தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,
மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
|
1
|
இளந்தளிர் நாளுக்கு நாள் வளர்ந்து பசுமை அடைதல் போல , வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியின் , குளிர்ந்த , வளரும் இள ஒளிவீசும் அழகிய முலையை மகிழ்ந்து தழுவப் பெறுதலால் . குளிர்ந்த வளரொளி போன்று நள்ளாறர்தம் புகழ்கூறும் , ` போகமார்த்த பூண் முலையாள் ` என்று தொடங்கும் ( தி .1. ப .49. பா .1) திருப்பதிகம் எழுதப்பெற்ற ஓலையை , அவர் திருமேனிபோல் பிரகாசிக்கின்ற நெருப்பிலிட்டால் அவை பழுது இல்லாதனவாம் என்பது சத்தியமே . | |
போது அமர்தரு புரிகுழல் எழில் மலைமகள் பூண் அணி
சீதம் அது அணிதரு முகிழ் இளவனமுலை செறிதலின்,
நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர் தம் நாமமே,
மீ தமது எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
|
2
|
மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்ப்பட்ட கூந்தலை உடைய அழகிய மலைமகளான உமாதேவியின் ஆபரணம் அணிந்து , குளிர்ச்சிதரும் சந்தனத்தை அணிந்த , அரும்பொத்த இளைய அழகிய முலைகளைத் தழுவுகின்றவரும் , நாத தத்துவம் அழகிய உருவாகக் கொண்டவருமான திருநள்ளாற்று இறைவரின் புகழ் கூறும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேலான அவருருவான நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே . | |
இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
கட்டு உறு கதிர் இளவனமுலை இணையொடு கலவலின்,
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர் தம் நாமமே;
இட்டு உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; `மெய்ம்மையே!
|
3
|
பூங்கொத்துக்களைப் போன்று , இரத்தினங்கள் வரிசையாகக் கோக்கப்பட்ட மாலையணிந்த உமாதேவியின் , ஒளி வீசும் இளைய அழகிய முலைகளைத் தழுவும் , கதிர்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள வயல்வளமிக்க திருநள்ளாற்று இறைவனின் புகழ் உரைக்கும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அனல் வாதத்திற்கென வளர்க்கப்பட்ட நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே . | |
மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு
கச்சு அணி கதிர் இளவனமுலை அவையொடு கலவலின்,
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மெச்சு அணி எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
|
4
|
மை பூசப்பெற்ற ஒழுங்கான செவ்வரி படர்ந்த அழகிய கண்களையுடைய தொன்மையாய் விளங்கும் உமா தேவியாரின் பரஞானம் , அபரஞானம் ஆகிய பயன்தரும் கச்சணிந்த ஒளிரும் இளைய அழகிய முலையைத் தழுவும் நஞ்சணி கண்டத்தினனான திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை அழகிய நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே . | |
பண் இயல் மலைமகள் கதிர் விடு பரு மணி அணி நிறக்
கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்,
நண்ணிய குளிர்புனல் புகுதும் நள்ளாறர் தம் நாமமே,
விண் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
|
5
|
பண்பாடமைந்த மலைமகளின் ஒளிவீசுகின்ற இரத்தினங்கள் பதித்த ஆபரணத்தை அணிந்த , அழகான கலசம் போன்ற இருமுலைகளையும் கூடும் , குளிர்ச்சி பொருந்திய நீர் பாயும் திருநள்ளாற்று இறைவனின் நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை ஆகாயமளாவிய இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே . | |
| Go to top |
போது உறு புரிகுழல் மலைமகள் இள வளர் பொன் அணி
சூது உறு தளிர் நிற வனமுலை அவையொடு துதைதலின்,
தாது உறு நிறம் உடை அடிகள் நள்ளாறர் தம் நாமமே,
மீது உறும் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
|
6
|
மலர்களணிந்த பின்னிய கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியாரின் பொன்னாபரணம் அணிந்த , சூதாடும் வட்டை ஒத்த , தளிர்போன்ற நிறமுடைய அழகிய முலைகளோடு நெருங்கியிருத்தலால் , பொன்போலும் நிறம் பெற்ற அடிகளாகிய நள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இயல்புடைய இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது , சத்தியமே . | |
கார் மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவின் உறு
சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்,
தார் மலி நகுதலை உடைய நள்ளாறர் தம் நாமமே,
ஏர் மலி எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
|
7
|
அடர்த்தியான , பின்னப்பட்ட , சுருண்ட கார்மேகம் போன்ற கருநிறமான கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியின் அழகிய , சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணம் அணிந்த முலைகளோடு நெருங்கியிருக்கும் , மண்டையோட்டை மாலையாக அணிந்துள்ள திருநள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை எழுச்சியுடன் எரியும் இந்நெருப்பிலிட்டால் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே . | |
மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு
பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை
புணர்தலின்,
தன் இயல் தசமுகன் நெறிய, நள்ளாறர் தம் நாமமே,
மின் இயல் எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
|
8
|
நிலைபெற்று வளரும் ஞானவொளி பிரகாசிக்கும் மலைமகளான உமாதேவியின் தளிர்நிறத்தனவாய் மான்மதமாகிய கத்தூரியை அணியப்பெற்றனவாய் , இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான ஆபரணத்தை அணிந்துள்ளனவாய் , கலசத்தை ஒத்தனவாய் விளங்கும் இருமுலைகளைப் புணர்கின்றவரும் , ஆணவமே இயல்பாக உடைய இராவணனைக் கயிலையின் கீழ் நெரியும்படி செய்தவருமான திருநள்ளாற்று இறைவரின் திரு நாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை , மின்னலைப் போன்ற எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே . | |
கான் முக மயில் இயல் மலைமகள் கதிர் விடு கனம் மிகு
பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின்,
நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர் தம் நாமமே,
மேல் முக எரியினில் இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!
|
9
|
காட்டில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய உமாதேவியின் , ஒளிவிடுகின்ற கனத்த பால்சுரக்கும் பருத்த இருமுலைகளைக் கூடுகின்றவரும் , பிரமனும் , திருமாலும் அறிவதற்கு அரியவராக விளங்குகின்றவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி எரியும் இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே . | |
அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசயச்
சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்,
புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர் தம் நாமமே,
மெய்த் திரள் எரியினில் இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே!
|
10
|
அம்பு போன்று கூர்மையான கண்களையுடைய தொன்மையான மலைமகளான உமாதேவியின் பயன்தரும் அதிசயம் விளைவிக்கும் , பலவகையான இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் அணியப் பெற்றுள்ள இருமுலைகளோடு நெருங்கி யிருப்பவரும் , புத்தர்களாலும் , சமணர்களாலும் உணரப்படாதவரும் பொய்யினின்று நீங்கியவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை , திரண்டு எரியும் இந்நெருப்பில் இட்டாலும் அவை பழுதில்லாதன வாகும் என்பது சத்தியமே . | |
| Go to top |
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறிதரும்
நல்-திறம் உறு, கழுமல நகர் ஞானசம்பந்தன
கொற்றவன் எதிர் இடை எரியினில் இட, இவை கூறிய
சொல்-தெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர்; தூயரே.
|
11
|
சிறிய இடையினையுடைய உமாதேவியின் அழகிய முலைகளோடு நெருங்கியிருக்கும் திருநள்ளாற்று இறைவனைப் போற்றும் திருப்பதிகம் எழுதிய ஏடுகளை , நன்மைதரும் கழுமலநகரில் அவதரித்த திருஞானசம்பந்தன் , பாண்டிய மன்னனின் எதிரில் , நெருப்பின் நடுவில் இடுகின்றபோது கூறிய , இத்திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் துயரற்றவர்கள் ஆவர் . மும்மலங்களினின்றும் நீங்கித் தூயராய் விளங்குவர் . | |
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|