வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு இருள
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம், பாவமே.
|
1
|
துன்னம் கொண்ட உடையான், துதைந்த வெண் நீற்றினான்,
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.
|
2
|
உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்;
கடுத்து வந்த கழல் காலன் தன்னையும், காலினால்
அடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள் ஆகவே.
|
3
|
காய்ந்ததுவும் அன்று காமனை, நெற்றிக்கண்ணினால்;
பாய்ந்ததுவும் கழல் காலனை; பண்ணின், நால்மறை,
ஆய்ந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகள் ஒரு பாகமே.
|
4
|
போர்த்ததுவும் கரியின்(ன்) உரி; புலித்தோல், உடை;
கூர்த்தது ஓர் வெண்மழு ஏந்தி; கோள் அரவம், அரைக்கு
ஆர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும்(ம்) அரணம், படர் எரி மூழ்கவே.
|
5
|
Go to top |
தெரிந்ததுவும், கணை ஒன்று; முப்புரம், சென்று உடன்
எரிந்ததுவும்; முன் எழில் ஆர் மலர் உறைவான் தலை,
அரிந்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான்
புரிந்ததுவும்(ம்) உமையாள் ஓர்பாகம் புனைதலே.
|
6
|
ஓதி, எல்லாம்! உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி! மெய்ச்
சோதி! என்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான், அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.
|
7
|
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை; திருந்தார் புரம்,
ஒறுத்ததுவும்; ஒளி மா மலர் உறைவான் சிரம்,
அறுத்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.
|
8
|
சிரமும், நல்ல மதமத்தமும், திகழ் கொன்றையும்,
அரவும், மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.
|
9
|
செந்துவர் ஆடையினாரும், வெற்று அரையே திரி
புந்தி இலார்களும், பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி;
அந்தணன், எங்கள் பிரான், அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின்! நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே.
|
10
|
Go to top |
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே.
|
11
|