நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த, நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள், திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே.
|
1
|
விடை உடை அப்பன்; ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்;
சடை இடை வெள் எருக்கமலர், கங்கை, திங்கள், தக வைத்த சோதி; பதிதான்
மடை இடை அன்னம் எங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும், வயல்சூழ்,
கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற, கொச்சைவயமே.
|
2
|
பட அரவு ஆடு முன் கை உடையான், இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்,
இடம் உடை வெண் தலைக் கை பலி கொள்ளும் இன்பன், இடம் ஆய ஏர் கொள் பதிதான்
நடம் இட மஞ்ஞை, வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை, கோலு கனகக்
குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது, கொச்சைவயமே.
|
3
|
எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற சிந்தை முடுகி,
பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய, வாளை குழுமிக்
குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே.
|
4
|
பனி வளர் மாமலைக்கு மருகன், குபேரனொடு தோழமைக் கொள் பகவன்,
இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன்(ன்), இடம்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்கு, மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி,
குனிமதி மூடி, நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே.
|
5
|
Go to top |
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான், நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன், நலமா இருந்த நகர்தான்
கலி கெட அந்தணாளர், கலை மேவு சிந்தை உடையார், நிறைந்து வளர,
பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீஈடு வரை மேவு கொச்சைவயமே.
|
6
|
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய,
பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான்
இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும் ஊசல் அன்ன கமுகின்
குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி தேடு கொச்சைவயமே.
|
8
|
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது உண்ட மாலும், இகலி,
கண்டிட ஒண்ணும் என்று கிளறி, பறந்தும், அறியாத சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே.
|
9
|
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர், இடு சீவரத்தின் உடையார்,
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர,
செய்யினில் நீலம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே.
|
10
|
Go to top |
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா இருப்பது அறிவே.
|
11
|