நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு, நிலை தளர ஆயிரம் மா முகத்தினோடு பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயிலக் கண்டு, பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர்- தாம் திருத்தித் தம் மனத்தை ஒருக்காத் தொண்டர்! தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி பூந்துருத்தி என்பீர் ஆகில், பொல்லாப் புலால்-துருத்தி போக்கல் ஆமே.
|
1
|
ஐத் தானத்து அக மிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால யாதொன்றும் இடுவார் இல்லை; மைத் தானக் கண் மடவார் தங்களோடு மாயம் மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்! பைத் தானத்து ஒண்மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய நெய்த்தானம் நெய்த்தானம் என்பீர் ஆகில், நிலாவாப் புலால்-தானம் நீக்கல் ஆமே.
|
2
|
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி, புலர்ந்து எழுந்த காலைப் பொருளே தேடி, கையாறாக் கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய், கருதி வாழ்வீர்! நெய் ஆறா ஆடிய நீலகண்டர், நிமிர் புன்சடை நெற்றிக்கண்ணர், மேய ஐயாறே ஐயாறே என்பீர் ஆகில், அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளல் ஆமே.
|
3
|
இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார்; ஈன்று எடுத்த தாய் தந்தை பெண்டீர் மக்கள் கழல் நம் கோவை ஆதல் கண்டும், தேறார்; களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்! அழல் நம்மை நீக்குவிக்கும், அரையன் ஆக்கும், அமருலகம் ஆள்விக்கும், அம்மான் மேய பழனம் பழனமே என்பீர் ஆகில், பயின்று எழுந்த பழ வினை நோய் பாற்றல் ஆமே.
|
4
|
ஊற்றுத்துறை ஒன்பது உள்-நின்று ஓரீர்; ஒக்க அடைக்கும் போது உணர மாட்டீர்; மாற்றுத்துறை வழி கொண்டு ஓடாமுன்னம், மாயம் மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்! வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீர் ஆகில், துயர் நீங்கித் தூ நெறிக்கண் சேரல் ஆமே.
|
5
|
Go to top |
கலம் சுழிக்கும் கருங்கடல் சூழ் வையம் தன்னில் கள்ளக் கடலில் அழுந்தி, வாளா நலம் சுழியா, எழும் நெஞ்சே! இன்பம் வேண்டில், நம்பன் தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில், அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய, அருமறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில், வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீர் ஆகில், வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே.
|
6
|
தண்டி, குண்டோதரன், பிங்கிருடி, சார்ந்த புகழ் நந்தி, சங்கு கன்னன், பண்டை உலகம் படைத்தான் தானும், பாரை அளந்தான், பல்லாண்டு இசைப்ப; திண்டி வயிற்றுச் சிறு கண் பூதம்-சில பாட; செங்கண் விடை ஒன்று ஊர்வான் கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகில், கடுக நும் வல்வினையைக் கழற்றல் ஆமே.
|
7
|
விடம், மூக்கப் பாம்பே போல், சிந்தி, நெஞ்சே! வெள் ஏற்றான் தன் தமரைக் கண்டபோது வடம் ஊக்க மா முனிவர் போலச் சென்று, மா தவத்தார் மனத்து உளார், மழுவாள் செல்வர், படம் மூக்கப் பாம்பு அணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவிக் காணா, குடமூக்கே குடமூக்கே என்பீர் ஆகில், கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகல் ஆமே.
|
8
|
தண் காட்ட, சந்தனமும் தவள நீறும்; தழை அணுகும் குறுங் கொன்றை மாலை சூடி; கண் காட்டா, கருவரை போல்-அனைய காஞ்சிக் கார் மயில் அம் சாயலார் கலந்து காண; எண் காட்டாக் காடு அங்கு இடமா நின்று(வ்) எரி வீசி; இரவு ஆடும் இறைவர் மேய வெண்காடே வெண்காடே என்பீர் ஆகில், வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே.
|
9
|
தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்? புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே? வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா! சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே.
|
10
|
Go to top |