கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே.
|
1
|
மந்தம் ஆய் இழி மதக்களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி,
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும்
இயல்பினாரே.
|
2
|
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி,
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மத்த மாமலரொடு மதி பொதி சடைமுடி அடிகள் தம்மேல்
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே.
|
3
|
கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி,
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மறி உலாம் கையினர் மலர் அடி தொழுது எழ மருவும் உள்ளக்
குறியினார் அவர் மிகக் கூடுவார், நீடுவான் உலகின் ஊடே.
|
4
|
கோடு இடைச் சொரிந்த தேன் அதனொடும் கொண்டல்
வாய்விண்ட முன்நீா
காடு உடைப் பீலியும் கடறு உடைப் பண்டமும் கலந்து நுந்தி,
ஓடு உடைக் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
பீடு உடைச் சடைமுடி அடிகளார் இடம் எனப் பேணினாரே.
|
5
|
Go to top |
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார், திருந்து மாங்கனிகள் உந்தி
ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
நீல மாமணி மிடற்று அடிகளை, நினைய, வல்வினைகள் வீடே.
|
6
|
நீல மாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
ஏலமோடு, இலை இலவங்கமே, இஞ்சியே, மஞ்சள், உந்தி,
ஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே.
|
8
|
பொரும் திறல் பெருங்கைமா உரித்து, உமை அஞ்சவே,
ஒருங்கி நோக்கி,
பெருந் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும்
பெருமைபோலும்
வருந் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
அருந்திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய
அடிகளாரே!
|
9
|
கட்டு அமண் தேரரும், கடுக்கள் தின் கழுக்களும், கசிவு ஒன்று இல்லாப்
பிட்டர் தம் அற உரை கொள்ளலும்! பெரு வரைப் பண்டம் உந்தி
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறைச்
சிட்டனார் அடி தொழ, சிவகதி பெறுவது திண்ணம் ஆமே.
|
10
|
Go to top |
தாழ் இளங் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
போழ் இளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனை,
காழியான்-அருமறை ஞானசம்பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும், கூடுவார், நீடுவான் உலகின்
ஊடே.
|
11
|