சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநனிப்பள்ளி - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா ராகத்தில் திருமுறை அருள்தரு பர்வதராசபுத்திரி உடனுறை அருள்மிகு நற்றுணையப்பர் திருவடிகள் போற்றி
ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம் பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் எதிரே தோன்றும் இப்பதியாது எனக் கேட்கத் தந்தையார் அது தான் நனிபள்ளி எனச் சொல்லக் கேட்டுக் காரைகள் கூகைமுல்லை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=-hsh2WlPosg   Add audio link Add Audio

காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர் தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள, வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும்; நமர்காள்

1

சடை இடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர் திங்கள் கண்ணி, அயலே
இடை இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை, இறைவன்(ன்) இடம் கொள் பதிதான்
மடை இடை வாளை பாய, முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும்,
நடை உடை அன்னம் வைகு, புனல் அம் படப்பை நனிபள்ளி போலும்; நமர்காள்

2

பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்,
கறுமலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை, இடம் ஆய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ்
நறுமலர் அல்லி பல்லி, ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும்; நமர்காள்

3

குளிர் தரு கங்கை தங்கு சடைமாடு, இலங்கு தலைமாலையோடு குலவி,
ஒளிர் தரு திங்கள் சூடி, உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல,
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனி பள்ளிபோலும்; நமர்காள்

4

தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு நின்று புரள,
காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்,
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும்; நமர்காள்

5
Go to top

மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து, மலையான் மடந்தை மணிபொன்
ஆகம் ஓர் பாகம் ஆக, அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும், சிலம்ப அகில் உந்தி ஒண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும், நனிபள்ளிபோலும்; நமர்காள்

6

தகை மலி தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம், கொடு கொட்டி வீணை முரல,
வகை மலி வன்னி, கொன்றை, மதமத்தம், வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல், பணிவார்கள் பாடல், பெருகி,
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும்; நமர்காள்

7

வலம் மிகு வாளன், வேலன், வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும்; நமர்காள்

8

நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார்,
அற உரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல், நகர்தான்
புற விரி முல்லை, மௌவல், குளிர் பிண்டி, புன்னை, புனை கொன்றை, துன்று பொதுள
நற விரி போது தாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும்; நமர்காள்

9

அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க! என்று கையில் இட உண்டு பட்ட அமணும்,
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும்,
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளிபோலும்; நமர்காள்

10
Go to top

கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநனிப்பள்ளி
2.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காரைகள், கூகை, முல்லை, கள,
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
4.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்
Tune - திருநேரிசை   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
7.097   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால்
Tune - பஞ்சமம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000