ஏ இலானை, என் இச்சை அகம்படிக்- கோயிலானை, குணப் பெருங்குன்றினை, வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற தாய் இலானை, தழுவும், என் ஆவியே.
|
1
|
தமக்குமேல் தலைவன் இல்லாதவன். உள்ளக் கோயிலான். குணக்குன்று. வாழ்த்துவோர் வாய் இல்லமாக உடையவன். சத்தியை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும். | |
முன்னை ஞான முதல்-தனி வித்தினை; பின்னை ஞானப் பிறங்கு சடையனை; என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன் தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.
|
2
|
பழைய ஞான முதல் தனி வித்தும், பின்னை ஞானம் பிறங்கு சடையனும் , என்னை இருள் நீக்கி ஞானத்தால் ஆண்டவனும் ஆகிய இறைவன் தன்னை ஞானமென்னும் தளையினால் பிணித்து உள்ளத்தே வைப்பேன். | |
ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்; ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்; ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு, ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.
|
3
|
சில ஞானிகள் நின்னை ஞானத்தால் தொழுவார்கள்; ஞானத்தால் உன்னை நான் தொழும் திறம் உடையேனல்லேன்; ஞானத்தால் தொழுகின்றவர்கள் தொழுதலைக் கண்டு, ஞானவடிவாகிய பொருளே! உன்னை நானும் தொழுவன். | |
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே; புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை; புழுவினும் கடையேன் புனிதன் தமர்- குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?
|
4
|
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழு வினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்த அடியார் குழுவினுக்குச் சென்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்?. | |
மலையே வந்து விழினும், மனிதர்காள்! நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே? தலைவன் ஆகிய ஈசன் தமர்களை, கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?
|
5
|
மனிதர்களே! மலையே வந்து விழுந்தாலும் தத்தம் நிலையில் நின்று கலங்காதீர்கள். ஈசன் அடியார்களை ஐம்பொறிகளாகிய யானைகள் கொன்றுவிடுமோ? கொல்லாவாம். | |
| Go to top |
கற்றுக் கொள்வன வாய் உள, நா உள; இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள; கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்; எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?
|
6
|
திருவைந்தெழுத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு வாயும் நாவும் உள்ளன; இட்டுக்கொள்ளப் பூவும், நீரும் உள்ளன; தொகுதியாகிய சிவந்த சடையான் உள்ளான்; நாம் உள்ளோம். இவை யெல்லாம் இருக்க எமனால் முனிவுண்பது எற்றுக்கு? | |
மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்; கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே? புனிதன், பொன்கழல் ஈசன், எனும் கனி இனிது சாலவும், ஏசற்றவர்கட்கே.
|
7
|
மனிதர்களே! இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன்; பழம் தந்தால் பழத்தை உண்ணவும் வல்லமை உடையீரோ? புனிதனும் கழல்கள் அணிந்த இறைவனும் ஆகிய கனி; ஏசற்றவர்களுக்கு மிகவும் இனியது; காண்பீராக. | |
என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்; தன்னை, நானும் முன், ஏதும் அறிந்திலேன்; என்னைத் தன் அடியான் என்று அறிதலும், தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே.
|
8
|
முன் என்னையே ஏதும் அறிந்திலேன்; எம் பெருமானையும் அறிந்திலேன். என்னைத் தன் அடியான் என்று பெருமான் அறிதலும் தன்னைக்காணும் தலைவன் என்று நானும் அறிந்துகொண்டேன். | |
தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர் உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி; கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்- வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?
|
9
|
மிக்குத் தெளிந்து தித்திப்பதாகிய ஒப்பற்ற உள்ளத்தேன்; அமுதப்பேரொளியும் வெளியும் ஆகிய அவ் அநுபவம் கள்ளம் உடையேனும், கவலைக்கடலைக் கடியாது அவ்வெள்ளத்தே விழுந்துகிடப்பேனுமாகிய எனக்கு விளைந்தது எவ்வாறு? | |