ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும், ஓதி அஞ்சு எழுத்தும்(ம்) உணர்வார்கட்குப் பேதம் இன்றி, அவர் அவர் உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர், மாற்பேறரே.
|
1
|
திருமாற்பேற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர் ஏதொன்றும் அறியாதவர்கள் ஆனாலும், திருவஞ்செழுத்தை ஓதி உணர்வார்கட்கு வேற்றுமையின்றி அவரவர் உள்ளத்தே தாமும் அம்பிகையுமாய் மகிழ்ந்து வீற்றிருப்பர். | |
அச்சம் இல்லை; நெஞ்சே! அரன் நாமங்கள் நிச்சலும் நினையாய், வினை போய் அற! கச்ச மா விடம் உண்ட கண்டா! என, வைச்ச மா நிதி ஆவர், மாற்பேறரே.
|
2
|
நெஞ்சே! அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக; உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிரு நீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர். | |
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்? பாத்திரம் சிவன் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும், மாற்பேறரே.
|
3
|
சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர். | |
இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்! அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்; பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர் மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.
|
4
|
அறிவில்லாதவர்களே! சிந்தித்திருந்து சொல்லுவேன்; கேட்பீர்களாக! அரிய தவத்தினாலாய பயனைத்தரும் திருவஞ்செழுத்தை ஓதினால் திருமாற்பேற்று இறைவர் உம்மைப் பொருந்தியுள்ள நோய்களாகிய பிணிகள் போகும்படி துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர். | |
சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்! ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால், கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர் மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.
|
5
|
உலகில் உள்ளவர்களே! எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக; இடபத்தின் மேல் வருவாராகிய திருமாற்பேற்று இறைவர் திருவடிகளை ஏத்தினால், உம்மைக் கொள்ளவரும் கூற்றுவனை நீக்கி, குறைகளை அறுத்து, ஆள்கின்ற மாற்றில்லாத செம்பொன்னை ஒப்பர். | |
| Go to top |
ஈட்டும் மா நிதி சால இழக்கினும், வீட்டும் காலன் விரைய அழைக்கினும், காட்டில் மாநடம் ஆடுவாய், கா! எனில், வாட்டம் தீர்க்கவும் வல்லர், மாற்பேறரே.
|
6
|
வருந்திச் சேர்த்த பெருஞ்செல்வத்தை மிகுதியாக இழந்தாலும், அழிக்கும் காலன் விரையவந்து அழைத்தாலும், சுடு காட்டில் பெரிய நடனம் ஆடுகின்ற பெருமானே! காப்பாற்றுவாயாக! என்றழைத்தால், திருமாற்பேற்றிறைவர் வாட்டம் தீர்க்கவும் வல்லவராவர். | |
ஐயனே! அரனே! என்று அரற்றினால், உய்யல் ஆம்; உலகத்தவர் பேணுவர்; செய்ய பாதம் இரண்டும் நினையவே, வையம் ஆளவும் வைப்பர், மாற்பேறரே.
|
7
|
தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப் பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர். | |
உந்திச் சென்று மலையை எடுத்தவன் சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் மந்தி பாய் பொழில் சூழும்-மாற்பேறு என, அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே.
|
8
|
செருக்கு தன்னை உந்தித்தள்ளுதலால் சென்று திருக் கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது சந்தனம் பூசிய தோளும் தாள்களும் இறுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்குரியதும், பெண்குரங்குகள் பாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமாற்பேறு என்று கூறினால் முடிவில்லாத ஒப்பற்ற இன்பம் அணுகும். | |