சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

11.033   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி


Add audio link Add Audio
பொன்னி வடகரை சேர்நாரை
யூரிற் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்குமந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத் துணைதுணையே.


1


செப்பத் தகுபுகழ்த் தில்லைப்
பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும்
உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க்
கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி
வோர்தமைச் சொல்லுதுமே.


2


சொல்லச் சிவன்திரு வாணைதன்
தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்தர்
பின்னுமை கோனருளால்
வில்லை புரைநுத லாளோ
டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே.


3


செய்தவர் வேண்டிய தியாதுங்
கொடுப்பச் சிவன் தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை யீந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட்டி
னத்துள் இயற்பகையே.


4


இயலா விடைச் சென்ற மாதவற்
கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி
மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி
யாக்குமவன் செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை
மாறனெங் கற்பகமே.


5


Go to top
கற்றநன் மெய்த்தவன் போலொரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை யவனைச்
செறப்புக லுந்திருவாய்
மற்றவன் தத்தாநமரே
யெனச் சொல்லி வானுலகம்
பெற்றவன் சேதிபன் மெயப்பொரு
ளாமென்று பேசுவரே.


6


பேசும் பெருமையவ் வாரூ
ரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவ னீசனுக்கே
நேச னெனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டேனே.


7


மிண்டும் பொழில்பழை யாறை
அமர்நீதி வெண்பொடியின்
முண்டந் தரித்த பிராற்குநல்
லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ்
செல்வமுந் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும்
ஈந்த தொழிலினனே.


8


தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடருஞ் சோதிசென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங்
காட்டி யெனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செ
யெனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகும் மலரின்நற் றாரெம்பி
ரான்நம்பி யாரூரனே.


9


ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற்
கென் றோருயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாக
ருடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே.


10


Go to top
பத்தனை யேனாதி நாதனைப்
பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந்
தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன்
கண்டிப்ப நின்றருளும்
நித்தனை யீழக் குலதீப
னென்பரிந் நீள்நிலத்தே.


11


நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணில்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்திற் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நங் கண்ணப்ப
னாமென்று கூறுவரே.


12


ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தானென்பர்
காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்
டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட
வூரிர் கலயனையே.


13


கலச முலைக்கன்னி காதற்
புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச
வடிக்கிவை நல்கெனலும்
அலசு மெனக்கரு தாதவள்
கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ்
சாற னென்னும் வள்ளலே.


14


வள்ளற் பிராற்கமு தேந்தி
வருவோ னுகலுமிங்கே
வெள்ளச் சடையா யமுதுசெய்
யாவிடி லென்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட்
டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங்
கலத்தரி வாட்டாயனே.


15


Go to top
தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்து
தொல்சீர்த்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாய னென்னை
யுவந்தாண் டருளினனே.


16


அருட்டுறை யத்தற் கடிமைபட்
டேனினி யல்லனென்னும்
பொருட்டுறை யாவதென் னேயென்ன
வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரானடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே.


17


அவந்திரி குண்டம ணாவதின்
மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பறையில் தேய்த்துல
காண்டவொண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா
புரியென்னும் நீள்பதியே.


18


பதிகந் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியஞ் சடையாற் கலர்தொட்
டணிபவன் யான்மகிழ்ந்து
துதியங் கழல்சண்பை நாதற்குத்
தோழன்வன் றொண்டனம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்னெனும் அந்தணனே.


19


அந்தாழ் புனல்தன்னி லல்லும்
பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொடு ருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தா ருருத்ர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூரென்
றுரைப்பரிந் நானிலத்தே.


20


Go to top
நாவார் புகழ்த்தில்லை யம்பலத்
தானருள் பெற்றுநாளைப்
போவா னாவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திக ழாதனூ
ரென்பரிம் மண்டலத்தே.


21


மண்டும் புனற்சடை யாந்தமர்
தூசெற்றி வாட்டுவகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவனென்னா
முண்டம் படர்பாறை முட்டு
மெழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி யேகா
லியர்தங்கள் தொல்குலமே.


22


குலமே றியசேய்ஞலூரிற்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறற் சண்டிகண்
டீர்தந்தை தாளிரண்டும்
வலமே றியமழு வாலெறிந்
தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே.


23


நிதியார் துருத்திதென் வேள்விக்
குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த
புகர்பின்னை மாற்றிடென்று
துதியா வருள்சொன்ன வாறறி
வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர்
கோனென்னும் நற்றவனே.


24


நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப்
பாதந்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற
வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவ னுற்ற விடம்அடை
யாரிட வொள்ளமுதாத்
துற்றவன் ஆமூரில் நாவுக்
கரசெனுந் தூமணியே.


25


Go to top
மணியினை மாமறைக் காட்டு
மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப்
பித்தன தெண்கடலில்
பிணியன கல்மிதப் பித்தன
சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே.


26


அருந்தமி ழாகரன் வாதி
லமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித்
தோனெழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசமல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே.


27


சிறைநன் புனல்திரு நாவலூ
ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை யெய்து
மிவனருள் போற்றவின்றே
பிறைநன் முடிய னடியடை
வேனென் றுடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்ப னெனுநம்பியே.


28


நம்பன் திருமலை நான்மிதி
யேனென்று தாளிரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்
தேற வுமைநகலும்
செம்பொன் னுருவனெ ன்அம்மை
யெனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பி னுகுகாரைக் காலினின்
மேய குலதனமே.


29


தனமா வதுதிரு நாவுக்கரசின்
சரண மென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்
தாங்கவன் வண்டமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப் பெற்றவ
னெங்கள் பிரான்
அனமார் வயல்திங்க ளூரினில்
வேதியன் அப்பூதியே.


30


Go to top
பூதிப் புயத்தர் புயத்தில்
சிலந்தி புகலுமஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பவுப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று
பிஞ்ஞகன் கேட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்னெனும் வேதியனே.


31


வேத மறிகரத் தாரூர்
அரற்குவிளக்கு நெய்யைத்
தீது செறியமண் கையரட்
டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக வருகரென்
றன்று விளக்கெரித்தான்
நாதன் எழிலேமப் பேறூ
ரதிபன் நமிநந்தியே.


32


நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
லாரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலில்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்றொண்ட
னென்பரிவ் வையகத்தே.


33


வைய மகிழயாம் வாழ
வமணர்வலி தொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென்
குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தைய லருள்பெற் றனனென்பர்
ஞானசம் பந்தனையே.


34


பந்தார் விரலியர் வேள்செங்கட்
சோழன் முருகன்நல்ல
சந்தா ரகலத்து நீலநக்
கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தி
லிட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரானருட்
காழியர் கொற்றவனே.


35


Go to top
கொற்றத் திறலெந்தை தந்தைதன்
தந்தையெம் கூட்டமெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி
யேம்திகழ் வன்றொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பானென்
றுடைவாள்உருவி யந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன்
குடியேயர் சீர்க்குடியே.


36


குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல
னாகின்ற வங்கணனே.


37


கண்ணார் மணியொன்று மின்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலுந்
தன்னை நகுமமணர்
கண்ணாங் கிழப்ப வமணர்
கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவ
னாரூர் விறல்தண்டியே.


38


தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தகுகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநல் நீற்ற னடியவர்க்
கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே.


39


சூதப்பொழி லம்ப ரந்தணன்
சோமாசி மாறனென்பான்
வேதப் பொருளஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் றொண்டன்
தனக்கு மகிழ்துணையே.


40


Go to top
துணையு மளவுமில் லாதவன்
தன்னரு ளேதுணையாக்
கணையுங் கதிர்நெடு வேலுங்
கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகண் சங்கிலி
பேரமைத் தோளிரண்டும்
அணையும் மவன்திரு வாரூர
னாகின்ற அற்புதனே.


41


தகடன வாடையன் சாக்கியன்
மாக்கல் தடவரையின்
மகள்தனம் தாக்கக் குழைந்ததிண்
டோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியில் செங்க
லெறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவ னூர்சங்க
மங்கை புவனியிலே.


42


புவனியில் பூதியும் சாதன
மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய்
தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித்தெ
னாக்கூ ரதிப னருமறையோன்
சிவனிய மந்தலை நின்றதொல்
சீர்நஞ் சிறப்புலியே.


43


புலியி னதளுடைப் புண்ணியற்
கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வ னுடல் துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழிலொண்செங் காட்டங்
குடியவர் மன்னவனே.


44


மன்னர் பிரானெதிர் வண்ணா
னுடலுவ ரூறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலுந் தான்வணங்க
என்னர் பிரானடி வண்ணா
னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வானெனும் சேரலனே.


45


Go to top
சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி யிவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாயின்று தொண்டுபட்டே.


46


தொண்டரை யாக்கி யவரவர்க்
கேற்ற தொழில்கள்செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள்தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே.


47


நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யாலது கைகொடுப்ப
ஒதந் தழுவிய ஞாலமெல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள
னாகிய கூற்றுவனே.


48


கூற்றுக் கெவனோ புகல்திரு
வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலு மின்னடைக்
காயு மிடுதருமக்
கோற்றொத்து கூனனுங் கூன்போய்க்
குருடனுங் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
யாமித் தரணியிலே.

49


தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்கம் அதில்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயுந் திருவால
வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல
பாடும் புலவர்களே.


50


Go to top
புலமன் னியமன்னைச் சிங்கள
நாடு பொடுபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன
நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன
தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக்
கீந்ததொர் வண்புகழே.


51


புகழும் படியெம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட
வார்புனை கோலமெங்கும்
நிகழும் படிகண் டவனுக்
கிரட்டிபொன் இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க
முனையர சன்திறமே.


52


திறமமர் மீன்படுக் கும்பொழு
தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு
வோனொரு நாட்கனக
நிறமமர் மீன்பட நின்மலற்
கென்றுவிட் டோன்கமலம்
புறமமர் நாகை யதிபத்த
னாகிய பொய்யிலியே.


53


பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தானவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே.


54


கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும்
நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக்
கேற்றற் குடலிலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக்
குழன்றுங்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலியொற்றி
மாநகர்ச் சக்கிரியே.


55


Go to top
கிரிவில் லவர்தம் மடியரைத்
தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரையந் நாவரி
வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயல் செங்கழு
நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைமக ழுந்தென்
வரிஞ்சைத் திகழ்சத்தியே.


56


சத்தித் தடக்கைக் குமரன்நற்
றாதைதன் தானமெல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாளரற்
காயயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல் ஐயடிகளா
கின்றநம் பல்லவனே.


57


பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூரரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூ
ராகின்ற நன்னகரே.


58


நன்னக ராய விருக்குவே
ளூர்தனில் நல்குரவாய்ப்
பொன்னக ராயநல் தில்லை
புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற்
புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோளெந்தை தந்தை
பிரானெம் கணம்புல்லனே.


59


புல்லன வாகா வகையுல
கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வுந்நய மாக்கிச்
சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும்
கயிலைப்புக் கானென்பரால்
கல்லன மாமதில் சூழ்கட
வூரினில் காரியையே.


60


Go to top
கார்த்தண் முகிற்கைக் கடற்காழி
யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது
கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த
பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி
யில்வென்ற மாறனுக்கே.


61


மாறா வருளரன் தன்னை
மனவா லயத்திருத்தி
ஆறா வறிவா மொளி விளக்
கேற்றி யகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும்
மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா
னென்று விளம்புவரே.


62


என்று விளம்புவர் நீடூ
ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க்
காக்கூலி யேற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வ மெல்லாங்
கனகநன் மேருவென்னுங்
குன்று வளைத்த சிலையான்
தமர்க்குக் கொடுத்தனனே.


63


கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிரன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட
னாகின்ற மாதவனே.


64


மாதவத் தோர்தங்கள் வைப்பினுக்
காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன்
மூக்கை யரியப்பொற்கை
காதிவைத் தன்றோ வரிவதென்
றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங்
கோதைக் கழற்சிங்கனே.


65


Go to top
சிங்கத் துருவனைச் செற்றவன்
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென்
செல்வ மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே
ளூர்மன் இடங்கழியே.


66


கழிநீள் கடல்நஞ் சயின்றார்க்
கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன்
தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந்
தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர்
தஞ்சைச் செருத்துணையே.


67


செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை
வையம் சிறுவிலைத்தா
வுருவலி கெட்டுண வின்றி
யுமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து
கலசம் விழத்தரியா
தருவரை வில்லி யருளும்
நிதியது பெற்றனனே.


68


பெற்ற முயர்த்தோன் விரையாக்
கலிபிழைத் தோர்தமது
சுற்ற மறுக்குந் தொழில்திரு
நாட்டியத் தான்குடிக்கோன்
குற்ற மறுக்கும்நங் கோட்புலி
நாவற் குரிசிலருள்
பெற்ற வருட்கட் லென்றுல
கேத்தும் பெருந்தகையே.


69


தகுமகட் பேசினோன் வீயவே
நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னாலொற்றி
யூருறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு
ளாலிவ் வியனுலகம்
நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந்
தான்நாவ லூரரசே.


70


Go to top
அரசினை யாரூ ரமரர்
பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி
யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங்
கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த
ரென்று தொகுத்தவரே.


71


தொகுத்த வடமொழி தென்மொழி
யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை யம்பலத்
தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்
லோரென்ப ருத்தமரே.


72


உத்தமத் தானத் தறம்பொரு
ளின்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக்
கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத
கமல மலரிணைக்கீழ்ச்
சித்தம்வைத் தாரென்பர் வீடுபே
றெய்திய செல்வர்களே.


73


செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித்
தாய செழுநெறியே.


74


நெறிவார் சடையரைத் தீண்டிமுப்
போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர்
நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் தோளும்
தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை
வாய வுலகினிலே.


75


Go to top
உலகு கலங்கினும் மூழி திரியினு முள்ளொருகால்
விலகுத லில்லா விதியது
பெற்றநல வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூ
ரமர்ந்த வரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக்
கணியு மிறைவர்களே.


76


வருக்க மடைத்துநன் னாவலூர்
மன்னவன் வண்டமிழால்
பெருக்கு மதுரத் தொகையிற்
பிறைசூடி பெய்கழற்கே
ஒருக்கு மனத்தொடப் பாலடிச்
சார்ந்தவ ரென்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத்
தோர்நஞ் செழுந்தவரே.


77


செழுநீர் வயல்முது குன்றினில்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன்
னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர
னென்றுநாம் கேட்பதுவே.


78


பதுமநற் போதன்ன பாதத்
தரற்கொரு கோயிலையான்
கதுமெனச் செய்குவ தென்றுகொலா
லாமென்று கண்துயிலா
ததுமனத் தேயெல்லி தோறும்
நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற
வூர்தனிற் பூசலையே.


79


பூச லயில்தென்ன னார்க்கன
லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா
தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா
கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந்
தருக்குத்தென் னாட்டகத்தே.


80


Go to top
நாட்டமிட்ட டன்ரி வந்திப்ப
வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர்
சைவத் தவரரையில்
கூட்டுமக் கப்படம் கோவணம்
நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய
நேசனை இம்மையிலே.


81


மைவைத்த கண்டன் நெறியன்றி
மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு
சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து
தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வந்திருக் கோச்செங்க
ணானென்னுஞ் செம்பியனே.


82


செம்பொ னணிந்துசிற் றம்பலத்
தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன்
குலமுத லென்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச்
சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க
ணானென்னும் நித்தனையே.


83


தனையொப் பருமெருக் கத்தம்
பூலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண்
டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழில் சண்பையர்
கோன்செந் தமிழொடிசை
புனையப் பரனருள் பெற்றவ
னென்பரிப் பூதலத்தே.


84


தலம்விளங் குந்திரு நாவலூர்
தன்னில் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை
யுரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங்
கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி யாரூ
ரனைமுன் பயந்தமையே.


85


Go to top
பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள்
ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தா னுகைத்தநற் காளையை
யென்றுங் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகுமர னாரூர்ப்
புனிதன் அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்று
முரைப்பது ஞானியையே.


86


ஞானவா ரூரரைச் சேரரை
யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே.


87


கூட்டமொன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத்தோரெழு
பத்திரண் டாம்வினையை
வாட்டுந் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ
ராளி பணித்தனனே.


88


பணித்தநல் தொண்டத் தொகைமுதல்
தில்லை யிலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற
வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநல் பொய்யடி மைகறைக்
கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய
சீர்மறை நாவனொடே.


89


ஓடிடும் பஞ்சேந் திரிய
மொடுக்கியென் னூழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம்
செய்தனன் வானினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையினுள்ள
சேடர்தஞ் செல்வப் பெரும்புக
ழந்தாதி செப்பிடவே.


90


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song lang tamil pathigam no 11.033