சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
6.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=heBfq8uMYc0
6.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=c0llPrAgTrM
6.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொறை உடைய பூமி, நீர்,
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pKyyHEruu5Y
6.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=KrQ2A0SoGVc

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.005   எல்லாம் சிவன் என்ன நின்றாய்,  
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

சிவார்ச்சனை ‌ ‌
எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
எரிசுடர் ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி!
கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி!
கற்றார் இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!
வீரட்டம் காதல் விமலா, போற்றி!.

[1]
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி!
பல் ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[2]
முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி!
முழுநீறு பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி!
ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி!
சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!
திரு வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.

[3]
சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி!
தவநெறிகள் சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[4]
நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி!
நிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!
இருங் கெடில வீரட்டத்து எந்தாய், போற்றி!.

[5]
பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி!
பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி!
வேழத்து உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி!
நாகம் அரைக்கு அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[6]
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி!
பார் முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!
கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.

[7]
வெஞ்சின வெள் ஏறு ஊர்தி உடையாய், போற்றி!
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[8]
சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

[9]
முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப,
துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!
எறி செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.032   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!  
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )

சிவார்ச்சனை ‌ ‌
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[1]
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மதயானை ஈர் உரிவை போர்த்தாய், போற்றி!
கொங்கு அலரும் நறுங்கொன்றைத் தாராய், போற்றி!
கொல் புலித் தோல் ஆடைக் குழகா, போற்றி!
அங்கணனே, அமரர்கள் தம் இறைவா, போற்றி!
ஆலமர நீழல் அறம் சொன்னாய், போற்றி!
செங்கனகத் தனிக் குன்றே, சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[2]
மலையான் மடந்தை மணாளா, போற்றி!
மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி!
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி!
நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி!
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி!
ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி!
சிலையால் அன்று எயில் எரித்த சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[3]
பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி!
பூதப்படை உடையாய், போற்றி போற்றி!
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய், போற்றி!
மறி ஏந்து கையானே, போற்றி போற்றி!
உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி போற்றி!
உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி!
சென்னி மிசை வெண் பிறையாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[4]
நஞ்சு உடைய கண்டனே, போற்றி போற்றி!
நல்-தவனே, நின் பாதம் போற்றி போற்றி!
வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே, போற்றி!
வெண்மதி அம் கண்ணி விகிர்தா, போற்றி!
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய், போற்றி!
தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ, போற்றி!
செஞ்சடையாய், நின் பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[5]
சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி!
சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி!
பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி!
புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி!
அம் கமலத்து அயனோடு மாலும் காணா
அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி!
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[6]
வம்பு உலவு கொன்றைச் சடையாய், போற்றி!
வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய், போற்றி!
கொம்பு அனைய நுண் இடையாள் கூறா, போற்றி!
குரை கழலால் கூற்று உதைத்த கோவே, போற்றி!
நம்புமவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி!
நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[7]
உள்ளம் ஆய் உள்ளத்தே நின்றாய், போற்றி!
உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி!
வள்ளலே, போற்றி! மணாளா, போற்றி!
வானவர் கோன் தோள் துணித்த மைந்தா, போற்றி!
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா, போற்றி!
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய், போற்றி!
தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய், போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[8]
பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி!
புத்தேளிர்   போற்றும் பொருளே, போற்றி!
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி!
திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி!
சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி!
சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி!
சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[9]
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி!
பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி!
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி!
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி!
அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி!
அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும்,
சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.056   பொறை உடைய பூமி, நீர்,  
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கயிலாயம் ; (திருத்தலம் அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி )

சிவார்ச்சனை ‌ ‌
பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
பூதப்படை ஆள் புனிதா, போற்றி!
நிறை உடைய நெஞ்சின் இடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மறை உடைய வேதம் விரித்தாய், போற்றி!
வானோர் வணங்கப்படுவாய், போற்றி!
கறை உடைய கண்டம் உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[1]
முன்பு ஆகி நின்ற முதலே, போற்றி!
மூவாத மேனி முக்கண்ணா, போற்றி!
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய், போற்றி!
ஆறு ஏறு சென்னிச் சடையாய், போற்றி!
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய், போற்றி!
என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி!
கண் பாவி நின்ற கனலே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[2]
மாலை எழுந்த மதியே, போற்றி!
மன்னி என் சிந்தை இருந்தாய், போற்றி!
மேலை வினைகள் அறுப்பாய், போற்றி!
மேல் ஆடு திங்கள் முடியாய், போற்றி!
ஆலைக் கரும்பின் தெளிவே, போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
காலை முளைத்த கதிரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[3]
உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி!
ஒள் எரி வீசும் பிரானே, போற்றி!
படரும் சடைமேல் மதியாய், போற்றி!
பல்கணக் கூத்தப்பிரானே, போற்றி!
சுடரில்-திகழ்கின்ற சோதீ, போற்றி!
தோன்றி என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கடலில் ஒளி ஆய முத்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[4]
மை சேர்ந்த கண்டம் உடையாய், போற்றி!
மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய், போற்றி!
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய், போற்றி!
போகாது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
மெய் சேரப் பால்வெண்நீறு ஆடீ, போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் விளக்கே, போற்றி!
கை சேர் அனல் ஏந்தி ஆடீ, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[5]
ஆறு ஏறு சென்னி முடியாய், போற்றி!
அடியார்கட்கு ஆர் அமுது ஆய் நின்றாய், போற்றி!
நீறு ஏறும் மேனி உடையாய், போற்றி!
நீங்காது என் உள்ளத்து இருந்தாய், போற்றி!
கூறு ஏறும் அம் கை மழுவா, போற்றி!
கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய், போற்றி!
காறு ஏறு கண்டம்-மிடற்றாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[6]
அண்டம் ஏழ் அன்று கடந்தாய், போற்றி!
ஆதிபுராணனாய் நின்றாய், போற்றி!
பண்டை வினைகள் அறுப்பாய், போற்றி!
பாரோர் விண் ஏத்தப்படுவாய், போற்றி!
தொண்டர் பரவும் இடத்தாய், போற்றி!
தொழில் நோக்கி ஆளும் சுடரே, போற்றி!
கண்டம் கறுக்கவும் வல்லாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[7]
பெருகி அலைக்கின்ற ஆறே, போற்றி!
பேரா நோய் பேர விடுப்பாய், போற்றி!
உருகி நினைவார் தம் உள்ளாய், போற்றி!
ஊனம் தவிர்க்கும் பிரானே, போற்றி!
அருகி மிளிர்கின்ற பொன்னே, போற்றி!
ஆரும் இகழப்படாதாய், போற்றி!
கருகிப் பொழிந்து ஓடும் நீரே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[8]
செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித்
தேடி உணராமை நின்றாய், போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி!
பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி!
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!
கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[9]
மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!
மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச்
சிலை எடுக்க, வாய் அலற வைத்தாய், போற்றி!
கோலத்தால் குறைவு இல்லான் தன்னை, அன்று,
கொடிது ஆகக் காய்ந்த குழகா, போற்றி!
காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.057   பாட்டு ஆன நல்ல தொடையாய்,  
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கயிலாயம் ; (திருத்தலம் அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி )

சிவார்ச்சனை ‌ ‌
பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
பரிசை அறியாமை நின்றாய், போற்றி!
சூட்டு ஆன திங்கள் முடியாய், போற்றி!
தூ மாலை மத்தம் அணிந்தாய், போற்றி!
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி!
அடங்கார் புரம் எரிய நக்காய், போற்றி!
காட்டு ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[1]
அதிரா வினைகள் அறுப்பாய், போற்றி!
ஆல நிழல் கீழ் அமர்ந்தாய், போற்றி!
சதுரா, சதுரக் குழையாய், போற்றி!
சாம்பர் மெய் பூசும் தலைவா, போற்றி!
எதிரா உலகம் அமைப்பாய், போற்றி!
என்றும் மீளா அருள் செய்வாய், போற்றி!
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[2]
செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி!
செல்லாத செல்வம் உடையாய், போற்றி!
ஐயாய், பெரியாய், சிறியாய், போற்றி!
ஆகாய வண்ண முடியாய், போற்றி!
வெய்யாய், தணியாய், அணியாய், போற்றி!
வேளாத வேள்வி உடையாய், போற்றி!
கை ஆர் தழல் ஆர் விடங்கா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[3]
ஆட்சி உலகை உடையாய், போற்றி!
அடியார்க்கு அமுது எலாம் ஈவாய், போற்றி!
சூட்சி சிறிதும் இலாதாய், போற்றி!
சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய், போற்றி!
மாட்சி பெரிதும் உடையாய், போற்றி!
மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய், போற்றி!
காட்சி பெரிதும் அரியாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[4]
மு(ன்)ன்னியா நின்ற முதல்வா, போற்றி!
மூவாத மேனி உடையாய், போற்றி!
என்(னி)னியாய், எந்தை பிரானே, போற்றி!
ஏழ் இன் இசையே உகப்பாய், போற்றி!
மன்னிய மங்கை மணாளா, போற்றி!
மந்திரமும் தந்திரமும் ஆனாய், போற்றி!
கன்னி ஆர் கங்கைத் தலைவா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[5]
உரியாய், உலகினுக்கு எல்லாம், போற்றி!
உணர்வு என்னும் ஊர்வது உடையாய், போற்றி!
எரி ஆய தெய்வச் சுடரே, போற்றி!
ஏசும் மா முண்டி உடையாய், போற்றி!
அரியாய், அமரர்கட்கு எல்லாம், போற்றி!
அறிவே அடக்கம் உடையாய், போற்றி!
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[6]
எண் மேலும் எண்ணம் உடையாய், போற்றி!
ஏறு அரிய ஏறும் குணத்தாய், போற்றி!
பண் மேலே பாவித்து இருந்தாய், போற்றி!
பண்ணொடி யாழ் வீணை பயின்றாய், போற்றி!
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய், போற்றி!
மேலார்கள் மேலார்கள் மேலாய், போற்றி!
கண் மேலும் கண் ஒன்று உடையாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[7]
முடி ஆர் சடை மேல் மதியாய், போற்றி!
முழுநீறு சண்ணித்த மூர்த்தி, போற்றி!
துடி ஆர் இடை உமையாள் பங்கா, போற்றி!
சோதித்தார் காணாமை நின்றாய், போற்றி!
அடியார் அடிமை அறிவாய், போற்றி!
அமரர் பதி ஆள வைத்தாய், போற்றி!
கடி ஆர் புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[8]
போற்று இசைத்து உன் அடி பரவ நின்றாய், போற்றி!
புண்ணியனே, நண்ணல் அரியாய், போற்றி!
ஏற்று இசைக்கும் வான்மேல் இருந்தாய், போற்றி!
எண்ணாயிரம்-நூறு பெயராய், போற்றி!
நால்-திசைக்கும் விளக்கு ஆய நாதா, போற்றி!
நான்முகற்கும் மாற்கும் அரியாய், போற்றி!
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

[9]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list