திருவாரூர் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி வன்றொண்டர் சங்கிலியாரோடு மகிழ்ந்துறையும் அந்நாளில் தென்றற் காற்றுத் திருவொற்றியூரில் வந்து உலாவிற்று. தென்றல் வீசக் கண்டதும் திருவாரூரில் தியாகேசப் பெருமான் வசந்த காலத்து எழுந்தருளிவரும் காட்சியும் அக்காட்சியைக் கண்டு பரவையார் ஆடிப்பாடி மகிழ்வதும் சுந்தரர் தம் எண்ணத்திரையில் உலா வந்தன. புற்றிடங் கொண்டாரையும் தம்மை விரும்பும் அடியார்களையும் மறந்திருந்தேனே என்று மனமயங்கி, ஆரூர்ப்பெருமானை எண்ணிப் பிரிவாற்றாமையினால், பத்திமையும் அடிமையையும் என்று திருப்பதிகம் தொடங்கி, எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனை என்ற குறிப்புடன் பதிகம் பாடினார்.
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன் பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தேன்; போய்த் தொழுவேன்; முத்தனை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன் எத்தனை நாள் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆகச் செவ்வணம் ஆம் திரு நயனம் விழி செய்த சிவமூர்த்தி, மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை, எவ் வணம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
சங்கு அலக்கும் தடங்கடல் வாய் விடம் சுட வந்து அமரர் தொழ, அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை, இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
இங்ஙனம் வந்து இடர்ப் பிறவிப் பிறந்து அயர்வேன்; அயராமே அங்ஙனம் வந்து எனை ஆண்ட அரு மருந்து, என் ஆரமுதை, வெங்கனல் மா மேனியனை, மான் மருவும் கையானை, எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
செப்ப(அ)ரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய அப் பெரிய திருவினையே, அறியாதே அரு வினையேன்- ஒப்பு அரிய குணத்தானை, இணை இலியை, அணைவு இன்றி எப் பரிசு பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
வல்-நாகம் நாண், வரை வில், அங்கி கணை, அரி பகழி, தன் ஆகம் உற வாங்கிப் புரம் எரித்த தன்மையனை, முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து என் ஆகப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
வன் சயம் ஆய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி தனை, மின் செயும் வார்சடையானை, விடையானை, அடைவு இன்றி என் செய நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
முன் நெறி வானவர் கூடித் தொழுது ஏத்தும் முழு முதலை, அந் நெறியை, அமரர் தொழும் நாயகனை, அடியார்கள் செந் நெறியை, தேவர் குலக் கொழுந்தை, மறந்து இங்ஙனம் நான் என் அறிவான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
கற்று உள வான் கனி ஆய கண்ணுதலை, கருத்து ஆர உற்று உளன் ஆம் ஒருவனை, முன் இருவர் நினைந்து இனிது ஏத்தப்- பெற்றுளன் ஆம் பெருமையனை, பெரிது அடியேன் கை அகன்றிட்டு எற்று உளனாய்ப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
ஏழ் இசை ஆய், இசைப் பயன் ஆய், இன் அமுது ஆய், என்னுடைய தோழனும் ஆய், யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி, மாழை ஒண் கண் பரவையைத் தந்து ஆண்டானை, மதி இல்லா ஏழையேன் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
வங்கம் மலி கடல் நஞ்சை, வானவர்கள் தாம் உய்ய, நுங்கி, அமுது அவர்க்கு அருளி, நொய்யேனைப் பொருள் படுத்துச் சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை, சழக்கனேன் எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
பேர் ஊரும் மதகரியின் உரியானை, பெரியவர் தம் சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன், அடியே திறம் விரும்பி ஆரூரன்-அடித்தொண்டன், அடியன்-சொல் அகலிடத்தில் ஊர் ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே.
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai song author %E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D paadal name %E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D pathigam no 7.051