காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர்
தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய
சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள,
வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி
போலும்; நமர்காள்
|
1
|
நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச் சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளியாகும். | |
சடை இடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர்
திங்கள் கண்ணி, அயலே
இடை இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை,
இறைவன்(ன்) இடம் கொள் பதிதான்
மடை இடை வாளை பாய, முகிழ் வாய் நெரிந்து மணம்
நாறும் நீலம் மலரும்,
நடை உடை அன்னம் வைகு, புனல் அம் படப்பை
நனிபள்ளி போலும்; நமர்காள்
|
2
|
சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த் தங்கிய கங்கையையும், வளரும் பிறையாகிய கண்ணியையும், இடையிடையே விரவிய கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி, மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம் வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும் நீர்நிலைகளை உடைய தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும். | |
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடு இலாத பெருமான்,
கறுமலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை, இடம் ஆய
காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு
போது அலர்ந்த விரை சூழ்
நறுமலர் அல்லி பல்லி, ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி
போலும்; நமர்காள்
|
3
|
அடியவர்கள் தங்களுக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும், கருங்குவளைமலர் போலத்தனது கண்டம் நிறம் உறுமாறு விடத்தை உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள் தங்கித் தேன் உண்டு விட்ட வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும் கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம் பொருந்திய மலர்களின் தேன் உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய நனிபள்ளியாகும். | |
குளிர் தரு கங்கை தங்கு சடைமாடு, இலங்கு
தலைமாலையோடு குலவி,
ஒளிர் தரு திங்கள் சூடி, உமை பாகம் ஆக உடையான்
உகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட
பெடைவண்டு தானும் முரல,
நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனி
பள்ளிபோலும்; நமர்காள்
|
4
|
குளிர்ந்த கங்கை தங்கிய சடையின்கண் விளங்கிய தலைமாலையோடு கூடி, ஒளிதரும் திங்களைச் சூடி, உமையம்மையை ஒருபாகமாக உடைய பெருமான் உகந்து எழுந்தருளிய நகர், குளிர்ந்த, கொம்பு என்னும் இசைக்கருவியின் பாடல்களோடு குயில் கூவும் இசையையும் கேட்ட பெடை வண்டு தானும் முரல நண்ணிய சோலைகளில் வரிசையாக நாரைகளும் குருகுகளும் வைகும் நனிபள்ளியாகும். | |
தோடு ஒரு காதன் ஆகி, ஒரு காது இலங்கு சுரிசங்கு
நின்று புரள,
காடு இடம் ஆக நின்று, கனல் ஆடும் எந்தை இடம்
ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர்
தெளிப்ப விரலால்,
நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும்
நனிபள்ளி போலும்; நமர்காள்
|
5
|
ஒருகாதில் தோடணிந்தவனாய், ஒருகாதில் வளைந்த சங்கைக் குழைதாழ நின்று புரளுமாறு அணிந்தவனாய்ச் சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அனலிடை ஆடும் எந்தையாகிய சிவபிரானது பதி, வீடு அடைய விரும்பும் அடியவர்கள் விதி முறையிது என்று தெரிந்து நீராடி மணம் பொருந்திய நீரை விரலால் தெளித்து அர்க்கியம்தர, ஒலியோடு பெருவெள்ளமாய்ப் பெருகி நாடு முழுதும் பரவி வரும் காவிரியின் கரையில் விளங்கும் நனிபள்ளியாகும். | |
| Go to top |
மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து, மலையான் மடந்தை மணிபொன்
ஆகம் ஓர் பாகம் ஆக, அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும், சிலம்ப அகில் உந்தி ஒண்பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும், நனிபள்ளிபோலும்; நமர்காள்
|
6
|
மேகங்களோடு ஓடும் திங்களைக் கண்ணியாகச் சூடி, மலைமகளை அழகிய பொன்மயமான திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அழலின்கண் நின்று ஆடும் எந்தையாகிய பெருமான் எழுந்தருளியநகர். கருங்குரங்குகளும், மந்திகளும் விளையாடும் மலையின்கண் உள்ள அகில் மரங்களையும் ஒளி பொருந்திய பொன்னையும் நாகமரம் சந்தன மரம் ஆகியவற்றையும் புரட்டியும் எற்றியும் ஓடிவரும் காவிரிநீர் வந்து அலைக்கும் நனிபள்ளியாகும். | |
தகை மலி தண்டு, சூலம், அனல் உமிழும் நாகம், கொடு கொட்டி வீணை முரல,
வகை மலி வன்னி, கொன்றை, மதமத்தம், வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல், பணிவார்கள் பாடல், பெருகி,
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும்; நமர்காள்
|
7
|
பெருமை பொருந்திய தண்டு , சூலம் , அனல் உமிழும் நாகம் ஆகியவற்றை உடையவராய் , வகையாக அமைந்த வன்னி கொன்றை ஊமத்தை ஆகியவற்றை அணிந்து கொடுகொட்டி என்னும் திருக்கூத்தியற்றிய பெருமான் உகந்த நகர் , புகையாக எழுந்த மணத்துடன் மாலை புனைவார்கள் புகழும் ஓசையும் , பணிந்து போற்று வார் பாடும் பாடல் ஓசையும் பெருகி ஒளிவீசும் முத்துக்கள் இலங்கும் மணல் சூழ்படப்பைகளை உடைய நனிபள்ளியாகும் . | |
வலம் மிகு வாளன், வேலன், வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை
நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும்; நமர்காள்
|
8
|
வலிமை மிக்க வாள் வேல் ஆகியவற்றையும் வளைந்த ஒளி மிக்க பற்களையும் உடைய மதியா அரக்கனாகிய இராவணன் உடல் வலிமையோடு கற்றூண் போன்ற தோள் வலியும் இழக்குமாறு கால் விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர் , கீழுல கிலும் மேலுலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்கின்ற நீதி வடிவினனாகிய அவனை நன்மைமிக்க தொண்டர்கள் நாளும் திருவடிகளைப் பரவும் நனிபள்ளியாகும் . | |
நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார்,
அற உரு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல், நகர்தான்
புற விரி முல்லை, மௌவல், குளிர் பிண்டி, புன்னை, புனை கொன்றை, துன்று பொதுள
நற விரி போது தாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும்; நமர்காள்
|
9
|
நிறம் பொருந்தியதொரு எரிவடிவம் தோன்றித் தங்களிடையே நிற்க அதன் நீர்மை சீர்மை ஆகியவற்றை நினையாத வராய் அறம்பொருந்திய வேதங்களை ஓதும் நாவினனாகிய பிரமனும் திருமாலும் முடி அடிகளைத் தேடமுயன்று அறியாதவராய் நின்ற தலைவனது நகர் , முல்லை நிலத்தில் விரிந்த முல்லை , மல்லிகை , அசோகு , புன்னை , கொன்றை ஆகியன செறிந்த சோலைகளில் பூத்த மலர்களில் புதுமணம் கமழும் நனிபள்ளியாகும் . | |
அனம் மிகு, செல்கு, சோறு கொணர்க! என்று கையில் இட உண்டு பட்ட அமணும்,
மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும்,
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளிபோலும்; நமர்காள்
|
10
|
அன்னமாக , வயிற்றுக்குட் செல்லும் சோறு கொணர்க எனக் கேட்டுக் கையில் இட உண்டு திரியும் அமணரும் , மனம் விரும்பிக் கஞ்சியைப் பனைமட்டையாலியன்ற மண்டையில் ஏற்றுண்டு தொண்டர்க்குரிய குணமின்றி நிற்கும் புத்தரும் கூறுவன வற்றைக் கொள்ளாது கிரியைகள் மிகுந்த வேதங்கள் நான்கையும் ஓதிய நாவினை உடைய விடையூர்தியான் விரும்பிய நகர் , தெளிந்த ஞானமுடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடிகளைப் பரவிப் போற்றும் நனிபள்ளியாகும் . | |
| Go to top |
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே.
|
11
|
கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளை யும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத , ஆறங்கங் களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும் . | |