பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி அரவச் சடையந் தணன்மே யவழகார் குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.
|
1
|
விண்டார் புரமூன்று மெரித்த விமலன் இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம் கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே.
|
2
|
நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும் இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும் குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே.
|
3
|
விழிக்குந் நுதன்மே லொருவெண் பிறைசூடித் தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப் பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன் கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.
|
4
|
நீறார் தருமே னியனெற் றியொர்கண்ணன் ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி ஆறார் சடையந் தணனா யிழையாளோர் கூறா னகர்போல் குரங்கா டுதுறையே.
|
5
|
| Go to top |
நளிரும் மலர்க்கொன் றையுநா றுகரந்தைத் துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில் குளிரும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.
|
6
|
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும் அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும் குழகன் னகர்போல் குரங்காடு துறையே.
|
7
|
வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க நிரையார் விரலா னெரித்திட் டவனூராம் கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல் குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.
|
8
|
நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப் படியா கியபண் டங்கனின் றெரியாடி செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின் கொடியா னகர்போல் குரங்கா டுதுறையே.
|
9
|
துவரா டையர்வே டமலாச் சமண்கையர் கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம் நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக் குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே.
|
10
|
| Go to top |
நல்லார் பயில்காழி யுண்ஞான சம்பந்தன் கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல் சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.
|
11
|