வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.
|
1
|
வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும் நிறைந்து விளங்கும் திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற்காலத்துக்குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பதி ஞானத்தாலே நினைபவர் வினைகள் நைந்துஅறும். | |
மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை
சூழ்,
திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி
மேவிய
அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.
|
2
|
இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக்களிக்கும் மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும் மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான சிக்கலில் எழுந்தருளிய, விடம்தங்கிய கண்டத்தினை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய் அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர். | |
நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன்,
வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.
|
3
|
நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஓரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும். | |
கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன் இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்தவெண்நீற்று அண்ணல், வெண்ணெய்ப்பிரான், விரை
ஆர் கழல்
சிந்தைசெய்வார் வினைஆயின தேய்வது திண்ணமே.
|
4
|
மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும் பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும் பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம் செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர் வினைகள் தேய்வது திண்ணம். | |
மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு
தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெங் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி
மேவவே,
தங்கும், மேன்மை; சரதம் திரு, நாளும், தகையுமே.
|
5
|
மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும் கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில் சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும். | |
| Go to top |
வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ்,
தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்த மலரால் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டு இரைத்து, மனமே! மதியாய், கதி ஆகவே!
|
6
|
வண்டுகள் ஒலிசெய்து சூழத் தேனை மிகுதியாகச் சொரியும் பெரிய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகள் சூழ்ந்ததும் தண்ணீர் பெருகி ஓடும் வயல்களை உடையதுமான சிக்கற்பதியில், திருமால் பூசித்த மலர்களால் திகழும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைத் தரிசித்துத் துதிசெய்து நற்கதிபெற `மனமே மதித்துப் போற்றுவாயாக`. | |
முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத்
துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்,
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடி
உன்னி நீட, மனமே! நினையாய், வினை ஓயவே!
|
7
|
மனமே! வானவெளியில் முற்பட்டுச் செல்லும் பெரிய அரக்கர்களின் கோட்டைகள், எரியில் அழிந்து விழுமாறு விரைந்து செல்வதும் நீண்டதும் கொடியதுமான கணை ஒன்றைச் செலுத்தி அழித்த ஒளிவடிவினனாகிய செந்நெல்பொருந்திய வயல்கள் சூழ்ந்த சிக்கல் என்னும் பதியில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் பலகாலும் எண்ணி அழுந்தி நம் வினைகள் தேய்ந்தொழிய நினைவாயாக. | |
தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை
பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே,
செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உற்று, நீ நினைவாய், வினைஆயின ஓயவே!
|
8
|
தெளிந்த அறிவினை உடைய தென்இலங்கைக்கு இறைவனாகிய இராவணன் ஈசன் எழுந்தருளிய கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டுப் பற்றிய அளவில் அவன் முடிகள் பத்தோடு இருபது தோள்களும் நெரியுமாறு செற்ற தேவனாகிய நம் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, மனமே! வினைகள்யாவும் தேய்ந்தொழிய நீ உற்று நினைவாயாக. | |
மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே.
|
9
|
திருமாலும் அரியமறை வல்ல நான்முகனும் சிவ பிரானின் அடிமுடிகளைக் காண ஏனமும் அன்னமுமாய வடிவெடுத்து முயன்றனர். முயன்றும் அப்பெருமானின் உண்மைத்தன்மையை உணராராயினர். அவ்விறைவன் சிக்கலில் வெண்ணெய்ப் பிரான் என்ற திருப்பெயரோடு வீற்றிருந்தருளுகின்றான். அவனைப் பாலபிடேகம்புரிந்து பல மலர்களைத்தூவி வழிபடின் நம் பாவங்கள் நீங்கும். | |
பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலாக்
கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது, நீர்,
சிட்டன், சிக்கல் வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப்
பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே!
|
10
|
நல்ல மருதந்துவர்ப்பட்டையின் சாறுஊட்டப்பட்ட ஆடையை அணிந்த சாக்கியரும், முறையற்ற பண்புகளைக் கொண்ட உடற்கட்டுடைய கழுவேறுதற்குரிய சமணர்களும் சொல்லும் பொய்யுரைகளைக் கருதாது நீர் மேலானவனும் சிக்கலில் வெண்ணெய்ப் பெருமானாக விளங்குபவனும் ஆகிய செழுமையான சிறந்த வேதங்களில் வல்ல புலவனாகிய சிவபிரான் சேவடிகளையே பிணிகள் தீரப்பணிவீர்களாக. | |
| Go to top |
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல்
செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர், வான் இடை
வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.
|
11
|
மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர் சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர். | |