தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும் , சூழும் நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும் , இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும் , ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும் , நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும் , அயன் , அரி , அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
அக்கு இருந்த அரையானை, அம்மான் தன்னை, அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானை, கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னை, குண்டலம் சேர் காதானை, குழைவார் சிந்தை புக்கு இருந்து போகாத புனிதன் தன்னை, புண்ணியனை, எண்ண(அ)ரும் சீர்ப் போகம் எல்லாம் தக்கு இருந்த தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
சங்குமணி கட்டிய இடையினனும் , தந்தை ஆனவனும் , அசுரர் புரங்கள் மூன்றையும் ஒருவிநாடியில் எரித்தவனும் , கொக்கிறகு செருகப்பட்ட சடைமுடிக்கூத்தனும் , குண்டலஞ்சேர் காதினனும் , தன்னை எண்ணி உருகுவார் மனத்துட்புக்கு அங்கிருந்து போகாத புனிதனும் , புண்ணிய உருவினனும் , அளவற்ற செல்வத்தான் ஆகும் இன்பமெல்லாம் வாய்த்திருந்தானும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
உண்மைத் தவமாகி , வேதமுமாகி , வேதத்தின் முதலும் ஆகி , ஒளிரும் இளம்பிறையைச் சூடி , வேறுபட்ட இயல்பினனும் , வீணே அலைந்து இளைத்த அறிவற்ற என்னைத் துன்பக் கடலில் வீழாமல் கரையேற எடுத்துப் பொய்த்தவத்தார் அறிய முடியாத நெறியில் என்னை நிற்பித்தவனும் , கங்கையைச் சடையில் கரந்து உமையம்மையை ஒரு கூற்றிலே கொண்டு நின்றவனும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன் .
சிவன் ஆகி, திசைமுகனாய், திருமால் ஆகி, செழுஞ் சுடர் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, புவன் ஆகி, புவனங்கள் அனைத்தும் ஆகி, பொன் ஆகி, மணி ஆகி, முத்தும் ஆகி, பவன் ஆகி, பவனங்கள் அனைத்தும் ஆகி, பசு ஏறி, திரிவான் ஓர் பவனாய், நின்ற தவன் ஆய தலையாலங்காடன் தன்னை சாராதே சால நாள் போக்கினேனே!.
இடபமூர்ந்து வீட்டு வாயில்கள் தோறும் பிச்சை யேற்பவனாய் , வீரட்டங்கள் எட்டும் மேவினவனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , பிணம் எரிந்து முடைநாறும் சுடுகாட்டில் ஆடுபவனாய் , இறப்பு எதிர்வு நிகழ்வு ஆகிய முக்காலமும் ஆபவனாய் , அரையிலுடை புலித்தோலாகவும் மேலாடை யானைத் தோலாகவும் அமைய விரும்பினனாய் , உமைபொருந்திய பாகத்தோடுள்ள ஒருவனாய் , சடையவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
கரும்பு இருந்த கட்டிதனை, கனியை, தேனை, கன்றாப்பின் நடுதறியை, காறையானை, இரும்பு அமர்ந்த மூ இலைவேல் ஏந்தினானை, என்னானை, தென் ஆனைக்காவான் தன்னை, சுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானை, தூயானை, தாய் ஆகி உலகுக்கு எல்லாம் தரும் பொருளை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
கரும்பின்கண் இருந்த சாறுகொண்டு சமைத்த கட்டியையும் கனியையும் தேனையும் ஒப்பவனாய் , கன்றாப்பூரின் நடுதறியாய் , பன்றியின் வெண்மருப்பாலாகிய காறை அணியினனாய் , இரும்பாலான மூவிலை வேலை ஏந்தியவனாய் , எனக்கு முதல்வனாய் , அழகிய ஆனைக் காவனாய் , வண்டுமொய்க்கும் கொன்றை மலரைச் சூடியவனாய் , தூயவனாய் , தாயானவனாய் , உலகுக் கெல்லாம் பொருள் வழங்குபவனாய்த் திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
பண்டு அளவு நரம்பு ஓசைப் பயனை, பாலை, படுபயனை, கடுவெளியை, கனலை, காற்றை, கண்ட(அ)ளவில் களி கூர்வார்க்கு எளியான் தன்னை, காரணனை, நாரணனை, கமலத்தோனை, எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை, கைம்மாவின் உரிவை பேணும் தண்டு அரனை, தலையாலங்காடன் தன்னை, சாராதே சால நாள் போக்கினேனே!.
பண்டுதொட்டுவரும் இசையிலக்கணத்தொடு பொருந்திய யாழிசையின் பயனாய் , பாலாய் , பாலின் சுவையாய் , பெரியவானமாய் , கனலாய் , காற்றாய் , தன்னைக் கண்ட அளவிலே மகிழ்ச்சி மிகுவார்க்கு எளியனாய் , முதல்வனாய் , திருமாலாய் , நான் முகனாய் , எட்டிதழ்த் தாமரை வடிவிலுள்ள இல்லமாகிய என் நெஞ்சத் துள்ளே நின்ற எம் தலைவனாய் , யானைத் தோற் போர்வையைப் பேணுபவனாய் , இலிங்க வடிவினனாய்த் திகழும் தலையாலங் காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர் கோமான் கயிலை மலை அது தன்னைக் கருதாது ஓடி, முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும், திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப, பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு, பரிந்து, அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் தத்துவனை; தலையாலங்காடன் தன்னை; சாராதே சால நாள் போக்கினேனே!.
இருபது கைகளையுடைய அரக்கர் கோமான் தோள்வளைகளைப் புடைத்து ஓடிச்சென்று ஆராயாது கயிலை மலையை விரைந்தெடுக்க அவன் முத்து விளங்கும் முடிகள் பத்தும் நடுங்கும் வண்ணம் திருவிரல் ஒன்றை அவன்மேல் வைத்து ஊன்ற அவன் தன் பத்து வாயாலும் பாடிய சாமகீதப் பாடலைக் கேட்டு இரக்கம் மிக்கவனாய் அவனுக்கு இராவணன் என்ற பெயரை ஈந்த தத்துவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேனே .