சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

12.560   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்


Add audio link Add Audio
செருவிலிபுத் தூர்மன்னும்
சிவமறையோர் திருக்குலத்தார்
அருவரைவில் ஆளிதனக்கு
அகத்தடிமை யாம்அதனுக்கு
ஒருவர்தமை நிகரில்லார்
உலகத்துப் பரந்தோங்கிப்
பொருவரிய புகழ்நீடு
புகழ்த்துணையார் எனும்பெயரார்.

1


'செருவிலிபுத்தூர்' என்ற பதியில் நிலைபெற்று வாழும் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர், அரிய மலையை வில்லாக வளைத்தவரான சிவபெருமானின் அகம்படிமைத் தொழில் பூண்டு ஒழுகும் அத்தன்மையில் தமக்கு ஒப்பாக ஒருவரும் இல்லாதவர், இவ்வுலகில், பரந்தும் சிறந்தும் விளங்கும் ஒப்பற்ற புகழ் நீடிய 'புகழ்த்துணையார்' எனும் பெயருடையார். *** அருவரை - மேருமலை. பொரு - ஒப்பு. செருவிலிபுத்தூர் - இது கும்பகோணத்தில் இருந்து குடவாயிலுக்குச் (குடவாசல்) செல்லும் இடைவழியில் உள்ளது. அரிசில் கரைப்புத்தூர் எனத் திருமுறைகளில் அழைக்கப்பெறுவது. இக்காலத்து அழகாபுத்தூர் என மருவி வழங்குகிறது.
தங்கோனைத் தவத்தாலே
தத்துவத்தின் வழிபடுநாள்
பொங்கோத ஞாலத்து
வற்கடமாய்ப் பசிபுரிந்தும்
எங்கோமான் தனைவிடுவேன்
அல்லேன்என் றுஇராப்பகலும்
கொங்கார்பன் மலர்கொண்டு
குளிர்புனல்கொண்டு அருச்சிப்பார்.

2


தம் பெருமானைத் தவத்தால், சிவாகம நெறியில் நின்று வழிபட்டு வரும் நாளில், பொங்கும் கடல் சூழ்ந்தவுலகத்தில் பஞ்சம் வந்து தமக்கு உணவில்லாமல் பசி மிக்கிருந்தும் 'எம் இறைவனை நான் விடுவேன் அல்லேன்' என்று இரவும் பகலுமாக, மணம் கமழும் பல மலர்களைக் கொண்டும் குளிர்நீரைக் கொண்டும் வழிபடுவாராகி, *** வற்கடம் - பஞ்சம்.
மாலயனுக் கரியானை
மஞ்சனமாட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால்
வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிறை புனல்தாங்கு
குடந்தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார்
முடிமீது வீழ்த்தயர்வார்.

3


அவர் (ஒருநாள்) திருமாலும் நான்முகனும் தேடுதற்கரிய பெருமானை, நீராட்டும் பொழுது, மிகவும் பெருகிய பசியினால் வருந்தி நிலை தளர்ந்து அழகிய நிறைந்த நீரையுடைய குடத்தைத் தாங்கமாட்டாமையால், நஞ்சு அணிந்த கழுத்தையுடைய சிவபெருமானின் முடிமீது அது வீழ்ந்துவிடத் தளர்வாராகி,
குறிப்புரை:

சங்கரன்றன் அருளாலோர்
துயில்வந்து தமையடைய
அங்கணனுங் கனவின்கண்
அருள்புரிவான் அருந்துணவு
மங்கியநாட் கழிவளவும்
வைப்பதுநித் தமும்மொருகா
சிங்குனக்கு நாமென்ன
இடர்நீங்கி யெழுந்திருந்தார்.

4


சிவபெருமானின் திருவருளால் அதுபோது உறக்கம் வந்து தம்மைச் சேர, இறைவரும் கனவில் அவருக்கு அருள் செய்வா ராய், உண்ணும் உணவு குறைந்த காலம் (பஞ்சம்) தீருமளவும், இங்கு உனக்கு நாம் நாள்தோறும் ஒரு காசு வைப்போம்! என்று கூறியருள, நாயனாரும் துன்பம் நீங்கித் துயில் உணர்ந்து எழுந்தார். *** இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின்
கீழ் ஒரு காசு
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும்
மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால்
உணங்கும் உடம்புடன் உவந்து
முற்றுணர்வு தலை நிரம்ப முகம்
மலர்ந்து களி கூர்ந்தார்.

5


ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டு எழுந்தருளும் சிவபெருமான், பீடத்தின் கீழே, துன்பம் நீங்க நாளும் ஒரு பொற் காசை இட்டு அளித்திட, அன்பரும் அதைக் கைக்கொண்டு, பொருந் திய பசியினால் வாட்டம் கொண்ட உடலுடன் அதற்குப் பெரிதும் மகிழ்ந்து அகமும் முகமும் மலரும் உணர்வுடையரானார்.
குறிப்புரை: அற்றம் - சோர்வு; பசியினாலாய சோர்வு.

Go to top
அந்நாள்போல் எந்நாளும்
அளித்தகா சதுகொண்டே
இன்னாத பசிப்பிணிவந்
திறுத்தநாள் நீங்கியபின்
மின்னார்செஞ் சடையார்க்கு
மெய்யடிமைத் தொழில்செய்து
பொன்னாட்டில் அமரர்தொழப்
புனிதர்அடி நிழற்சேர்ந்தார்.

6


அந்நாளைப் போலவே, பின்வரும் நாள்களிலும் இறைவர் நாள்தோறும் தந்த பொற்காசினைக் கைக்கொண்டு துன்ப முடைய பசி மிகுதியால் நேர்ந்த வற்கடம் நீங்கிய பின்பு, ஒளியுடைய இறைவரின் மெய்யடிமைத் தொழிலான அகம்படித் தொண்டைத் தொடர்ந்து செய்து வாழ்ந்த, பின்பு, பொன் உலகில் உள்ள வானவர் தொழும்படி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்ந்தார். *** நீங்கியபின் என்பதைப் பசிப்பிணி என்பதனோடும், நாள் என்பதனோடும் தனித்தனியே கூட்டுக. நாள்தொறும் வருத்திய பசிப்பிணியும் நீங்கியது. பஞ்சமும் நீங்கியது. நீங்கியபின், அடியவர் தாம் ஆற்றிவந்த திருத்தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்த நாள் களில், ஒரு நாள் இறையடியடைந்தார்.
பந்தணையும் மெல்விரலாள்
பாகத்தர் திருப்பாதம்
வந்தணையும் மனத்துணையார்
புகழ்த்துணையார் கழல்வாழ்த்திச்
சந்தணியும் மணிப்புயத்துத்
தனிவீர ராந்தலைவர்
கொந்தணையும் மலர்அலங்கல்
கோட்புலியார் செயல்உரைப்பாம்.

7


பந்தைச் சேரும் மென்மையான விரல்களையுடைய உமையம்மையாரை ஒரு கூற்றில் உடைய இறைவரின் திருவடிகளில் வந்து சேர்கின்ற மனத்துணை பெற்றவரான 'புகழ்த்துணையாரின்' திருவடிகளை வாழ்த்திச், சந்தனக் கலவை அணிந்த அழகிய தோள் களையுடைய ஒப்பில்லாதவரும், தலைவருமான மணம் கமழும் மாலை சூடிய 'கோட்புலியாரின்' திருத்தொண்டினை உரைப்பாம். *** புகழ்த்துணையாரின் தொண்டின் நெறியினை, 'அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர்காசு எய்திப், புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே' (தி. 2 ப. 63 பா. 7) என ஆளுடைய பிள்ளை யாரும்,
அகத்தடிமை செய்யும் அந்தணன்தான்
அரிசில்புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song author %E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D paadal name %E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D pathigam no 12.560