சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறை ஆர் புனலும் மா
பண் - தக்கேசி   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bjjRLiqCXrk
3.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மாது அமர் மேனியன் ஆகி,
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=1Y-GlqGJ0p8
6.018   திருநாவுக்கரசர்   தேவாரம்   வடி ஏறு திரிசூலம் தோன்றும்
பண் - திருத்தாண்டகம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CSi8Ue29CLI
7.011   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திரு உடையார், திருமால் அயனாலும்
பண் - இந்தளம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=e-2ELLMn29s
9.014   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருப்பூவணம்
பண் -   (திருப்பூவணம் )
Audio: https://www.youtube.com/watch?v=6QBBq14pKL8
Audio: https://www.youtube.com/watch?v=Ud-ZNyN5-HE
Audio: https://www.youtube.com/watch?v=ZQv-CQsO9nw

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.064   அறை ஆர் புனலும் மா  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருப்பூவணம் ; (திருத்தலம் அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி )
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்
குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்,
திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே.

[1]
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து, மாமலையான் மடந்தை
ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர்
கரு ஆர் சாலி ஆலை மல்கி, கழல் மன்னர் காத்து அளித்த
திருவால் மலிந்த சேடர் வாழும் தென்திருப்பூவணமே.

[2]
போர் ஆர் மதமா உரிவை போர்த்து, பொடி அணி மேனியனாய்,
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்ணுதல், விண்ணவன், ஊர்
பார் ஆர் வைகைப் புனல் வாய் பரப்பி, பல்மணி பொன் கொழித்து,
சீர் ஆர் வாரி சேர நின்ற தென்திருப்பூவணமே.

[3]
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன்,
கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன், இடம் ஆம்
படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ,
செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.

[4]
கூர் ஆர் வாளி சிலையில் கோத்துக் கொடி மதில் கூட்டு அழித்த
பார் ஆர் வில்லி, மெல்லியலாள் ஓர் பால் மகிழ்ந்தான், இடம் ஆம்
ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப,
தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே.

[5]
நன்று தீது என்று ஒன்று இலாத நால்மறையோன், கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான், இடம் ஆம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே.

[6]
பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம் போற்று இசைப்ப,
மெய் வாய் மேனி நீறு பூசி, ஏறு உகந்தான் இடம் ஆம்
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல் ஓவாத் தென் திருப்பூவணமே.

[7]
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து,
கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்
பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து,
ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.

[8]
பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும்,
கையால் தொழுது கழல்கள் போற்ற, கனல் எரி ஆனவன் ஊர்
மை ஆர் பொழிலின் வண்டு பாட, வைகை மணி கொழித்து,
செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென்திருப்பூவணமே.

[9]
அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும், அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து, அயலே
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென்திருப்பூவணமே.

[10]
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென்திருப்பூவணத்துப்
பெண் ஆர் மேனி எம் இறையை, பேர் இயல் இன்தமிழால்,
நண்ணார் உட்கக் காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.020   மாது அமர் மேனியன் ஆகி,  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருப்பூவணம் ; (திருத்தலம் அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி )
மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே.

[1]
வான் அணி மதி புல்கு சென்னி, வண்டொடு
தேன் அணி பொழில்-திருப் பூவணத்து உறை,
ஆன நல் அருமறை அங்கம் ஓதிய,
ஞானனை அடி தொழ, நன்மை ஆகுமே.

[2]
வெந்துயர், உறு பிணி, வினைகள், தீர்வது ஓர்
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை,
அந்தி வெண்பிறையினோடு ஆறு சூடிய,
நந்தியை அடி தொழ, நன்மை ஆகுமே.

[3]
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடிப்
பூசனை, பொழில் திகழ் பூவணத்து உறை
ஈசனை, மலர் புனைந்து ஏத்துவார் வினை
நாசனை, அடி தொழ, நன்மை ஆகுமே.

[4]
குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை,
பொருந்திய பொழில்-திருப் பூவணத்து உறை,
அருந் திறல் அவுணர்தம் அரணம் மூன்று எய்த,
பெருந்தகை அடி தொழ, பீடை இல்லையே.

[5]
வெறி கமழ் புன்னை, பொன்ஞாழல், விம்மிய
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை
கிறிபடும் உடையினன், கேடு இல் கொள்கையன்,
நறு மலர் அடி தொழ, நன்மை ஆகுமே.

[6]
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்,
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை
மறை மல்கு பாடலன், மாது ஒர் கூறினன்,
அறை மல்கு கழல் தொழ, அல்லல் இல்லையே.

[7]
வரை தனை எடுத்த வல் அரக்கன் நீள
விரல்தனில் அடர்த்தவன், வெள்ளை நீற்றினன்,
பொரு புனல் புடை அணி பூவணம் தனைப்
பரவிய அடியவர்க்கு இல்லை, பாவமே.

[8]
நீர் மல்கு மலர் உறைவானும், மாலும் ஆய்,
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்;
போர் மல்கு மழுவினன் மேய பூவணம்,
ஏர் மல்கு மலர் புனைந்து, ஏத்தல் இன்பமே.

[9]
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்,
குண்டரும், குணம் அல பேசும் கோலத்தர்;
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே.

[10]
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
அண்ணலை அடி தொழுது, அம் தண் காழியுள
நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொல, பறையும், பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.018   வடி ஏறு திரிசூலம் தோன்றும்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருப்பூவணம் ; (திருத்தலம் அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி )
வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்;
வளர்  சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;
கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; 
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்;
இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்;
எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்  திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[1]
ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்;
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்;
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்;
ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்;
செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த
பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[2]
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும்
கவின்  மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; 
சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்;
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; 
ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்;
பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[3]
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; 
பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்;
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; 
நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்;
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; 
ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்;
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[4]
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், 
மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்;
இருங்கடல்  நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்;
கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை
ஆயிரம்  ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும்.
புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[5]
பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட
பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்;
சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்ன
திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்;
ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன்
உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று,
போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[6]
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;
சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்;
மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்;
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்;
துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் 
தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்;
பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[7]
செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;
திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்;
நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்;
மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;
பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[8]
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்;
அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்-
மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்;
மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத்
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்;
செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[9]
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி,அன்று,
தன்  முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று,
பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்;
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும்
குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;
பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்-
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[10]
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ் உரு  ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்;
வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை 
மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்;
நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை
நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்;
போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.011   திரு உடையார், திருமால் அயனாலும்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருப்பூவணம் ; (திருத்தலம் அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி )
திரு உடையார், திருமால் அயனாலும்
உரு உடையார், உமையாளை ஒர்பாகம்
பரிவு உடையார், அடைவார் வினை தீர்க்கும்
புரிவு உடையார், உறை பூவணம் ஈதோ! .

[1]
எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும்,
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்;
பண் இசை ஆர் மொழியார் பலர் பாடப்
புண்ணியனார்; உறை பூவணம் ஈதோ! .

[2]
தெள்ளிய பேய்பல தம் அவற்றொடு
நள் இருள் நட்டம் அது ஆடல் நவின்றோர்,
புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும்
புள்ளுவனார், உறை பூவணம் ஈதோ! .

[3]
நிலன் உடை மான்மறி கையது; தெய்வக்
கனல் உடை மா மழு ஏந்தி, ஓர் கையில்
அனல் உடையார்; அழகு ஆர்தரு சென்னிப்
புனல் உடையார்; உறை பூவணம் ஈதோ!.

[4]
நடை உடை நல் எருது ஏறுவர்; நல்லார்
கடை கடைதோறு, இடுமின், பலி! என்பார்;
துடி இடை நல் மடவாளொடு மார்பில்
பொடி அணிவார்; உறை பூவணம் ஈதோ! .

[5]
மின் அனையாள் திருமேனி விளங்க ஒர்
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன்,
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய
பொன் அனையான், உறை பூவணம் ஈதோ! .

[6]
மிக்கு இறை ஏயவன் துன் மதியாய் விட,
நக்கு இறையே விரலால் இற ஊன்றி;
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம்
புக்கு உறைவான்; உறை பூவணம் ஈதோ! .

[7]
சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம்
ஆர இருப்பு இடமா உறைவான் தனை
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே .

[8]

Back to Top
கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
9.014   கருவூர்த் தேவர் - திருப்பூவணம்  
பண் -   (திருத்தலம் திருப்பூவணம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
   சிறியனுக்(கு) இனியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
   பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி
   வரைவளங் கவர்ந்திழி வைகைப்
பொருதிரை மருங்கோங்(கு) ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[1]
பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர்
   பன்னெடுங் காலம்நிற் காண்பான்
ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த
   எளிமையை என்றும் நான் மறக்கேன்
தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத்
   தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்
பூம்பணைச் சோலை ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[2]
கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில்
   கையினிற் கட்டிய கயிற்றால்
இருதலை ஒருநா இயங்கவந்(து) ஒருநாள்
   இருந்திடாய் எங்கள்கண் முகப்பே;
விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்
   வேட்கையின் வீழ்ந்தபோது அவிழ்ந்த
புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[3]
கண்ணியல் மணியின் சூழல்புக்(கு) அங்கே
   கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
   நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்
   வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[4]
கடுவினைப் பாசக் கடல்கடந்து ஐவர்
   கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியினை இரண்டும் அடையுமா(று) அடைந்தேன்
   அருள் செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத்(து) இரவிருள் கிழிக்க
   நிலைவிளக்(கு) அலகில்சா லேகம்
புடைகிடந்(து) இலங்கும் ஆவண வீதிப்
   பூவணங் கோயில் கொண் டாயே.
[5]
செம்மனக் கிழவோர் அன்புதா என்றுன்
   சேவடி பார்த்திருந்(து) அலச
எம்மனம் குடிகொண் டிருப்பதற்(கு) யானார்
   என்னுடை அடிமைதான் யாதே
அம்மனம் குளிர்நாட் பலிக்கெழுந் தருள
   அரிவையர் அவிழ்குழல் கரும்பு
பொம்மென முரலும் ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
[6]
சொன்னவில் முறைநான்(கு) ஆரணம் உணராச்
   சூழல்புக்(கு) ஒளித்தநீ இன்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
   கருணையிற் பெரியதொன் றுளதே
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
   விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
   பூவணங் கோயில்கொண் டாயே.
 
[7]
இப்பாடல் கிடைக்கவில்லை.
[8]
இப்பாடல் கிடைக்கவில்லை.
[9]
பூவணங் கோயில் கொண்டெனை ஆண்ட
   புனிதனை வனிதைபா கனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
   குழகனை அழகெலாம் நிறைந்த
தீவணன் தன்னைச் செழுமறை தெரியும்
   திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
   பரமனது உருவமா குவரே.
   
[10]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D