உயிர்கள் தத்தம் வினைப்பயனைத் துய்த்தற்கேற்ப எல்லாப் பொருள்களையும் தோற்றுவிக்கும் முதற்கடவுளாயும், அவற்றைக் காக்கும் காப்புக் கடவுளாயும், தன்னறிவாலும் (பசு ஞானம்) தன்னைச் சூழ்ந்துள்ள பொருள்களின் அறிவாலும் (பாச ஞானம்) அளந்து அறியப்படாததாயும், ஒளிப்பிழம்பாயும், உயிர்க் குயிராய் நின்று கருவி கரணங்களோடு கூட்டி அவற்றின் வழி உணரச் செய்யும் உணர்வாயும், தம்மால் தோற்றுவிக்கப்பட்ட அறிவுடைய னவும், அறிவற்றனவுமாய பொருள்களாயும், அவ்வப் பொருள்களி னின்றும் பிரித்தற்கு இயலாததாய் அவற்றுடன் கலந்து நிற்கும் பொரு ளாயும், உலகில் பிரித்துக் காண்டற்குரிய ஆண், பெண் என்னும் இரு வகை உயிரினங்களிலும் இயைந்து நிற்றல் பற்றி அவ்வாண், பெண் வடிவினதாயும் உள்ள இறை, உயிர்கட்கு எஞ்ஞான்றும் தன் குணங் களாலும் செயல்களாலும் அறிதற்குரிய அறிவினைக் கற்பித்து, தில்லை மன்றிலே நடனம் செய்கின்ற ஆடல் திறனுக்கு வணக்கம் செலுத்து கின்றேன்.
குறிப்புரை: ஆதி - என்பது படைத்தலையும், நடுவு - என்பது காத்த லையும் குறித்தன. அளவு - உயிர் தன்னறிவாலும், தளையறிவானும் அளக்கும் அளவு. சோதி - ஒளிப்பிழம்பு. தோன்றிய பொருள் - தோற்றுவிக்கப்பட்ட பொருள்: 'தோற்றிய திதியே' (சிவஞானபோ. சூ. 1) என்புழிப்போல. பேதியா ஏகமாகி - வேறுபடுத்துக் காண்டற் கியலாததாயும் அவ்வப் பொருளுமாகியும் நிற்கும் நிலை. நடுவும் ஆகி என்றமையால்- இறுதியும் ஆகி என்பதும் ஈண்டுக் கொள்ளப் படும். ஆதி - அயன். நடு - மால். அளவு - இறுதியாகிய உருத்திரன். சோதியாய் உணர்வுமாகியவன் - உயிர்களுக்கு மறைப்பாற்றலைச் செய்யும் சத்தியை உடைய மகேசுவரன். தோன்றிய பொருள் - அறி வாற்றல் தோன்றுவதற்கு இடனாகிய சாதாக்கியம். சதாசிவமூர்த்தி என்று உரைப்பாரும் உளர். திருவைந்தெழுத்தின் இடமாக நின்று ஆடும் நடனம் மூவகை யாம். அவை 1. ஊனநடனம் 2. ஞானநடனம் 3. ஆனந்த நடனம் என்பனவாம். இம்மூவகை நடனங்களும் உயிர்கட்குப் படிப்படியாக அறிவையும், அதனாலாய அநுபவத்தையும் விளக்கி நிற்கும். ஊனநடனம் - தன்னிலையில் நிற்கும் உயிர்க்கு மலஇருள் நீங்க, கருவி, கரணங்கள், உலகு ஆகியவற்றைக் கொடுக்கச் செய்யும் நடனமாகும். ஞானநடனம் - இவ்வகையில் வளர்ந்த உயிர்கட்கு ஞானத்தை வழங்குதற்குச் செய்யும் நடனமாகும். ஆனந்த நடனம் - அக்கூட்டால் உயிர் ஞானம் பெற்று அடையும் வீடு பேற்றில், அவ்வின்பத்தில் திளைக்கச் செய்வதாம். இம்மூவகை நடனங்களாலும் உயிர்கள் ஞானம் பெற்று வீடு பேறு அடையும். இவ்வுண்மைகளை இந்நடனங்கள் கற்பித்து நிற்றலின் 'போதியாநிற்கும் தில்லைப் பொதுநடம்' என்றார். இத்திறங்களை எல்லாம் உண்மை விளக்கம் என்னும் ஞான நூலால் அறியலாம். தில்லைப் பொது - தில்லை நகரில் இருக்கும் பொதுவிடம் - மன்றம்.
கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.
தன்னறிவாலும், தளையறிவாலும் கற்பிக்கப் பெறும் கற்பனைகளையெல்லாம் கடந்து நிற்கும் ஒளி வடிவாகிய இறைவன், தன் கருணையால் வடிவு கொண்டு, யாவர்க்கும் அற்புதம் விளைக்கும் திருக்கோலத்தில், சிறந்த அரிய மறைகளின் முடிவாக உள்ள உபநிடதங்கட்கும் உச்சியின் மேலாய் நிற்கும் ஞான ஒளி வடிவாய் விளங்கும் திருச்சிற்றம்பலத்துள் நிலைத்து நின்று, அழகும், மகிழ்வும், பொருந்த நடனம் செய்தருளும் பொலிவினை உடையவா கிய திருவடிகட்கு, என் வணக்கத்தைப் பன்முறையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்புரை: கற்பனை - ஒன்றைத் தாமே உருவாக்கிக் கொண்டு அதனை மேலும் கற்பித்துச் சொல்வதாம். அருமறைச்சிரம் - அரிய மறைகளின் முடிவாக நிற்கும் உபநிடதங்கள். சித்பரம் - உயிர் அறிவிற்கு மேலாக நிற்கும் ஞானப் பெருவெளி; அவ்வெளியே திருச் சிற்றம்பலம் ஆகும். சித் - அறிவு, பரம் - மேலான, வியோமம் - வெளி. உயிர்களை என்று வந்தாய் என்னும் திருக்குறிப்புடன் ஏற்றருளும் நடனம் ஆதலின் பொற்புடைய நடம் ஆயிற்று. இவ்விரு பாடல்களும் தில்லையில் நடனம் செய்கின்ற கூத்தப் பெருமானைப் பற்றியதாகும். இப்பெருமானைத் தம் உள்ளத்திருத்தி, வழிபாடு செய்யும் கடமை உணர்வுடையவராதலின், தில்லைவாழ் அந்தணர் வரலாற்றைக் கூறும் இப்பகுதியில், கூத்தப் பெருமானுக்குரிய வணக்கப் பாடல்களை முன் வைத்தார்.
போற்றிநீள் தில்லை வாழந்
தணர்திறம் புகல லுற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல
நிருத்தனுக் குரிய தொண்டாம்
பேற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால்
அடித்தவம் புரிந்து வாழ்வார்.
இவ்வகையிற் கூத்தபெருமானை வணங்கிப் பத்திமைச் செல்வம் மிக்க தில்லைவாழ் அந்தணரின் அரிய பண்பு களைச் சொல்லப் புகுகின்றேன். இவர்கள், திருநீற்றினால் நிறைந்த திருமேனியை உடைய கூத்தப் பெருமானுக்குரிய பணிவிடைத் தொழில் செய்தலாகிய பெரும்பேற்றினைப் பெற்றவர்கள். பெருமை யின் வரம்பிற்கு ஓர் எல்லையாய் இருக்கின்றவர்கள். தாம் போற்றி ஒழுகுதற்குரிய நல்லொழுக்கங்களை உடையவர்கள். அப்போதைக் கப்போது ஆர்வம் மிகும் அன்பினால் கூத்தப் பெருமானின் திருவடி மலர்களைச் சிந்தித்து வழிபடப் பெறும் தவத்தைச் செய்து வாழ்கின் றவர்கள்.
குறிப்புரை: போற்றி - வணங்கி. மேல் இரு பாடல்களிலும் கூறிய வாறு வணங்கி என்பதாம். நீள் தில்லை - நீண்ட பத்திமையால் வழிவழி யாகத் தொண்டு செய்துவரும் தில்லை. அடித்தவம் - திருவடியை நினைந்து வாழும் தவம். ஆற்றினார் - ஒழுக்கமுடையவர்கள்.
பெருகுகின்ற செல்வத்தில் சிறந்த அழகிய அணி கலன்கள், திருப்பரிவட்டம் முதலியவற்றைப் பெருமானின் திருமேனி யில் அழகுபெறச் சாத்தி, மறைமொழிகளால் போற்றிசைத்து, பின்னும் தாம் செய்தற்குரிய பணிகள் அனைத்தையும் சிறக்கச் செய்து, கூத்தப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலினுள் உள்ளாக, இத்தகைய அகம்படிமைத் தொண்டுகளைச் செய்து வருபவர்கள்.
குறிப்புரை: அகம்படித்தொண்டு - திருக்கோயிலுக்குள்ளேயும் இறைவனின் திருவடியைச் சார்ந்துள்ள இடத்தேயும் இருந்து அலகிடல், மெழுகிடல் முதலாய பணிகளையும், திருமுழுக்காட்டுதல், வழிபாடு செய்தல் முதலாய பணிகளையும் செய்துவருவதாம். அகம் படிந்து செய்யும் தொண்டு அகம்படித்தொண்டு எனலுமாம்.
வருமுறை எரிமூன் றோம்பி
மன்னுயி ரருளான் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டு
தத்துவ நெறியிற் செல்லும்
அருமறை நான்கி னோடுஆ
றங்கமும் பயின்று வல்லார்
திருநடம் புரிவார்க் காளாந்
திருவினாற் சிறந்த சீரார்.
அறத்தையே பொருளாகக் கொண்டு, அதன்வழி மெய்ப்பொருளை உணரும் உணர்வில் தலைப்பட்டு நிற்பவர்களும், என்றும் திருநடம் செய்தருளும் பெருமானார்க்கு அடித்தொண்டு புரிதலையே செல்வமாகக் கொண்டு, சிறந்து விளங்கும் மேன்மை உடையவர்களும், அரிய நான்மறைகளோடு அதன் அங்கம் ஆறை யும் பயின்றவர்களும் ஆன அவர்கள், அந்நான்மறைகளும் கூறும் விதிவழி நின்று, மூவகை அமைப்புடைய வேள்விகளையும் வளர்த்து, அதனால் உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் இறைவனின் இன்னருளில் திளைத்து வளருமாறு செய்வார்கள்.
குறிப்புரை: எரி மூன்று - நெருப்பை வளர்த்துச் செயத்தகும் மூவகை வேள்விகள். அவை ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினியம் என்பனவாம். ஆகவனீயம் - நாற்சதுரமாய் வடதிசையில் வைத்துத் தேவர்கட்கு அவி கொடுத்தற்குரியது. காருகபத்தியம் - முச்சதுரமாய் அதன் தெற்கில் அமைக்கப்படுவது. தக்கிணாக்கினி - அதன் தெற்கில் தென்புலத்தார்க்குப் பலி ஓமம் முதலியன கொடுத்தற்கு அமைப்பது. காருகபத்தியம் என்னும் வேள்வியே ஏனைய இரண்டற்கும் காரண மாய் நடுவில் வைக்கப்படுவதாம். இனி, ஆகவனீயம் - அந்தணர்கள் காடுகளில் தீயை உண்டாக்கும் கல் முதலியவைகளைக் கொண்டு அவ்வப் போது உருவாக்கிக் கொள்ளும் வேள்வித் தீ ஆகும் என்றும், காருகபத்தியம் - அந்தணர்கள் தங்கள் இல்லங்களில் வேள்விக் குண்டங்களை வளர்த்து அத்தீயை அணையாமல் பாதுகாத்து வழி வழியாகத் தொடர்ந்து செய்துவருவது என்றும், தக்கிணாக்கினி - அந்தணர்கள் தென்திசை வரும்போது கையில் கொண்டு வந்த தீயைக் கொண்டோ அல்லது ஆங்காங்கே கிடைக்கும் தீயைக் கொண்டோ செய்யும் வேள்வியாகும் என்றும் விளக்கம் கூறலும் ஒன்று. தத்துவநெறி - மெய்ப்பொருளை உணரும் உணர்வு. மறை நான்கு: இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்றே பலரும் கூறுவர். நச்சினார்க்கினியர், இவை சில்வாழ்நாள், பல்பிணிச் சிற்றறிவுடை யோர்க்குப் பிற்காலத்தே செய்யப்பட்டன என்றும், இவற்றுக்கு முன்னிருந்த நான்மறைகள் தைத்திரியம், பௌடிகம், தலவாகாரம், சாமவேதம் எனும் நான்குமே என்றும் கூறுவர். ஆறங்கமாவன: உலகியற் சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும், அவ்விரண்டையும் உடனாராய்ந்த ஐந்திரத் தொடக்கத்துள்ள வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம் பரமார்த்தம் பரமாத்திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதமும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும் செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம். 'கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை' (தி. 1 ப. 80 பா. 1) என ஞானசம்பந்தரும் தில்லைவாழந் தணரைப் போற்றி உரைப்பர்
குற்றமற்ற மறையவர் குலத்தில் தோன்றித் தம் குல ஒழுக்கத்திற்கு மாறுபடாத ஒழுக்கத்தைக் கொண்டு ஒழுகுபவர்கள், தமக்குரிய ஆறு தொழில்களையும் செய்து வருவதால் உலகில் வரும் பசி, பிணி முதலிய துன்பங்களை நீக்குபவர்கள். உயிர்கள் பெறுதற் குரிய உறுதிப் பயன்களுள் மிகச் சிறப்பாய திருநீற்றினைச் செல்வமாகப் பேணி விளங்குகின்றவர்கள். தாம் பெறத்தக்கது சிவ பெருமானிடத்துக் கொண்டு ஒழுகும் அன்பெனும் பேறேயாம் எனக் கருதி அப்பெருமானிடத்து அன்பு பெருக வாழ்கின்றவர்கள்.
குறிப்புரை: 'குலம் சுடும் கொள்கை பிழைப்பின்' (குறள், 1019) என்பர் திருவள்ளுவர். ஆதலின் தம் குலத்திற்கேற்ற ஒழுக்கமும் உடையர் என்றார். அறுதொழில் - அறுவகைத் தொழில். அவை ஓதல், ஓது வித்தல், வேட்டல். வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாம். இவற் றால் உயிர்கட்குற்ற துன்பத்தைநீக்கி வருபவர். கலி - பசி, பிணி முதலிய துன்பங்கள். இவர்கள் உறுவதும், பெறுவதும் முறையே, நீற்றின் செல்வமும் சிவன்பால் அன்பும் என்பதால், இவர்தம் உள்ள மும் தகவும் ஒருங்கு புலப்படுகின்றன.
ஞானமே முதலா நான்கும்
நவையறத் தெரிந்து மிக்கார்
தானமுந் தவமும் வல்லார்
தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார்
உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்.
ஞானம் முதலாகச் சொல்லப்பெறும் யோகம், கிரியை, சரியை ஆகிய நால்வகை நன்னெறிகளையும் குற்றமறத் தெரிந்து, அந்தப் படி நிலையில் உயர்ந்து ஞானத்தைப் பெற்றவர்கள், தானம், தவம் ஆகிய இரு பேரறங்களையும் செய்து வருதலில் வல்லவர்கள். நடுநிலைமை கோடலில் பகை, நொதுமல், நட்பு எனும் பாகுபாடின்றி, அதனைக் கடைப்பிடித்து வருபவர்கள். மேல் எதிர் கொள்ளுதற்குரிய எவ்வகைக் குறைபாடுகளும் இல்லாமல், உலகத்தவ ரெல்லாம் பெரிதும் புகழ்ந்து போற்றிவரும் மானம், பொறை ஆகிய ஈரறங்களையும் என்றும் மனத்தகத்துக் கொண்டு இல்லறத்தை என்றும் நடத்தி வருபவர்கள்.
குறிப்புரை: ''விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞான நான்கும் அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே'' -தாயுமான. பராபரக். 157 என்பர் தாயுமானார். எனவே சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றாலும் பெறத்தக்க பயன் ஞானமே என்பதும், அதுவே கனி என்பதும் விளங்குகின்றன. சரியையை முதலாக வைத்து எண்ணுவது போன்று, ஞானத்தை முதலாக வைத்து எண்ணும் மரபும் உண்டு. ''ஞானமுத னான்குமலர் நற்றிருமந் திரமாலை'' (தி. 12 பு. 30 பா. 26) ''நலம் சிறந்த ஞானயோ கக்கிரியா சரியை யெலாம்'' (தி. 12 பு. 30 பா. 28) எனச் சேக்கிழார் கூறுமாற்றால் இவ்வுண்மையை அறியலாம். 'இன்ப மும், பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந் திணை' எனத் தொல்காப்பியம் (களவு. 1) கூறும் மரபினையும் நினைவு கூர்க. தானம் - அற நெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையொடும் கொடுத்தல். தவம் - புறத்தும் (சரியை), அகத்தும் (கிரியை) வழிபாடாற்றியதன் பயனால் மனவொருமை பெற்று இறைவனை எப்பொழுதும் எண்ணி வருதல். தகுதி - நடுநிலைமை. பகுதி - பகை, நொதுமல், நட்பு ஆகிய இம்முன்றானும் கோடுதலின்றிக் கொள்ளத் தக்கது. 'தகுதி என ஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்' (குறள், 101) எனவரும் திருக்குறளை முகந்து நிற்கும் பகுதி இதுவாம். ஊனம் - குறைவு. மானம் - தன்னிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம். பொறை - காரணம் பற்றியாதல், அறியாமையானாதல் ஒருவர் தமக்குத் தீங்கு செய்தவழி, மீண்டும் அதனை அவரிடத்துச் செய்யாது பொறுத்துக் கொள்ளுதல். நவையற - ஐயம் திரிபுகள் நீங்க; தம் மனத்தின்கண் உள்ள குற்றம் நீங்க எனினும் ஆம். 'கற்க கசடற' (குறள், 391) என்புழிப்போல.
செம்மையால் தணிந்த சிந்தைத்
தெய்வவே தியர்க ளானார்
மும்மைஆ யிரவர் தாங்கள்
போற்றிட முதல்வ னாரை
இம்மையே பெற்று வாழ்வார்
இனிப்பெறும் பேறொன் றில்லார்
தம்மையே தமக்கொப் பான
நிலைமையால் தலைமை சார்ந்தார்.
செம்பொருளைச் சிந்தித்திருத்தலாகிய செம்மை யால், யாவரிடத்தும் பணிவு மிக்க பண்புள்ளம் கொண்டவர்கள். அவர்கள் மூவாயிரவர் ஆவர். தாங்கள் இம்மையிலேயே போற்றி வாழுதற்கு ஏதுவாகக் கூத்தப்பிரானை எளிவந்த அருட்கருணையாள ராகப் பெற்று வாழ்பவர்கள். இப்பெரும் பேற்றினைப் பெற்றிருப் பதால் இதற்கு மேலாயதொரு பேற்றினைப் பெற வேண்டாதவர்கள்; இவ் வகையில் தமக்குத் தாமே ஒப்பாம் நிலைமையில் தலைமை பெற்றவர்கள் தில்லைவாழந்தணர்கள் ஆவர்.
குறிப்புரை: செம்மை - திருநின்ற செம்மை. அஃதாவது செம் பொருளாய சிவத்தையே மனத்தில் கொண்டிருக்கும் தன்மை. தணிந்த சிந்தை - எல்லார்க்கும் நன்றாம் பணிதல் எனக் கொண்ட பணிவு உடைமை. தாழ்வெனும் தன்மை என்பதாம். இம்மையே பெற்று வாழ் வார் - கூத்தப் பெருமானை இடையறாது சிந்தித்திருத்தலின் அதன் பயனாகத் தாம் பெறத்தக்க பயன்கள் அனைத்தையும் இப்பிறப்பி லேயே பெற்று வாழ்பவர்கள். தில்லைப் பெருமானைக் கைதர வந்த கடவுளாகக் கொண்டிருப்பவர் என்பது கருத்து. குறைவிலா நிறை வாய பெருமானை வழிபட்டு வாழ்தலைவிடப் பெறற்கரிய பேறு பிறிதின்மையின் 'இனிப் பெறும் பேறொன்றில்லார்' என்றார். ஒன்றும் என்பதில் உள்ள உம்மை தொக்கது. தனக்குவமை இல்லாதான் தாளைச் சேர்ந்திருத்தலால், சார்ந்ததன் வண்ணமாகத் தாமும் தமக் குவமை இல்லாதாராக விளங்குபவர்கள்.
இன்றிவர் பெருமை எம்மால்
இயம்பலா மெல்லைத் தாமோ
தென்றமிழ்ப் பயனா யுள்ள
திருத்தொண்டத் தொகைமுன் பாட
அன்றுவன் றொண்டர் தம்மை
யருளிய ஆரூர் அண்ணல்
முன்திரு வாக்காற் கோத்த
முதற்பொரு ளானா ரென்றால்.
தென்தமிழின் பயனாய் விளங்குகின்ற திருத் தொண்டத் தொகையை முன்பு நம்பியாரூரர் பாடி அருளுதற்கு அரு ளாணை வழங்கியருளிய திருவாரூர்ப் பெருமான், அத்தொகையில் முதற்கண் கோக்கப்பெற்ற பொருளாக இத்தில்லைவாழ்ந்தணர்கள் அமைந்திருப்பவர் என்றால், இன்று இவர்கள் பெருமை எம்மால் சொல்லப்பெறும் எல்லையில் படுவதாமோ? படாது என்பது கருத்து.
குறிப்புரை: திருவாரூர்ப் பெருமானே முதற்கண் கோத்த பொரு ளானார் என்றால், இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத் தாமோ எனக் கூட்டுக. தமிழின் பயன், வாலறிவன் நற்றாள் தொழலும், அவ்வாறு தொழுது உயர்ந்தார்க்கு ஆளாதலுமே ஆம். அதனைத் திருத்தொண்டத் தொகை அழகும் இனிமையும் கமழும் சொற்களாலும், ஆழ்ந்த பொருள் நலத்தாலும் கூறியிருத்தலின் 'தென்தமிழ்ப் பயனாயுள்ள திருத்தொண்டத் தொகை' என்றார். தென் - அழகு. திருவாரூர்ப் பெருமான், தம்மிடத்து வணங்கி மகிழ்ந்த நம்பியாரூரர்க்கு அடியவர் பெருமையைக் கூற, அவரும் மகிழ்வு கொள்ள, இறைவன் மேலும் அவரை நிறைசொல்மாலையால் பாடுக என, அவர் அடியவர்தம் வரலாற்றையும் மேதக்க பண்பு நலன் களையும் எங்ஙனம் எடுத்துப் பாடுகேன் என, பெருமானே 'தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என அடியெடுத்துக் கொடுத்தார் என்பது வரலாறு. இவ்வாற்றான் திருத்தொண்டத் தொகைக்கு, முதற் பொருளாக (அடியவராக) விளங்கும் பெருமை தில்லைவாழ் அந்தணர்களுக்கு உளதாயின், அவர் பெருமையை அடியவனாகிய யான் எங்ஙனம் முற்றக் கூற இயலும்? என்கின்றார் ஆசிரியர்.
விரிந்த இவ்வுலகில் உயர்ந்தவர்களாக விளங்கி அருளும் தில்லைவாழ் அந்தணர்களாகிய மறையவர்கள், இவ்வுலக மெல்லாம் புகழ்ந்து போற்றும் கூத்தப் பெருமானின் அருள் நடனத்தைப் போற்றி என்றும் வாழ்வார்களாக! இத்தில்லையில் வாழ்ந்து புகழ் விளங்க நிற்கும் திருநீலகண்டக் குயவனார் எனும் பெயருடையவரும், போற்றப்பெறும் வாய்மையினின்றும் வழுவாத அன்புடையவருமான அடியவர்தம் அருந்தவச் செயலை இனிக் கூறத் தொடங்குகின்றேன்.
குறிப்புரை: வரலாறு கூறலுற்றாம் என்னாது, 'செய்தவம் கூறலுற்றாம்' என்றார், இவர் வரலாற்றில் ஆழங்கால் பட்டு நிற்பது அவர்தம் தவமேயாதலின். 'தீண்டுவீர் ஆயின் எம்மைத் திருநீல கண்டம்' எனும் ஆணை கூறி அம்மையார் தம்மை விலக்க, 'எம்மை என்றதனால் 'மற்றை, மாதரார் தமையும் என்தன் மனத்தினும் தீண்டேன்' என்று கூறிய இவர்தம் உறுதிப்பாடும், இற்புறம்பு ஒழியாது அங்கண் இருவரும் வேறு வைக அற்புறு புணர்ச்சியின்மை அயலறியாது வாழ்ந்த வாழ்வும், வடிவுறு மூப்பு வந்து தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயாமையும், 'மாதைத் தீண்டிக் கொண்டு உடன் மூழ்கீர்' என்னக் 'கூடாமைப் பாரோர்' கேட்கப் பண்டுதம் செய்கை சொல்லி மூழ்கிய பழுதிலாத்திறமும் அடங்கச் 'செய்தவம் என்றார். 'தில்லைத் திருநீலகண்டக் குயவனாம் செய்தவனே' என வகை நூலும் கூறுதற்கேற்ப இங்ஙனம் கூறினார்.
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai song author %E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D pathigam no 12.010