சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வான்நிறத் தானணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
வந்திப் பாரவர் வானுல காள்வரே. |
1
|
அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே. |
2
|
ஆதி யாயவ னாரு மிலாதவன்
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்
பாதிப் பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே. |
3
|
இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
அட்ட மூர்த்திய ருளென் றடைவரே. |
4
|
ஈறில் கூறைய னாகி யெரிந்தவெண்
நீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறி லாதன செய்யினும் விண்ணவர்
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே. |
5
|
| Go to top |
உச்சி வெண்மதி சூடிலும் ஊன்அறாப்
பச்சை வெண்தலை யேந்திப் பலவில்லம்
பிச்சை யேபுகு மாகிலும் வானவர்
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே. |
6
|
ஊரி லாயென்றொன் றாக உரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே. |
7
|
எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவளப் பாரடைந் தார்களே. |
8
|
ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்
ஆனை யீருரி போர்த்தன லாடிலும்
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே. |
9
|
ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே. |
10
|
| Go to top |
ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
அருவ ராஅரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே. |
11
|
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னேயரு ளாயென்று நாடொறும்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே. |
12
|
ஔவ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே. |
13
|
அக்கு மாமையும் பூண்டன லேந்தியில்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ராற்றொழு வானையே. |
14
|
கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே. |
15
|
| Go to top |
ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே. |
16
|
சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூஎயில் எய்தவ னல்லனே. |
17
|
ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாம்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே. |
18
|
இடப மேறியு மில்பலி யேற்பவர்
அடவி காதலித் தாடுவ ரைந்தலைப்
படவம் பாம்பரை யார்த்த பரமனைக்
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே. |
19
|
இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த வுள்ளத் தவருணர் வார்களே. |
20
|
| Go to top |
தருமந் தான்தவந் தான்தவத் தால்வரும்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே. |
21
|
நமச்சி வாயவென் பாருள ரேலவர்
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே. |
22
|
பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலநின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
புற்ப னிக்கெடு மாறது போலுமே. |
23
|
மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்த ராயவர் காப்பினால்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெ யாக்கையை நீக்குவர் பேயரே. |
24
|
இயக்கர் கின்னர ரிந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே. |
25
|
| Go to top |
அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்
பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
கரவில் நான்முக னுங்கரி யல்லரே. |
26
|
அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
றுழலும் மூவெயி லொள்ளழ லூட்டினான்
தழலுந் தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே. |
27
|
இளமை கைவிட் டகறலு மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி யாயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே. |
28
|
தன்னிற் றன்னை யறியுந் தலைமகன்
தன்னிற் றன்னை யறியில் தலைப்படும்
தன்னிற் றன்னை யறிவில னாயிடில்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே. |
29
|
இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலங்கொண் டேத்துவார் வானுல காள்வரே. |
30
|
| Go to top |