காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம் மறிப்பநலமார்
சேடுமிகு பேடையன மூடிமகிழ் மாடமிடை தேவூரதுவே. |
1
|
கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம் விரைக்குமணமார்
தேளரவு தென்றறெரு வெங்குநிறை வொன்றிவரு தேவூரதுவே. |
2
|
பண்டடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கனெமை யாளுமிறைவன்
எண்டடவு வானவரி றைஞ்சுகழ லோனினிதி ருந்தவிடமாம்
விண்டடவு வார்பொழி லுகுத்தநற வாடிமலர் சூடிவிரையார்
செண்டடவு மாளிகை செறிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே. |
3
|
மாசின்மன நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி யாடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமு மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே. |
4
|
கானமுறு மான்மறிய னானையுரி போர்வைகன லாடல்புரிவோன்
ஏனவெயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவி பலாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே. |
5
|
| Go to top |
ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறனடை யார்நகர்கடான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறனமை யாளுமரனூர்
வீறுமல ரூறுமது வேறிவளர் வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பவிள வாளைவரு தேவூரதுவே. |
6
|
கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுர மன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையம ரின்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிக டின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி யொன்றவிளை யாடிவளர் தேவூரதுவே. |
7
|
ஓதமலி கின்றதெனி லங்கையரை யன்மலி புயங்கணெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில் அடர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கணட மாடலொடு பொங்குமுரவம்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே. |
8
|
வண்ணமுகி லன்னவெழி லண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள் கண்ணவ னலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையி னெண்ணரிய வன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தவிசை யாழ்மருவு தேவூரதுவே. |
9
|
பொச்சமமர் பிச்சைபயி லச்சமணு மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
இப்பாடல் கிடைக்கவில்லை. |
10
|
| Go to top |
துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே. |
11
|