சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.170   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்


Add audio link Add Audio
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும்புனல் நீத்தம்
மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக்
குலத்தி னோங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித்
தலத்தின் மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர்.

1


இந்நிலவுலகில் அகன்று மிகப் பரந்து ஓங்கியதாய்ச் சிறந்து எழுகின்ற பெரும் பெருக்குடைய தன் நீரானது, மலர்கள் நிறைந்த குளங்களிலும், பெருகிய நிலமாய வயல்களிலும் சென்று வளம் பெருக்கும் காவிரி ஆற்றின் வளஞ்சிறந்த நல்ல சோழ நாட்டின் கண், குலத்தில் சிறந்தவையாயும் குறைவு ஏதும் இலாத நிறைவுடையவாயும் விளங்கும் குடிகள் நிறைந்திருத்தலாய மேம்பட்ட நலம் சிறந்தது பெரிய திருத்தலையூர் என்னும் ஊராகும்.
*** திருத்தலையூர் - இது மயிலாடுதுறையிலிருந்து பேரளத் திற்குப் பேருந்தில் செல்லும் வழியில் உள்ள கொல்லுமாங்குடிக்குக் கிழக்கில் உள்ளது. உருத்திரபசுபதியார் திருவுருத்திரம் எண்ணிய திருக்குளமும் இவ்வூரில் உள்ளது. பணை - பெருமை. 'பணையே பிழைத் தல் பெருப்பும் ஆகும்' (தொல். உரி-41) என்னும் தொல்காப்பியமும்.

வான்அ ளிப்பன மறையவர் வேள்வியின் வளர்தீ
தேன்அ ளிப்பன நறுமலர் செறிசெழுஞ் சோலை
ஆன்அ ளிப்பன அஞ்சுகந் தாடுவார்க் கவ்வூர்
தான்அ ளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்.

2


இப்பதியில் வாழும் அந்தணர் வளர்த்திடும் வேள்வித் தீ, மழையைத் தருவன. நறுமணமுடைய மலர்கள் நிறைந்த செழுஞ் சோலைகள், தேனைக் கொடுப்பன. ஆனினங்கள், மகிழ்ந்து திருமுழுக்குக் கொள்ளும் சிவபெருமானுக்குத் தம் வழிப் பெறத் தரும் ஐம்பொருள்களையும் தருவன. அவ்வூர், அறத்தையும் சால்பையும் அளிக்கின்றன.
குறிப்புரை:

அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.

3


அருள் நிரம்பிய அப்பெருநகரில், அரிய மறைப் பொருளையுணர்ந்த உயர்ந்த மறையவர் குலத்தினில் தோன்றிய தூய வாழ்வுடையார் ஒருவர்; அவர் சிவந்த கண்களையுடைய ஆனேற்றில் இவர்ந்தருள்பவரும், செழித்த பொன்மலையான இமயத்தில் பூங் கொடி போலும் வடிவுடைய பார்வதியம்மையாரை ஒரு கூற்றில் உடையவருமான சிவபெருமானுக்குத் தொண்டு புரியும் தன்மை உடைய பசுபதியார் என்னும் பெயருடையவர்.
குறிப்புரை: துங்கம் - உயர்வு

ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு
மாய னார்அறி யாமலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சின ராகிஅத் தொழில்தலை நின்றார்.

4


அத்தகைய நாயனார், அரிய மறைப் பொருளாய உருத்திர மந்திரத்தைக் கொண்டு, திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராச் சேவடியைப் போற்றிடும் தூயதான அன்புடன், இடையறாது அவ்வுருத்திர மந்திரத்தை எண்ணுதலையே விரும்பிய நெஞ்சினராகி, அதனையே ஓதுகின்ற பணியில் தலை நின்றார்.

குறிப்புரை: ருத் - துன்பம்: திரன் - நீக்குபவன். எனவே உயிர்கட் குற்ற துன்பத்தை நீக்குபவன் உருத்திரன் என்பது விளங்கும். மும்மூர்த் திகளுள் உருத்திரர் ஒருவராயினும், ஈண்டு அப்பெயர் சிவபெரு மானையே குறிக்கின்றது. அப்பெருமானைப் பற்றிய மந்திரமே திரு வுருத்திரமாகும். மறைகள் நான்கேனும், அதர்வணத்தை நீக்கி மூன் றென்றலே மரபு. அம்மும்மறைகளுள் யசுர் நடுவணதாகும். இது ஏழு காண்டங்கள் உடையது. இவற்றுள் நடுவணதாய பதினோராவது அநுவாகத்தின் நடுவணதாய ஆறாவது சூக்தத்தில் விளங்குவது இவ் வுருத்திரமந்திரமாகும். இதன் நடுவுள் விளங்குவதே சிவாயநம எனும் திருவைந்தெழுத்தாகும். இதன் நடுவாக இருப்பது 'சிவ' என்ப தாகும். இதுபோன்ற நம் தமிழ்மறையும் தேவாரமும் திருவாசகமு மாகும். இவற்றையருளிய ஆசிரியன்மார்கள் நால்வராவர். இவர்கள் அருளியனவும் நான்மறை எனப்படும். இவற்றுள் தேவாரம் மும் மறைகள் எனப்படும். இவற்றின் இடையில் உள்ளது திருக் குறுந்தொகையாகும். இதன் நடுவில் இருக்கும் 51ஆவது திருப்பதிகம் திருப்பாலைத் துறைப் பதிகமாகும். இதன் நடுவுள் இருக்கும் ஆறாவது திருப்பாடல்,
விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத் துறையரே. -தி. 5 ப. 51 பா. 6
என்பதாகும். இவ்வரிய மந்திரத்தை உள்ளடக்கிய திருவுருத் திரத்தையே இவர் வழுத்தி வருவாராயினர். இதுபற்றியே உருத்திர பசுபதியார் எனவும் அழைக்கப் பெற்றார்.

கரையில் கம்பலை புள்ளொலி கறங்கிட மருங்கு
பிரச மென்சுரும் பறைந்திடக் கருவரால் பிறழும்
நிரைநெ டுங்கயல் நீரிடை நெருப்பெழுந் தனைய
விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையுள் மேவி.

5


பறவைகளின் ஒலிகள் அளவற்று ஒலிக்க, அருகே மெல்லிய ஓசையுடன் தேன் உண்ணும் வண்டினம் பாட, கரிய வரால் மீன்கள் வரிசை பெறச் செல்கின்ற கயல் மீன்களுடன் பிறழ்ந்திட, நீரிடை நெருப்பு எழுந்தால் போலும் நறுமணம் நிகழும் மென்மை யான செந்தாமரை மலர்களையுடைய குளத்துள் இறங்கிச் சென்று.

குறிப்புரை: நீரிடை நெருப்பெழுந்தனைய செங்கமலம், நிறப் பண்பால் உவமையாயிற்று. 'நீத்துடை நெடுங்கயம், தீப்பட மலர்ந்த, கடவுள் ஒண்பூ அடைதல் ஓம்பி' (பெரும்பாண் - 289, 290 ),(தி. 1 பதி. 82 பா. 6) 'சேலாகிய பொய்கைச் செழுநீர்க் கமலங்கள், மேலால் எரிகாட்டும் வீழிமிழலையே' என வருவனவும் காண்க.

Go to top
தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய
உள்ளு றப்புக்கு நின்றுகை யுச்சிமேல் குவித்துத்
தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார்
கொள்ளு மன்பினி லுருத்திரங் குறிப்பொடு பயின்றார்.

6


தெளிந்த குளிர்ந்த குளத்தின் நீரில், கழுத்தின் அளவாயிடும் ஆழத்தில் நின்று, கைகளை உச்சிமேற்குவித்து, வெண் திரைகளையுடைய கங்கை நீர் பொங்கி நிறைந்த சடையையுடைய சிவபெருமானை அளவற்ற உருத்திர மந்திரங்களை எண்ணிய குறிப் புடன் ஓதி நின்றார்.
*** இடுப்பளவு நீரில் நிற்றலே இயல்புக்கு மாறாயதாம். இதனினும் மேலாகக் கழுத்தளவு நீரில் நின்று இந்நாயனார் எண்ணி யது யோக நிலையின் சித்தியாலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

அரும றைப்பய னாகிய உருத்திர மதனை
வருமு றைப்பெரும் பகலும்எல் லியும்வழு வாமே
திரும லர்ப்பொகுட் டிருந்தவன் அனையவர் சிலநாள்
ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்.

7


அரிய மறைகளின் பயனாய உருத்திர மந்திரத்தை விதிப்படி பகலும் இரவும் தவறுதல் இலாது, திருவுடைய தாமரை மலரில் இருக்கும் நான்முகனை ஒத்த அப்பெரியவர் சில நாள்கள் ஒருமையுணர்வுடன் எண்ணிட, அதனை உமையம்மையை ஒரு கூற்றில் வைத்து மகிழ்ந்திருக்கும் சிவபெருமான் திருவுளம்பற்றி மகிழ்ந்தார்.

குறிப்புரை: ஷ்ரீருத்ரம் எனவட மொழியில் அழைக்கப் பெறுவது, தமிழில் திருவுருத்திரம் என அழைக்கப் பெறுவதாயிற்று.

காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையுங் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்யமற் றவர்தாம்
தீதி லாநிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.

8


தம்மீது பெருங்காதலுடைய அன்பர் பசுபதியாரின் அரிய தவத்தின் பெருமையையும், தன்னுட் கலந்த மறையாய உருத்திரம் ஓதிடும் நியதியின் வளர்ச்சியையும் திருவுளம் பற்றிய, முதற்பொருளான சிவபெருமான், விரும்பி அருள் செய்ய, அந் நாயனாரும் தீதிலாத சிவபுரியின் எல்லையைச் சேர்ந்தார்.

குறிப்புரை: அமர்ந்து - விரும்பி: 'அமர்தல்மேவல்' (தொல். உரி 82).

நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தன ரவர்க்குப்
பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராங்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.

9


நீண்ட அன்பினால் உருத்திர மந்திரம் ஓதிய நிலை யால் இறைவனின் திருவடிகளை அணுக அணைந்தனர். அந்நிலை யில், இதுகாறும் அவர் உருத்திர மந்திரத்தை நாளும் தவறாது ஓதி வந்தமையால், உலகம் புகழ அவருக்கு உருத்திர பசுபதியார் எனும் பெயரும் உளதாயிற்று.

குறிப்புரை:

அயில்கொள் முக்குடு மிப்படை யார்மருங் கருளால்
பயில்உ ருத்திர பசுபதி யார்திறம் பரசி
எயில்உ டைத்தில்லை யெல்லையில் நாளைப்போ வாராம்
செயல்உ டைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்.

10


கூர்மை பொருந்திய முத்தலைச் சூலப்படையை யுடைய சிவபெருமானின் அருகே, அருளால் விளங்கி வாழ்கின்ற உருத்திரபசுபதியார் தம் தொண்டின் சீர்மையை வணங்கி, இப்பால் ஒளியுடைய மதில் சூழ்ந்த தில்லைப் பதியின் எல்லையில் 'நாளைப் போவேன்' எனச் சொல்லி வாழ்வு பெற்ற திருநாளைப் போவாரின் திறத்தினை இனி மொழிகின்றாம்.

குறிப்புரை:

Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D pathigam no 12.170