முந்தி மூ எயில் எய்த முதல்வனார், சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார், அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்- பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.
|
1
|
வரிசையாகிய அடர்ந்த செஞ்சடையுடையவராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் முதற்கண் முப்புரங்களை எய்த முதல்வர் ; சிந்திப்பவர்களின் வினைகளைத் தீர்க்கும் செல்வர் ; சந்திரனுக்கு அருள் செய்த தண்ணளியாளர் . | |
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார், தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார், கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர், படர்ந்த நாகத்தர்-பாசூர் அடிகளே.
|
2
|
படர்ந்தெழும் நாகத்தைப் பூண்ட திருப்பாசூர்த் தலத்து இறைவர் . உமாதேவியை ஒரு பாகத்து மகிழ்ந்த மணவாளர் ; உயிர்களைப் பிறவிதோறும் தொடர்ந்து வரும் வல்லமை உடைய வினைகளாகிய இருளைப் போக்கிடும் ஒளி வடிவானவர் ; எல்லை கடந்த இயமனைக் கால்கொண்டு பாய்ந்து உதைத்தவர் . | |
நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகனார், காறு கண்டத்தர், கையது ஓர் சூலத்தர், பாறின் ஓட்டினர்-பாசூர் அடிகளே.
|
3
|
பருந்துகள் அலைக்கும் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் , மணம்வீசும் கொன்றையும் , நாகமும் , திங்களும் , கங்கையாறும் செஞ்சடையில் வைத்த அழகர் ; கரியகண்டத்தர் ; கையிற்பிடித்த சூலத்தர் . | |
வெற்றியூர் உறை வேதியர் ஆவர், நல் ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார், நெற்றிக்கண்ணினர், நீள் அரவம் தனைப் பற்றி ஆட்டுவர்-பாசூர் அடிகளே.
|
4
|
நீண்ட அரவினைப் பற்றியாட்டும் , இயல்பினர் ஆகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , வெற்றியூரில் உறையும் வேதியர் , ஏற்றினை ஒற்றி உகந்து ஏறும் ஒப்பற்றவர் , நெற்றிக் கண்ணினர் . | |
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணிபால் இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்,- துட்டரேல், அறியேன், இவர் சூழ்ச்சிமை;- பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.
|
5
|
பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் . தேன் விரிந்த மலர்களையணிந்த நீண்ட கண்ணுடைய உமாதேவியார்பால் விருப்பமும் வேட்கையும் உடையவராயிருப்பவர் ; இவர் தீயவரேல் இவரது சூழ்ச்சித் தன்மைகளை அறியேன் . | |
| Go to top |
பல் இல் ஓடு கை ஏந்திப் பகல் எலாம் எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்,- சொல்லிப் போய்ப் புகும் ஊர் அறியேன்; சொல்லீர்! பல்கும் நீற்றினர்-பாசூர் அடிகளே.
|
6
|
நிறைந்த திருவெண்ணீற்றினராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , பல்லில்லாத ஓட்டினைக் கையேந்திப் பகலெல்லாம் வெயிலில் நின்று இடுகின்ற பலியினை ஏற்பவர் ; சொல்லிவிட்டுச் சென்று புகுந்த ஊரினை அறியேன் ; சொல்லுவீராக . | |
கட்டிவிட்ட சடையர், கபாலியர்,- எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ் அவர் இட்டமா அறியேன், இவர் செய்வன- பட்ட நெற்றியர்-பாசூர் அடிகளே.
|
7
|
பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் கட்டிவிட்ட சடையை உடையவரும் , கபாலம் கைக்கொண்டவரும் எட்டிப்பார்த்து இல்லத்தில் புகுந்தவரும் ஆகியர் . இவர் விரும்பிச் செய்வன இவையென யான் முற்ற அறியேன் . | |
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர், காதில் வெண் குழை வைத்த கபாலியார், நீதி ஒன்று அறியார், நிறை கொண்டனர்- பாதி வெண் பிறைப் பாசூர் அடிகளே.
|
8
|
பாதி வெண்பிறையணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர் , வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார் ; காதில் வெண்குழை வைத்த கபாலியார் ; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார் . | |
சாம்பல் பூசுவர், தாழ்சடை கட்டுவர், ஓம்பல் மூதெருது ஏறும் ஒருவனார், தேம்பல் வெண்மதி சூடுவர், தீயது ஓர் பாம்பும் ஆட்டுவர்-பாசூர் அடிகளே.
|
9
|
தீயதாகிய பாம்பினையும் பற்றி ஆடுபவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் , சாம்பல் பூசுவர் ; தாழ்கின்ற சடையினைக் கட்டுவர் ; தாங்கும் இயல்புள்ள முதிர்ந்த எருதினையேறும் ஒருவர் ; ஒளிதேம்பிய வெண்மதியைச் சூடுவர் . | |
மாலினோடு மறையவன் தானும் ஆய், மேலும் கீழும், அளப்ப(அ)ரிது ஆயவர்; ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்; மிகப் பால்வெண் நீற்றினர்-பாசூர் அடிகளே.
|
10
|
பால்போன்ற வெண்ணீற்றையணிந்தவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் மாலினோடு பிரமனும் மேலும் கீழும் அளந்தும் காண்டற்கரியவர் ; ஆலின்நீழல் இருந்து அறம் பகர்ந்த ஞானவடிவினர் . | |
| Go to top |
திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால் எரிய எய்தனரேனும், இலங்கைக் கோன் நெரிய ஊன்றியிட்டார், விரல் ஒன்றினால்; பரியர்; நுண்ணியர்-பாசூர் அடிகளே.
|
11
|
பருப்பொருளும் , நுண்பொருளுமாகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் , திரியும் மூன்று புரங்களைச் சிவந்த கணையொன்றினால் எரியுமாறு எய்தனரேனும் , இலங்கையரசன் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர் ஆவர் . | |