புரமூன்றும் செற்றானைப்
பூணாகம் அணிந்தானை
உரனில்வரும் ஒருபொருளை
உலகனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல்
கண்ணார்ந்து நின்றானைப்
பரமனையே பாடுவார்
தம்பெருமை பாடுவாம்.
|
1
|
அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவரும், அணி கலனாகப் பாம்புகளை அணிந்தவரும், ஞானம் முதிர்ந்த விடத்து வெளிப்படும் ஒப்பற்ற பொருளானவரும், அனைத்துலகங்களையும் தம் மாயையால் தோற்றுவித்திருப்பவரும், உயிர்களின் அகப் புறக் கருவிகளால் காணப்படாதவராயினும் அவ்வுயிர்களிடத்து நிலைத்து நின்று காட்டுபவருமான பரமனையே பாடுவாரின் பெருமையைப் பாடுவாம். *** : உரன் - திண்மை; ஈண்டு ஞானத் திண்மை. கரணங்கள் காணா உயிர்குற்ற அகப்புறக் கருவிகளால் அறியப்படாமை. அத்தகை யோனாய் இருப்பினும், தன்னருளால் உயிர்களிடத்து நிறைந்து நிற்ப வன் என்பார், - 'கண்ணார்ந்து நிற்பானை' என்றார். இப்பாட்டு, பல ஏடுகளில் இல்லை என்பார் சிவக்கவிமணியார். பரமனையே என்ற விடத்து வரும் ஏகாரம் பிரிநிலையாம்; பொது நீக்கித் தனைநினைய வல்லார் என்பது கருத்து. | |
தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்.
|
2
|
தென் தமிழ், வடமொழி, பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், அம்பலத்தில் கூத்தியற்றும் அருள் வடிவினனாகிய கூத்தப் பெருமானேயே நன்குணர்ந்து உயர்ந்த குறிக்கோளாகிய அவ்வொரு பொருளிலேயே பொருந்திய மனவுணர்வுடன் உள்ளம் உருகிப் பாடுவார்கள், பன்றியான திருமாலுடன் அன்னப்பறவையான நான் முகனும் தேடி அறிய இயலாதவாறு விளங்கும் பரமனையே பாடுவார் ஆவார். குறிப்புரை: 'அலகின் கலையின் பொருட்கு எல்லை ஆடுங்கழலே' என்பர் முன்னும். எனவே எம் மொழிக்கும் முடிந்த பொருளாகவும் உயிர்கள் சென்று அடையத்தக்க பொருளாகவும் இருப்பது இறைவ னின் திருவடியேயாம். திருவடிச்சார்பாகிய ஈதொன்றையே குறிக் கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் பரமனையே பாடுவார் ஆவார். பண்டிதராவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறும் கருத் தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறம்சொன்ன வாறே. (தி. 9 பா. 111) என்பர் திருமூலர். இதனால் பதினெண் மொழிகளும் இறையருளைப் பெறுதலையே குறிக்கோளாகக் கொண்டுள்ளமை அறியவாம். இவற்றுள் தமிழும் வடமொழியும் முதன்மையும் முழுமையும் கொண்டனவாம். 'ஆரியமும் தமிழும் உடனே சொலிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே' (தி. 9 பா. 109) 'தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும், அவனை உணரலும் ஆமே' (தி. 9 பா. 110) 'தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் தாள்நிழல் சேர' 'வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்' (தி. 6 ப. 87 பா. 1) எனவரும் திருமுறைத் திருவாக்குகளால் இவ்வுண்மை அறியலாம். பரமனையே பாடுவார் புராணம் முற்றிற்று. | |