சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.046   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்புகலூர் - திருக்குறுந்தொகை அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு வர்த்தமானீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=_vfLU6ETFzU   Add audio link Add Audio

துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
பொன் நக்கன்ன சடை, புகலூரரோ!
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?

1
கோவண ஆடையையும் , வெண்ணீற்றுப் பொடி யணிந்த மேனியையும் , பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும் உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே ! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப் பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர் ?

இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும்,
நுரைக்கும் கங்கையும், நுண்ணிய செஞ்சடை,
புரைப்பு இலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.

2
இப்பெண் , நெட்டுயிர்க்கும் பாம்பையும் , அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும் , நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும் நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும் பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள் .

ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்!
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன-
ரோ? சொலாய், மகளே! முறையோ? என்று
பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.

3
அசைந்தாடும் அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார் முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர் . ஆதலால் , ` ஓ , மகளே ! சொல்வாயாக ! முறையோ ` என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல் இடுவோமாக .

மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை,
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை,
புன்னைக் காவல் பொழில் புகலூரனை,
என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.

4
மின்னலையொத்த இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும் , தன்னை நிகர்க்குமொன்றில்லாத தலைவனும் ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன் இன்பமுற்றிருப்பேன் .

விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும்
கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில்,
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!

5
விண்ணிற் பொருந்திய பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை , நாமங்கள் கூறியும் , திருவைந்தெழுத்தால் தியானித்தும் , கண்ணினாற் கழலடிகளைத் தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிருக்கும் புகலூரும் என் நெஞ்சமும் ஆம் .
Go to top

அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு,
பண்டு நால்மறை ஓதிய பாடலன்;
தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார்-புகலூரரே.

6
புகலூர்த் தலத்து இறைவர் , தேவர்கள் அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர் ; பழமையில் நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர் ; தொண்டராகித் தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர் .

தத்துவம் தலை கண்டு அறிவார் இலை;
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்;
தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லது
தத்துவன்(ன்) அலன், தண் புகலூரனே.

7
தத்துவங்களின் கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர் ; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக் கண்டவர் காணாதவரேயாவர் ; தத்துவம் தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான் .

பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர்
கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்;
வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப்
பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.

8
புகலூர்த்தலத்து இறைவர் , பெருங்கையோடு பிளிறி வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர் ; துதிக்கையை உடைய மதயானைகளாகிய ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர் .

பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல்
தன் ஒத்த(ந்) நிறத்தானும் அறிகிலா,
புன்னைத் தாது பொழில், புகலூரரை,
என் அத்தா! என, என் இடர் தீருமே.

9
பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமதேவனும் , அலைவீசும் கடலையொத்த நீல நிறத்தவனான திருமாலும் அறியப் படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை ` என் தந்தையே !` என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும் .

மத்தனாய், மதியாது, மலைதனை
எத்தினான் திரள் தோள் முடிபத்து இற
ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும்
பொத்தினான் புகலூரைத் தொழுமினே!

10
மதச் செருக்குடையவனாய்ச்சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின் திரண்ட தோள்களும் , முடிபத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும் , தன் நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் ஏத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புகலூர்
1.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குறி கலந்த இசை பாடலினான்,
Tune - நட்டபாடை   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
2.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கள் விம்மு குழல்
Tune - செவ்வழி   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
4.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி
Tune - இந்தளம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை)
4.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
Tune - திருநேரிசை:காந்தாரம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
4.105   திருநாவுக்கரசர்   தேவாரம்   தன்னைச் சரண் என்று தாள்
Tune - திருவிருத்தம்   (திருப்புகலூர் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு
Tune - திருக்குறுந்தொகை   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
6.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
Tune - திருத்தாண்டகம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
7.034   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
Tune - கொல்லி   (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000