சல்! என்று அருள், ஆலவாய் அண்ணலே! வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [6] |
|
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய் அங்கணா! அஞ்சல்! என்று அருள் செய், எனை; கங்குலார் அமண்கையர் இடும் கனல், பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே! | [7] |
|
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய் ஆத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர் பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [8] |
|
தாவினான், அயன்தான் அறியா வகை மேவினாய்! திரு ஆலவாயாய், அருள் தூ இலா அமணர் கொளுவும் சுடர் பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [9] |
|
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய அண்டனே! அஞ்சல்! என்று அருள் செய், எனை; குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [10] |
|
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால், வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும், செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.052  
வீடு அலால் அவாய் இலாஅய்,
பண் - கௌசிகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
திருப்பதிகப் பாடலில் வேந்தனும் ஓங்குக என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன் ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் வன்னியும் மத்தமும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ் வேடு வைகையின் வடகரையிலமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் ஏடகம் எனப் பெற்றது. குலச் சிறையார் அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார். சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். ஞானசம்பந்தர் பாண்டியமன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று வீடலால வாயிலாய் என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.
|
வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள் நின்கழல் பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே! காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில் கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே? | [1] |
|
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா, கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்! எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே? | [2] |
|
குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்! சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ! கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை முற்றும் நீ! புகந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே? | [3] |
|
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ! நீ முழங்கு அழல் அதிர வீசி ஆடுவாய்! அழகன் நீ! புயங்கன் நீ! மதுரன் நீ! மணாளன் நீ! மதுரை ஆலவாயிலாய்! சதுரன் நீ! சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே! | [4] |
|
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்! பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே, நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும், சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே. | [5] |
|
பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம் குளிர்ந்த புன்சடை பின் தயங்க ஆடுவாய்! பிஞ்ஞகா! பிறப்பு இலீ! கொன்றை அம் முடியினாய்! கூடல் ஆலவாயிலாய்! நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே. | [6] |
|
ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே! சோதி அந்தம் ஆயினாய்! சோதியுள் ஒர் சோதியாய்! கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால், ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே? | [7] |
|
கறை இலங்கு கண்டனே! கருத்து இலாக் கருங்கடல்- துறை இலங்கை மன்னனைத் தோள் அடர ஊன்றினாய்! மறை இலங்கு பாடலாய்! மதுரை ஆலவாயிலாய்! நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே. | [8] |
|
தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக, நாள்தொறும் கோவண(வ்) உடையினாய்! கூடல் ஆலவாயிலாய்! தீ வணம் மலர்மிசைத் திசைமுகனும், மாலும், நின் தூ வணம்(ம்) அளக்கிலார், துளக்கம் எய்துவார்களே | [9] |
|
தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும் போற்று இசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளா கூற்று உதைத்த தாளினாய்! கூடல் ஆலவாயிலாய்! நால்-திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே? | [10] |
|
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்- பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால், ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத் தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.053  
வானைக் காவல் வெண்மதி மல்கு
பண் - கௌசிகம் (திருத்தலம் திருவானைக்கா ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு சம்புகேசுவரர் திருவடிகள் போற்றி )
|
வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை, தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான், ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர் ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே. | [1] |
|
சேறு பட்ட தண்வயல் சென்றுசென்று, சேண் உலாவு ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் நீறு பட்ட மேனியார், நிகர் இல் பாதம் ஏத்துவார் வேறுபட்ட சிந்தையார்; விண்ணில் எண்ண வல்லரே. | [2] |
|
தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான், ஈரம் ஆய புன்சடை ஏற்ற திங்கள் சூடினான், ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை, வாரம் ஆய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே. | [3] |
|
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால்விடை, சுண்ணவெண் நீறு ஆடினான்; சூலம் ஏந்து கையினான்; அண்ணல் கண் ஓர் மூன்றினான்; ஆனைக்காவு கைதொழ எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே. | [4] |
|
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள்! ஆண்ட சீா மை கொள் கண்டன், வெய்ய தீ மாலை ஆடு காதலான், கொய்ய விண்ட நாள்மலர்க்கொன்றை துன்று சென்னி எம் ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே! | [5] |
|
நாணும் ஓர்வு, சார்வும், முன் நகையும், உட்கும், நன்மையும், பேண் உறாத செல்வமும், பேச நின்ற பெற்றியான்- ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் காணும் கண்ணு மூன்று உடைக் கறை கொள் மிடறன் அல்லனே! | [6] |
|
கூரும் மாலை, நண்பகல், கூடி வல்ல தொண்டர்கள் பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்; பாரும் விண்ணும் கைதொழ, பாயும் கங்கை செஞ்சடை ஆரம் நீரொடு ஏந்தினான்; ஆனைக்காவு சேர்மினே! | [7] |
|
பொன் அம் மல்கு தாமரைப்போது தாது வண்டு இனம் அன்னம் மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப் பன்ன வல்ல, நால்மறை பாட வல்ல, தன்மையோர் முன்ன வல்லர், மொய்கழல்; துன்ன வல்லர், விண்ணையே. | [8] |
|
ஊனொடு உண்டல் நன்று என, ஊனொடு உண்டல் தீது என, ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்; வானொடு ஒன்று சூடினான்; வாய்மை ஆக மன்னி நின்று ஆனொடு அஞ்சும் ஆடினான்; ஆனைக்காவு சேர்மினே! | [9] |
|
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும், மெய்யைப் போர்க்கும் பொய்யரும், வேதநெறியை அறிகிலார் தையல் பாகம் ஆயினான், தழல் அது உருவத்தான், எங்கள் ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே! | [10] |
|
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும், ஆழியானும், காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை, காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை வாழி ஆகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
பண் - கௌசிகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
கூன் நிமிற
|
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்! வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக! ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! | [1] |
|
அரிய காட்சியராய், தமது அங்கை சேர் எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும் கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும், பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே? | [2] |
|
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே, தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்; எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ! | [3] |
|
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா; கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார் | [4] |
|
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி; மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்! சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே | [5] |
|
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக் கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில், நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே? | [6] |
|
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே! | [7] |
|
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம் ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய, பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே! | [8] |
|
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி, நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப் போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே! | [9] |
|
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும் பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி, கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே! | [10] |
|
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும், தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப் பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில், பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே! | [11] |
|
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல், பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும், வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே! | [12] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.055  
விரை ஆர் கொன்றையினாய்! விடம்
பண் - கௌசிகம் (திருத்தலம் திருவான்மியூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
|
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே! உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [1] |
|
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்! கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்! செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [2] |
|
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே! மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே! செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் ஐயா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [3] |
|
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே! மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே! தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில் அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [4] |
|
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல் எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில் சூழ் திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும் அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [5] |
|
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்; ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும் சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும் ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [6] |
|
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும் கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்! தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [7] |
|
பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை மேயவனும், நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே! செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [9] |
|
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள் கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்! திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [10] |
|
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை, சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல், குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.117  
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
பண் - கௌசிகம் (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
|
யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா! காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா! | [1] |
|
யாகா! யாழீ! காயா! காதா! யார் ஆர் ஆ தாய் ஆயாய்! ஆயா! தார் ஆர் ஆயா! தாக ஆயா! காழீயா! கா, யா! | [2] |
|
தாவா மூவா தாசா! காழீ நாதா! நீ யாமா! மா! மா மா யாநீ! தான ஆழீ! காசா! தா! வா! மூ வாதா! | [3] |
|
நீவா வாயா! கா யாழீ! கா, வா, வான் நோ வாராமே! மேரா, வான் நோவாவா! காழீயா! காயா! வா வா, நீ! | [4] |
|
யா காலா! மேயா! காழீயா! மேதாவீ! தாய், ஆவீ! வீயாதா! வீ தாம் மே யாழீ! கா, யாம் மேல் ஆகு | [5] |
|
மேலே போகாமே, தேழீ, காலாலே கால் ஆனாயே! ஏல் நால் ஆகி ஆல் ஏலா! காழீ தே! மேகா! | [6] |
|
நீயா மானீ! ஏயா மாதா! ஏழீ! கா,நீதானே! நே தாநீ! காழீ வேதா! மாயாயே நீ, மாய் ஆநீ? | [7] |
|
நே(அ)ணவர் ஆ விழ யா (ஆ)சை இழியே! வேக (அ)தள் ஏரி! அளாய உழி கா! காழிஉளாய்! அரு இளவு ஏது அ(ஃ)கவே; ஏழ் இசை யாழ இராவணனே. | [8] |
|
காலே மேலே காண் நீ காழீ! காலே! மாலே! மேபூ பூமேல் ஏ(ய்), மாலே, காழீ! காண்! ஈ, காலே! மேலே | [9] |
|
வேரியும் ஏண் நவ காழியொயே! ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே; தேர(ர்)களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி! கா வணமே உரிவே. | [10] |
|
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி! தாய் ஏல் நன் நீயே; நன் நீள்! ஆய் உழி கா! காழி உளான் இன் நையே நினையே, தாழ் இசையா, தமிழ் ஆகரனே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.094  
அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
பண் - கௌசிகம் (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )
|
அழல் நீர் ஒழுகியனைய சடையும், உழை ஈர் உரியும், உடையான் இடம் ஆம்- கழை நீர் முத்தும் ககைக்குவையும் சுழல் நீர்ப் பொன்னி-சோற்றுத்துறையே. | [1] |
|
பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன், அமலன், இடம் ஆம்- இண்டை கொண்டு அன்பு இடை அறாத தொண்டர் பரவும்-சோற்றுத்துறையே. | [2] |
|
கோல அரவும், கொக்கின் இறகும், மாலை மதியும், வைத்தான் இடம் ஆம்- ஆலும் மயிலும், ஆடல் அளியும், சோலை தரு நீர்-சோற்றுத்துறையே. | [3] |
|
பளிக்குத்தாரை பவளவெற்பில் குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்- அளிக்கும் ஆர்த்தி, அல்லால் மதுவும் துளிக்கும் சோலை-சோற்றுத்துறையே. | [4] |
|
உதையும், கூற்றுக்கு; ஒல்கா விதிக்கு வதையும்; செய்த மைந்தன் இடம் ஆம்- திதையும் தாதும் தேனும் ஞிமிறும் துதையும் பொன்னி-சோற்றுத்துறையே. | [5] |
|
ஓதக்கடல் நஞ்சினை உண்டிட்ட பேதைப்பெருமான் பேணும் பதி ஆம்- சீதப்புனல் உண்டு எரியைக் காலும் சூதப்பொழில் சூழ்-சோற்றுத்துறையே. | [6] |
|
இறந்தார் என்பும், எருக்கும், சூடிப் புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்- சிறந்தார், சுற்றம், திரு, என்று இன்ன துறந்தார் சேரும்-சோற்றுத்துறையே. | [7] |
|
காமன் பொடியாக் கண் ஒன்று இமைத்த ஓமக் கடலார் உகந்த இடம் ஆம்- தேமென்குழலார் சேக்கை புகைத்த தூமம் விசும்பு ஆர்-சோற்றுத்துறையே. | [8] |
|
இலையால், அன்பால், ஏத்துமவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்- தலையால்-தாழும் தவத்தோர்க்கு என்றும் தொலையாச் செல்வ-சோற்றுத்துறையே. | [9] |
|
சுற்று ஆர் தரு நீர்ச் சோற்றுத்துறையுள் முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து அற்றார் அடியார் அடி நாய் ஊரன் சொல்-தான் இவை கற்றார் துன்பு இலரே. | [10] |