சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.005   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவதிகை வீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி

சிவார்ச்சனை
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=heBfq8uMYc0   Add audio link Add Audio

எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.

1
எல்லாப் பொருள்களும் சிவனுடைய தொடர்புடையன என்று கூறுமாறு எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனே ! தீ கதிர் மதியம் ஆகி நிற்பவனே ! கொலைத் தொழிலைச் செய்யும் மழு என்ற படைக்கலம் ஏந்தியவனே ! உயிர்களை உடல்களிலிருந்து பிரிக்கும் கூற்றுவனை உதைத்தவனே ! அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறியாதவருடைய மானதக் காட்சிக்கு அரியவனே ! முறையாகக் குருவிடம் உபதேசம் பெற்றவர்களுடைய துயரை நீக்குபவனே ! வில்லினைக் கொண்டு பெரிய மதில் களை அழித்தவனே ! அதிகை வீரட்டத்தினை உகந்தருளி யிருக்கும் களங்கமற்றவனே ! உன்னை வணங்குகிறேன் .

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

2
பாடுதலையும் , கூத்து நிகழ்த்துதலையும் பண்புகளாக உடையவனே ! பல ஊழிக்காலங்களையும் படைத்தவனே ! மண்டையோட்டில் இரந்து பெறுவனவற்றையே உணவாக விரும்பி ஏற்றவனே ! உன்னைத் தியானிப்பார் உள்ளத்தைத் தங்குமிடமாக உடையவனே ! சுடுகாட்டில் கூத்தாடுதலை உகப்பவனே ! கார்மேகம் போன்ற கறுத்த கழுத்தை உடையவனே ! ஒதுங்கியிருந்து படமெடுத்து ஆடச்செய்ய வேண்டிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் கொள்பவனே ! அலைகள் வீசும் கெடில நதியை அடுத்த அதிகை வீரட்டானத்திலிருந்து உயிர்களை ஆள்பவனே -- உன்னை வணங்குகிறேன் .

முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி!
முழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி!
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி!
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!
திரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.

3
முடியில் முல்லை மாலை சூடியவனே ! உடல் முழுவதும் திருநீறு பூசியவனே! எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே ! யாழின் ஏழு நரம்புகளிலும் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே ! உருண்டை வடிவினதாகிய மயிர் நீங்கிய , மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே ! உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்குபவனே ! தில்லைச் சிற்றம்பலத்தை உகந்தருளி யிருக்கிறவனே ! அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே ! உன்னை வணங்குகிறேன் .

சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

4
மார்பில் திருநீறு பூசியவனே ! அடியார்கள் மேற் கொள்ளும் தவநெறிகள் அவற்றிற்கு உரிய பயன்களைத் தரும்படி செய்து நிற்பவனே ! ஐம் பொறிகளையும் மனத்தால் அடக்கி உன்னை வழிபடுபவர்கள் செய்யும் சிறிய தொண்டுகளை உள்ளத்துக்கொண்டு அவர்களுக்கு அருள் செய்ய இருக்கும் இளையோனே ! பாம்பும் , பிறையும் , கங்கையும் தம்மிடையே பகை இன்றி ஒருசேர இருக்குமாறு அவற்றைச் சடையில் அணிந்த பண்பனே ! ஆம்பற் பூக்களையும் அணிந்தவனே ! அலைகளை உடைய கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டானத்திருந்து எல்லோரையும் ஆள்பவனே ! உன்னை வணங்குகிறேன் .

நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!.

5
திருநீறு பூசிய நீலகண்டனே ! ஒளி விளங்கும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவனே ! தன் உடலில் ஒரு கூறாகப் பொருந்துமாறு உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டவனே ! கொடிய பாம்புகளை ஆடச்செய்யும் இளையவனே ! கங்கை தங்கிய தலையினனே ! அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் ஆயினவனே ! காளையை வாகனமாக ஏறிச்செலுத்துதலை என்றும் விரும்புபவனே ! கெடில நதிக் கரையிலுள்ள பெரிய அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையே ! உன்னை வணங்குகிறேன் .
Go to top

பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

6
உன்னையே விரும்பிப் பாடும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிச் செவிமடுக்கின்றவனே ! பழையாற்றைச் சார்ந்த பட்டீச்சுரத்தை உகந்தருளியிருப்பவனே ! உலகப் பற்றறுத்த அடியார்களுக்கு வீடுபேற்றினை அருள வல்லவனே ! உமாதேவி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்திக் கொண்டவனே ! தம் முயற்சியாலே உன்னை அடைய விரும்புபவர்கள் ஆராய்ந்து அறிதற்கு அரியவனே ! இடையிலே பாம்பினை இறுகக் கட்டியிருப்பவனே ! பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புபவனே ! அலைகெடில வீரட்டானத்தை உகந்து உலகை ஆள்பவனே ! உன்னை வணங்குகின்றேன் .

மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.

7
நில உலகம் அசையுமாறு கூத்தாடுதலை மகிழ்ந்தவனே ! பெரிய கடலும் வானமும் ஆனவனே ! வானுலகம் நடுங்கும் படி மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்தவனே ! யானைத் தோலினால் உடம்பை மூடிக்கொள்ளும் , உலகியலுக்கு வேறுபட்டவனே ! பண்கள் பொருந்தப் பாடுதலில் பழகியவனே ! உலகம் முழுதுமாய் பரவியிருக்கும் மேம்பட்டவனே ! கண் அசைத்துத் திறந்த அளவில் முற்காலத்தில் மன்மதனை அழித்தவனே ! நீரின் ஆழத்தால் கருநிறம் கொண்ட கெடிலக்கரை வீரட்டானத்தை உகந்து கொண்ட , மண்டைஓட்டை ஏந்தியவனே ! உன்னை வணங்குகின்றேன் .

வெஞ்சின வெள் ஏறு ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

8
மிக்க சினத்தையுடைய வெண்ணிறக் காளையை வாகனமாக உடையவனே ! விரிந்த சடையின் மேல் கங்கை வெள்ளத்தைத் தங்கச் செய்தவனே ! உறங்காது பிச்சை எடுக்கும் மேம்பட்டவனே ! உன்னை வழிபடும் ஒழுக்கத்தை உடைய அடியார்களின் துயரைத் துடைப்பவனே ! விடம் தங்கிய கழுத்தை உடைய தலைவனே ! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே ! இனிய சொல்லை உடைய பார்வதி பாகனே ! அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் ! உன்னை வணங்குகின்றேன் .

சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

9
அடியார் உள்ளத்தை இருப்பிடமாய்க் கொண்டு நிலைபெற்ற சிவபெருமானே ! இதயத்தாமரையில் ஞானவடிவாகத் தங்கியிருப்பவனே ! புண்ணியமே வடிவானவனே ! தூயனே ! காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்திகளாகவும் இருக்கும் மேம்பட்டவனே ! உண்மைப்பொருளே ! என் தந்தையே ! நேரங்களில் சிறந்த அந்திப்பொழுதாக இருக்கும் அரனே ! வீரட்டத்திலிருந்து உலகை ஆள்பவனே ! உன்னை வணங்குகின்றேன் .

முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.

10
முக்கண்ணனே ! முதல்வனே ! முருகனுடைய தந்தையே ! தென்திசைக் கடவுளே ! அறவடிவினனே ! மெய்ப் பொருளே ! என் தந்தையே ! திருமாலும் , பிரமனும் ஒன்று சேர்ந்து அண்ணலே என்று அழைத்துக் கை கூப்புமாறு அசையாது ஒளிப்பிழம்பாய் நின்றவனே ! வீரட்டானத்து இறைவனே ! வேறு எங்கும் பற்றுக் கோடில்லாத அடியேன் தந்தையாகிய உன்னை வணங்குகிறேன் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவதிகை வீரட்டானம்
1.046   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குண்டைக் குறள் பூதம் குழும,
Tune - தக்கராகம்   (திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.001   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல
Tune - கொல்லி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
Tune - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,
Tune - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் )
4.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரும்பு கொப்பளித்த யானை ஈர்
Tune - கொப்பளித்ததிருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெண் நிலா மதியம் தன்னை
Tune - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
Tune - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   மடக்கினார்; புலியின்தோலை; மா மணி
Tune - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்பு எலாம் இளைய காலம்
Tune - திருநேரிசை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.104   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் ஒள்வாள் போல்
Tune - திருவிருத்தம்   (திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
5.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   கோணல் மா மதி சூடி,
Tune - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
Tune - திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
Tune - ஏழைத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
6.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   சந்திரனை மா கங்கைத் திரையால்
Tune - அடையாளத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
6.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
Tune - குறிஞ்சி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
Tune - காப்புத்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
7.038   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மானை அறியாத சாதியார் உளரே?
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000