மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய், தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி, சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில் இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
1
|
மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும் சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம் சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப்பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும். | |
மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி, நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர், கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில் இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.
|
2
|
இமவான் மகளாய் மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும் குற்றமற்ற சிவபிரானது வென்றி விளங்குவதும் புகழாகிய ஒளி மிக்க கலை வல்ல புலவர்கள் இடைவிடாது பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம் இதுவேயாகும். | |
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை, ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர், கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே.
|
3
|
தவ ஒழுக்கத்தால் மேம்பட்ட முனிவர்களால் சிந்தித்து வணங்கப்பெறும் எம் தந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் நிலப்பரப்பினும் மிக்க பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச் சான்றோர்களும் நற்குணங்களும் அழகும் மலர்போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும். | |
பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில், தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில், குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில் எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
4
|
குலைகள் தள்ளிய வாழைகள் செழித்துள்ள பொழில்கள் சூழப்பெற்றதும் அழகு திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால் சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமான குன்றளூரை அடுத்துள்ள இடும்பாவனம் அழகுக்கு அழகு செய்யும் இறைவர்க்குரிய இடமாகும். | |
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை, முடிமேல் செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரைமேல், கொந்து ஆர் மலர்ப்புன்னை, மகிழ், குரவம், கமழ் குன்றில் எந்தாய்! என, இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.
|
5
|
பந்தாடும் கை விரல்களை உடைய உமையவள்பங்கனே எனவும் கங்கை அணிந்த சடைமுடியோடு செந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய வளமான வயல்களின் கரைமேல் கொத்துக்களாக மலர்ந்த புன்னை மகிழ் குரா ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற குன்றளூரில் எழுந்தருளிய எந்தாய் எனவும் போற்ற இருந்த இறைவனது இடம் இடும்பாவனம். | |
| Go to top |
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி, அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி, குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில், எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.
|
6
|
தவ ஒழுக்கத்தால் சிறந்த முனிவர்கள் உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும் நினைவுப் பொருளாகி ஞானத்தால் தொழும் மேலான ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவை நல்கிச் சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள் புரிபவனாகிய சிவபெருமான் இடம் தூய சிந்தனையைத் தரும் மணம் கமழ்கின்ற குன்றளூரில் வரப்பை மோதும் நீர் நிரம்பிய வயல்கள் புடைசூழ்ந்து விளங்கும் இடும்பாவனமாகிய இத்தலமேயாகும். | |
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம் பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா, கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி, ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
7
|
நீறணிந்த திருமேனியராய் விளங்கும் உலகெங்கணும் சென்று பருந்து உண்ணவரும் தசையோடு கூடிய காய்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அன்பர்கள் இடும் உணவைப்பெற்று உமையம்மையைத் தன் மேனியின் ஒரு கூறாகிய இடப்பாகமாக ஏற்று மகிழ்ந்து விடைமீது வரும் சிவபெருமானுக்குரிய இடமாகிய இடும்பாவனம் இதுவேயாகும். | |
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து, கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த, ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
8
|
வானவெளியில் தேர்மிசை ஏறிவந்த ஒளி பொருந்திய வாளையும் பற்களையும் உடைய அரக்கனாகிய இராவணன் சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையின் சிறப்பை ஓராது தன்தேர் தடைப்படுகிறது என்ற காரணத்திற்காக மலையைப் பெயர்த்துச் செருக்கால் ஆரவாரம் செய்ய அவன் பத்துத் தலைமுடிகளையும் நெரித்தபின் அவன் வருந்திவேண்ட கருணையோடு கூரிய கொலைவாள் பிற நன்மைகள் இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக் கொடுத்தருளிய அழகனாகிய இறைவற்கு இடம் இடும்பாவனம். | |
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த் தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய், மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த, இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.
|
9
|
தருக்கு மிகுந்த மாயனும் அயனும் காணாது மயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும் புகழ்மிக்க அம்மறையோர்களால் தெளிந்த சிந்தையோடு பல்வகை நிறங்களுடன் கூடிய மலர்களைத்தூவி வழிபடப் பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும். | |
தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார், உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும், மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல் இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.
|
10
|
பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம்கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும் உடுத்துவதற்குரிய காவியுடைகளை அணிந்து திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய் துன்பம் நீக்கி இன்பம் அருளும் இறைவனது இடம் தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை உடைய மடுக்களும் செந்நெல் வயல்களும் சூழ்ந்த நீர்மலர் மிக்க நீர்நிலைகளின் கரைமேல் விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும். | |
| Go to top |
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை, அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன் படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே.
|
11
|
கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய அழகிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள் வாழும் காழிப்பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத வினைகள் நீங்கும். தானே - அசை. | |