சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.023   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மழை ஆர் மிடறா! மழுவாள்
பண் - இந்தளம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=wUa4AnFyLkc
3.053   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானைக் காவல் வெண்மதி மல்கு
பண் - கௌசிகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=iOb0adHiqjU
3.109   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மண் அது உண்ட(அ)ரி மலரோன்
பண் - பழம்பஞ்சுரம்   (திருவானைக்கா )
Audio: https://www.youtube.com/watch?v=NrBTMMJUEkQ
5.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
பண் - திருக்குறுந்தொகை   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lVYgztMvZH8
6.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   எத் தாயர், எத் தந்தை,
பண் - திருத்தாண்டகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nIoYJV0po7E
6.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி
பண் - திருத்தாண்டகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4IjVEJV0c6Q
7.075   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மறைகள் ஆயின நான்கும், மற்று
பண் - காந்தாரம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CRFY6t5JXpA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.023   மழை ஆர் மிடறா! மழுவாள்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருவானைக்கா ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு சம்புகேசுவரர் திருவடிகள் போற்றி )
மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!
உழை ஆர் கரவா! உமையாள்கணவா!
விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம்
அழகா! எனும் ஆயிழையாள் அவளே

[1]
கொலை ஆர் கரியின்(ன்) உரி மூடியனே!
மலை ஆர் சிலையா வளைவித்தவனே!
விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!
நிலையா அருளாய்! எனும் நேரிழையே.

[2]
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்!
பாலோடு நெய் ஆடிய பால்வணனே!
வேல் ஆடு கையாய்! எம் வெண்நாவல் உளாய்!
ஆல் ஆர் நிழலாய்! எனும் ஆயிழையே.

[3]
சுறவக் கொடி கொண்டவன் நீறு அது ஆய்
உற, நெற்றி விழித்த எம் உத்தமனே!
விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே!
அறம் மிக்கது எனும் ஆயிழையே.

[4]
செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன்
அம் கண் கருணை பெரிது ஆயவனே!
வெங் கண் விடையாய்! எம் வெண்நாவல் உளாய்!
அங்கத்து அயர்வு ஆயினள், ஆயிழையே.

[5]
குன்றே அமர்வாய்! கொலை ஆர் புலியின்
தன் தோல் உடையாய்! சடையாய்! பிறையாய்!
வென்றாய், புரம்மூன்றை! வெண்நாவலுளே
நின்றாய், அருளாய்! எனும் நேரிழையே.

[6]
மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள
தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா!
விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!
அலசாமல் நல்காய்! எனும் ஆயிழையே.

[8]
திரு ஆர்தரு, நாரணன், நான்முகனும்,
அருவா, வெருவா, அழல் ஆய் நிமிர்ந்தாய்!
விரை ஆரும் வெண்நாவலுள் மேவிய எம்
அரவா! எனும் ஆயிழையாள் அவளே.

[9]
புத்தர்பலரோடு அமண்பொய்த்தவர்கள்
ஒத்த உரை சொலிவை ஓரகிலார்;
மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல் உளாய்!
அத்தா! அருளாய்! எனும் ஆயிழையே.

[10]
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை,
கண் ஆர் கமழ் காழியர்தம் தலைவன்,
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.053   வானைக் காவல் வெண்மதி மல்கு  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருவானைக்கா ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு சம்புகேசுவரர் திருவடிகள் போற்றி )
வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை,
தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்,
ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர்
ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே.

[1]
சேறு பட்ட தண்வயல் சென்றுசென்று, சேண் உலாவு
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறு பட்ட மேனியார், நிகர் இல் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார்; விண்ணில் எண்ண வல்லரே.

[2]
தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான்,
ஈரம் ஆய புன்சடை ஏற்ற திங்கள் சூடினான்,
ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை,
வாரம் ஆய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

[3]
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால்விடை,
சுண்ணவெண் நீறு ஆடினான்; சூலம் ஏந்து கையினான்;
அண்ணல் கண் ஓர் மூன்றினான்; ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே.

[4]
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள்! ஆண்ட சீா
மை கொள் கண்டன், வெய்ய தீ மாலை ஆடு காதலான்,
கொய்ய விண்ட நாள்மலர்க்கொன்றை துன்று சென்னி எம்
ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!

[5]
நாணும் ஓர்வு, சார்வும், முன் நகையும், உட்கும், நன்மையும்,
பேண் உறாத செல்வமும், பேச நின்ற பெற்றியான்-
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்று உடைக் கறை கொள் மிடறன் அல்லனே!

[6]
கூரும் மாலை, நண்பகல், கூடி வல்ல தொண்டர்கள்
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்;
பாரும் விண்ணும் கைதொழ, பாயும் கங்கை செஞ்சடை
ஆரம் நீரொடு ஏந்தினான்; ஆனைக்காவு சேர்மினே!

[7]
பொன் அம் மல்கு தாமரைப்போது தாது வண்டு இனம்
அன்னம் மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்ன வல்ல, நால்மறை பாட வல்ல, தன்மையோர்
முன்ன வல்லர், மொய்கழல்; துன்ன வல்லர், விண்ணையே.

[8]
ஊனொடு உண்டல் நன்று என, ஊனொடு உண்டல் தீது என,
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்;
வானொடு ஒன்று சூடினான்; வாய்மை ஆக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான்; ஆனைக்காவு சேர்மினே!

[9]
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்,
மெய்யைப் போர்க்கும் பொய்யரும், வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான், தழல் அது உருவத்தான், எங்கள்
ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!

[10]
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்,
ஆழியானும், காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை,
காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை
வாழி ஆகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.109   மண் அது உண்ட(அ)ரி மலரோன்  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருவானைக்கா ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணது ஓங்கிய கயிலையாரும்,
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[1]
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்;
கந்த வார்சடை உடைக் கயிலையாரும்;
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[2]
மால் அயன் தேடிய மயேந்திரரும்,
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்,
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்,
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[3]
கருடனை ஏறு அரி, அயனார், காணார்
வெருள் விடை ஏறிய மயேந்திரரும்;
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்;
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[4]
மதுசூதனன் நான்முகன் வணங்க(அ)ரியார்
மதி அது சொல்லிய மயேந்திரரும்,
கதிர்முலை புல்கிய கயிலையாரும்,
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[5]
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்,
தக்கனைத் தலை அரி தழல் உருவர்
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[6]
கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல், ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[7]
கடல் வண்ணன் நான்முகன் காண்பு அரியார்
தடவரை அரக்கனைத் தலை நெரித்தார்
விடம் அது உண்ட எம் மயேந்திரரும்;
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[8]
ஆதி, மால் அயன் அவர் காண்பு அரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்;
காதில் ஒர் குழை உடைக் கயிலையாரும்;
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே.

[9]
அறிவு இல் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்!
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்,
மறிகடலோன் அயன் தேடத் தானும்
அறிவு அரு கயிலையோன்-ஆனைக்காவே.

[10]
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்,
ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.031   கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவானைக்கா ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு சம்புகேசுவரர் திருவடிகள் போற்றி )
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்;
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்,
ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.

[1]
திருகு சிந்தையைத் தீர்த்து, செம்மை செய்து,
பருகி ஊறலை, பற்றிப் பதம் அறிந்து,
உருகி, நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே
அருகு நின்றிடும்-ஆனைக்கா அண்ணலே.

[2]
துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும், நீர்,
இன்பம் வேண்டில், இராப்பகல் ஏத்துமின்!
என் பொன், ஈசன், இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.

[3]
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார், வினை
காவாய்! என்று தம் கைதொழுவார்க்கு எலாம்
ஆவா! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.

[4]
வஞ்சம் இன்றி வணங்குமின்! வைகலும்
வெஞ்சொல் இன்றி விலகுமின்! வீடு உற
நைஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம்,
அஞ்சல்! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.

[5]
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே;
படைகள் போல் வரும், பஞ்சமா பூதங்கள்;
தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம்
அடைய நின்றிடும், ஆனைக்கா அண்ணலே.

[6]
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகு அரிப்பதன் முன்னம், கழல் அடி
தொழுது, கைகளால்-தூ மலர் தூவி நின்று,
அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.

[7]
உருளும்போது அறிவு ஒண்ணா; உலகத்தீர்!
தெருளும், சிக்கெனத் தீவினை சேராதே!
இருள் அறுத்து நின்று, ஈசன் என்பார்க்கு எலாம்
அருள் கொடுத்திடும்-ஆனைக்கா அண்ணலே.

[8]
நேசம் ஆகி நினை, மட நெஞ்சமே!
நாசம் ஆய குலநலம் சுற்றங்கள்
பாசம் அற்று, பராபர ஆனந்த
ஆசை உற்றிடும், ஆனைக்கா அண்ணலே.

[9]
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
கீதம் கின்னரம் பாட, கெழுவினான்,
பாதம் வாங்கி, பரிந்து, அருள்செய்து, அங்கு ஓர்
ஆதி ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.062   எத் தாயர், எத் தந்தை,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவானைக்கா ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு சம்புகேசுவரர் திருவடிகள் போற்றி )
எத் தாயர், எத் தந்தை, எச் சுற்றத்தார், எம் மாடு சும்மாடு? ஏவர் நல்லார்?
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை; சிறு விறகால்-தீ மூட்டிச் செல்லா நிற்பர்;
சித்து ஆய வேடத்தாய்! நீடு பொன்னித் திரு ஆனைக்கா உடைய செல்வா! என்தன்
அத்தா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[1]
ஊன் ஆகி, உயிர் ஆகி, அதனுள் நின்ற உணர்வு ஆகி, பிற அனைத்தும் நீயாய், நின்றாய்;
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து, நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்;
தேன் ஆரும் கொன்றையனே! நின்றியூராய்! திரு ஆனைக்காவில் உறை சிவனே! ஞானம்-
ஆனாய்! உன் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[2]
ஒப்பு ஆய், இவ் உலகத்தோடு ஒட்டி வாழ்வான், ஒன்று அலாத் தவத்தாரோடு உடனே நின்று,
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி, நற்று உன் திறம் மறந்து திரிவேனை, காத்து, நீ வந்து
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி, என்னை ஆண்டவனே! எழில் ஆனைக்காவா! வானோர்
அப்பா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[3]
நினைத்தவர்கள் நெஞ்சுளாய்! வஞ்சக் கள்வா! நிறை மதியம் சடை வைத்தாய்! அடையாது உன்பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய்! முன் ஆனைத் தோல் போர்த்த முதல்வா! என்றும்
கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா! கயிலாயமலையா! நின் கழலே சேர்ந்தேன்;
அனைத்து உலகும் ஆள்வானே! ஆனைக்காவா!
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[4]
இம் மாயப் பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து-
இடைச் சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம்,
கைம் மான, மனத்து உதவி, கருணை செய்து, காதல் அருள் அவை வைத்தாய்! காண நில்லாய்!
வெம் மான மதகரியின் உரிவை போர்த்த வேதியனே! தென் ஆனைக்காவுள் மேய
அம்மான்! நின் பொன் பாதம் அடையப்பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[5]
உரை ஆரும் புகழானே! ஒற்றியூராய்! கச்சி ஏகம்பனே! காரோணத்தாய்!
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார் பால் மிக்கானே! அக்கு, அரவம், ஆரம், பூண்டாய்!
திரை ஆரும் புனல் பொன்னித் தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே! வானோர்-
அரையா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[6]
மை ஆரும் மணிமிடற்றாய்! மாது ஓர் கூறாய்! மான்மறியும், மா மழுவும், அனலும், ஏந்தும்
கையானே! காலன் உடல் மாளச் செற்ற கங்காளா! முன் கோளும் விளைவும் ஆனாய்!
செய்யானே, திருமேனி! அரியாய்! தேவர்-குலக் கொழுந்தே! தென் ஆனைக்காவுள் மேய
ஐயா! உன் பொன்பாதம் அடையப்பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[7]
இலை ஆரும் சூலத்தாய்! எண் தோளானே! எவ் இடத்தும் நீ அலாது இல்லை என்று
தலை ஆரக் கும்பிடுவார் தன்மையானே! தழல் மடுத்த மா மேரு, கையில் வைத்த,
சிலையானே! திரு ஆனைக்காவுள் மேய தீஆடீ! சிறு நோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே, நின் அடியே அடையப்பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[8]
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய்! வேத- நெறியானே! எறிகடலின் நஞ்சம் உண்டாய்!
எண் ஆரும் புகழானே! உன்னை, எம்மான்! என்று   என்றே நாவினில் எப்பொழுதும் உன்னி,
கண் ஆரக் கண்டிருக்கக் களித்து, எப்போதும், கடிபொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய
அண்ணா! நின் பொன்பாதம் அடையப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[9]
கொடி ஏயும் வெள் ஏற்றாய்! கூளி பாட, குறள் பூதம் கூத்து ஆட, நீயும் ஆடி,
வடிவு ஏயும் மங்கை தனை வைத்த மைந்தா! மதில் ஆனைக்கா உளாய்! மாகாளத்தாய்!
படி ஏயும் கடல் இலங்கைக் கோமான் தன்னைப் பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து, அடைந்து, அடிமை ஆகப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.063   முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவானைக்கா ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு சம்புகேசுவரர் திருவடிகள் போற்றி )
முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை; மூவாத சிந்தையே, மனமே, வாக்கே,
தன் ஆனையாய் பண்ணி ஏறினானை; சார்தற்கு அரியானை; தாதை தன்னை;
என் ஆனைக்கன்றினை; என் ஈசன் தன்னை; எறி நீர்த் திரை உகளும் காவிரீ சூழ்
தென் ஆனைக்காவானை; தேனை; பாலை;   செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

[1]
மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வளர் மதி அம் சடையானை, மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை, இறப்பு இலியை, பிறப்பு இலானை, இமையவர் தம் பெருமானை, உமையாள் அஞ்சக்
கருந் தான-மதகளிற்றின் உரி போர்த்தானை, கன மழுவாள் படையானை, பலி கொண்டு ஊர் ஊர்
திரிந்தானை, திரு ஆனைக்கா உளானை,   செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

[2]
முற்றாத வெண்திங்கள் கண்ணியானை, முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை, பல் உயிர்க்கும் துணை ஆனானை, ஓங்காரத்து உள்பொருளை, உலகம் எல்லாம்
பெற்றானை, பின் இறக்கம் செய்வான் தன்னை, பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

[3]
கார் ஆரும் கறை மிடற்று எம் பெருமான் தன்னை, காதில் வெண் குழையானை, கமழ் பூங்கொன்றைத்-
தாரானை, புலி அதளின் ஆடையானை, தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞானப்
பேரானை, மணி ஆரம் மார்பினானை, பிஞ்ஞகனை, தெய்வ நால்மறைகள் பூண்ட
தேரானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

[4]
பொய் ஏதும் இல்லாத மெய்யன் தன்னை, புண்ணியனை, நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை, செய் தவத்தின் மிக்கான் தன்னை, ஏறு அமரும் பெருமானை, இடம் மான் ஏந்து
கையானை, கங்காள வேடத்தானை, கட்டங்கக் கொடியானை, கனல் போல் மேனிச்
செய்யானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

[5]
கலையானை, பரசு தர பாணியானை, கன வயிரத்திரளானை, மணி மாணிக்க-
மலையானை, என் தலையின் உச்சியானை, வார்தரு புன்சடையானை, மயானம் மன்னும்
நிலையானை, வரி அரவு நாணாக் கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேருச்-
சிலையானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

[6]
ஆதியனை, எறி மணியின் ஓசையானை, அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க
சோதியனை, தூ மறையின் பொருளான் தன்னை,
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை தொல்-நூல் பூண்ட
வேதியனை, அறம் உரைத்த பட்டன் தன்னை, விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

[7]
மகிழ்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானை, பூத கணப்படையானை, புறங்காட்டு ஆடல்
உகந்தானை, பிச்சையே இச்சிப்பானை, ஒண் பவளத்திரளை, என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானை, திரு ஆனைக்கா உளானை, செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

[8]
நசையானை; நால்வேதத்து அப்பாலானை; நல்குரவும், தீப்பிணி நோய், காப்பான் தன்னை;
இசையானை; எண் இறந்த குணத்தான் தன்னை; இடை மருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின்
மிசையானை; விரிகடலும், மண்ணும், விண்ணும், மிகு தீயும், புனல், எறி காற்று, ஆகி எட்டுத்-
திசையானை; திரு ஆனைக்கா உளானை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

[9]
பார்த்தானை, காமன் உடல் பொடிஆய் வீழ; பண்டு அயன், மால், இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை; செந்தழல் போல் உருவினானை; தேவர்கள்   தம் பெருமானை; திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து, அவன் தன் இடர் அப்போதே
தீர்த்தானை; திரு ஆனைக்கா உளானை; செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.075   மறைகள் ஆயின நான்கும், மற்று  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவானைக்கா ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு சம்புகேசுவரர் திருவடிகள் போற்றி )
மறைகள் ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாத்-
துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும், ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும்,
இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.

[1]
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ, வஞ்சகர்கள் கூடி,
தங்கள் மேல் அடராமை, உண்! என, உண்டு இருள் கண்டன்;
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும்,
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆள் உடையாரே.

[2]
நீல வண்டு அறை கொன்றை, நேர் இழை மங்கை, ஒர் திங்கள்,
சால வாள் அரவங்கள், தங்கிய செஞ்சடை எந்தை;
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.

[3]
தந்தை தாய், உலகுக்கு; ஓர் தத்துவன்; மெய்த் தவத்தோர்க்கு;
பந்தம் ஆயின பெருமான்; பரிசு உடையவர் திரு அடிகள்;
அம் தண் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.

[4]
கணை செந்தீ, அரவம் நாண், கல் வளையும் சிலை, ஆகத்
துணை செய் மும் மதில் மூன்றும் சுட்டவனே, உலகு உய்ய;
அணையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
இணை கொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.

[5]
விண்ணின் மா மதி சூடி; விலை இலி கலன் அணி விமலன்;
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன்; பசு உகந்து ஏறி;
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆள் உடையாரே.

[6]
தாரம் ஆகிய பொன்னித் தண்துறையும் ஆடி விழுத்தும்
நீரில் நின்று, அடி போற்றி, நின்மலா, கொள்! என ஆங்கே
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆள் உடையாரே.

[7]
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி, புலி அதள், உடையானை;
விரை கொள் கொன்றையினானை, விரி சடை மேல், பிறையானை;
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே.

[8]
வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து;
கலங்கக் காலனைக் காலால், காமனைக் கண், சிவப்பானை;
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.

[9]
ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின்
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார், போய்,
ஏழுமா பிறப்பு அற்று(வ்) எம்மையும் ஆள் உடையாரே.

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 30 Dec 2025 15:34:56 +0000