அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே,
மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும்
குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே.
|
1
|
பாம்பைப் போலும் தண்டோடு மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால் , அழகிய காவிரியாற்றின் பக்கம் , மராமரங்கள் விரிந்த மலர்களும் , முல்லையும் , மணம் வீசும் மல்லிகையும் , தேனோடு முறுக்கு உடையும் மலர்களைஉடைய குராமரங்களும் விரிந்த சோலை சூழ்ந்த கும்பகோணத்தினை இடமாகக் கொண்டு குழகனாகிய சிவபெருமான் , இரவில் ஒளிரும் சந்திரனைச் சூடி வீற்றிருக்கிறான் . அப்பெருமானே எம் இறைவன் . | |
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து, அயலே
பூத்து, அரவங்களோடும், புகை கொண்டு அடி போற்றி, நல்ல
கூத்து அரவங்கள் ஓவா, குழகன், குடமூக்கு இடமா,
ஏத்து அரவங்கள் செய்ய, இருந்தான்; அவன் எம் இறையே.
|
2
|
வேதங்கள் ஓதப்படும் ஒலியோடு , காவிரியாறு பாயும் ஒலியும் சேர்ந்தொலிக்க , பக்கத்திலுள்ள பூஞ்சோலைகளில் மலர்ந்துள்ள பூக்களைக் கொண்டு தூவி , தூபதீபம் காட்டி இறைவனைப் போற்றுவதால் உண்டாகும் ஒலி விளங்க , திருநடனம் புரியும் அழகனாகிய சிவபெருமான் , திருக்குட மூக்கினை இடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றான் . எல்லோரும் போற்றி வணங்கும் புகழுடைய அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் . | |
மயில் பெடை புல்கி ஆல, மணல் மேல் மட அன்னம் மல்கும்,
பயில் பெடை வண்டு பண் செய் பழங்காவிரிப் பைம்பொழில் வாய்,
குயில் பெடையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
இயலொடு வானம் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.
|
3
|
ஆண்மயில் பெண்மயிலைத் தழுவி ஆட , காவிரியாற்றின் கரையிலுள்ள மணலின் மீது ஆண் அன்னம் தன் பெண் அன்னத்தோடு நடைபயில , வண்டுகள் பண்ணிசைக்க , நிறைய பழங்கள் கனிந்துள்ள பசுமையான சோலைகளில் குயிலானது பெடையோடு சேர்ந்து கீதமிசைக்கத் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் விண்ணோர்கள் வேதாகம முறைப்படி பூசிக்க வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் . | |
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து, உமையாள் வெருவ,
அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு ஆர்
கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.
|
4
|
சிவபெருமான் புலியின் தோலை உரித்து நன்கு தாழ இடுப்பில் கட்டியவர் . உமாதேவி அஞ்சுமாறு எலும்பு , பாம்பு , ஆமையோடு , பன்றியின் கொம்பு ஆகியவற்றை அழகிய ஆபரணமாகப் பூண்டு , கொக்கரை என்னும் வாத்தியம் இசைக்கப் பாடும் சிவபெருமான் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் எத்தன்மையோரும் போற்றி வணங்க வீற்றிருந்தருளுகின்றான் . அவனே யாம் வணங்கும் கடவுளாவான் . | |
வடிவு உடை வாள்-தடங்கண் உமை அஞ்ச, ஒர் வாரணத்தைப்
பொடி அணி மேனி மூட உரிகொண்டவன்; புன்சடையான்;
கொடி நெடுமாடம் ஓங்கும், குழகன், குடமூக்கு இடமா,
இடி படு வானம் ஏத்த இருந்தான்; அவன் எம் இறையே.
|
5
|
அழகிய உருவமுடைய வாள்போன்ற ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்து , திருவெண்ணீறணிந்த திருமேனிமீது போர்த்தவனும் , சடைமுடியுடையவனும் , அழகனும் ஆன சிவபெருமான் , கொடிகள் அசைகின்ற ஆகாயத்தைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள நீண்ட மாடங்கள் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வானவர்கள் போற்ற வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் . | |
| Go to top |
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே,
தழை வளர் மாவின், நல்ல பலவின், கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இழை வளர் மங்கையோடும் இருந்தான்; அவன் எம் இறையே.
|
6
|
முற்றிய மூங்கில்களிலிருந்து மிகுதியாகக் கிடைக்கும் ஒலிக்கின்ற முத்துக்கள் நிறைந்த காவிரியாற்றின் பக்கத்திலே , தழைகள் மிகுந்த மாங்கனிகளும் , பலாவின் கனிகளும் கொத்தாக விளைகின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் , அழகான சிவபெருமான் , நல்ல ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் . | |
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச்
சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்;
குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா,
இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே.
|
7
|
மலைமகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , மகிழ்ந்து விளங்கும் சிவபெருமான் எழில்மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு , அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து , மூன்று புரங்களையும் சிதைத்தவன் . கொத்தாகக் காய்க்கும் பலாக்கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளம் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இலைபோன்ற சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் . | |
நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப்
படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்;
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா,
இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே.
|
8
|
நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின் உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வளைந்த மடல்களையுடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் மணல் திட்டு சூழ வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் . | |
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா,
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே.
|
9
|
அக்கினிபோல் ஒளிரும் சக்கராயுதப் படையுடைய திருமாலும் , பிரமனும்அளக்கமுடியாதவனாய் , கட்டுப்படுத்த முடியாமல் பெருக்கெடுத்த கங்கையைப் புன்சடைமேல் தாங்கி , இளம்பிறைச் சந்திரனைச் சூடி , நல்ல நெருப்புப் பிழம்பு போல் ஓங்கி நின்றஅழகனானசிவபெருமான் , திருகுடமூக்கு என்னும் திருத்தலத்தில் தோலும் கோவணஆடையும்அணிந்து வீற்றிருந்தருளுகின்றான் . அவனே யாம் வணங்கும் கடவுள் ஆவான் . | |
மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டு அமணர்
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன் நலத்தான்,
கூடிய குன்றம் எல்லாம் உடையான், குடமூக்கு இடமா,
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான்-அவன் எம் இறையே.
|
10
|
மஞ்சட் காவியுடையணிந்த , இறைவனை உணராத பேதையராகிய புத்தர்களும் , இறுமாப்புடைய சமணர்களும் , கூறுவன பயனற்றவை . தன்னை நாடித் தேவர்கள் எல்லாம் விரும்பி வழிபட , அவர்கட்கு நல்லதையே அருளும் சிவபெருமான் , மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள்புரிவான் . திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இதழ் விரிந்த கொன்றைமாலையைச் சூடி வீற்றிருந்தருளும் அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் . | |
| Go to top |
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்-
நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே.
|
11
|
வெண்கொடி அசைகின்ற மாடங்கள் ஓங்கி விளங்கும் வெங்குரு எனப்படும் சீகாழியில் அனைவரிடத்தும் நட்புக் கொண்டு பழகும் புகழ்மிக்க தமிழ் ஞானசம்பந்தன் நல்ல குளிர்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து இன்புறுவர் . அவர்கட்கு முக்திப்பேறு எளிதாகக் கைகூடும் . | |