வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி, கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த, தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.
|
1
|
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல், குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம் அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி, எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே.
|
2
|
மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி, குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல் வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே.
|
3
|
பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல், குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம் பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.
|
4
|
மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும் கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம் நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கை பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே.
|
5
|
Go to top |
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர, கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும் பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.
|
6
|
மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்ட குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம் அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றை நிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே.
|
7
|
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து, குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.
|
8
|
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனை குறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம் மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள் இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே.
|
9
|
மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக் குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம் புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற, பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே.
|
10
|
Go to top |
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக் கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி, ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார், ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.
|
11
|