பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை, பேணி நினைந்து எழுவார் தம் மனத்தே மன்னி இருந்த மணி விளக்கு அதனை, நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி அருந் திறல் மாநடம் ஆடும் அம்மான் தன்னை, அம் கனகச்சுடர்க் குன்றை, அன்று ஆலின்கீழ்த் திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள் செய்தானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
1
|
பெருமையாம் தன்மை உடையானும் , பெறற்கு அரிய மாணிக்கம் போன்றவனும் , விரும்பி நினைந்தவாறே துயிலெழுவார் மனத்தில் நிலைபெற்றுநின்ற மணிவிளக்கு ஆனவனும் , நீர்நிலையில் தாள்மேல் நின்ற தாமரை மலரில் எழுந்தருளியிருந்தவனும் , எட்டுத்தோள்களையும் வீசி உலகத்தைத் தொழிற்படுத்தும் அரிய ஆற்றல் மிக்க பெரிய கூத்தினை இயற்றும் பெருமானும் , அழகிய கனகக் குன்று போல்வானும் , பண்டு ஆலின் கீழ் நால்வர்க்கும் திருந்திய மறைப்பொருளை உபதேசித்து அருள்செய்தானும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் . | |
துங்க நகத்தால் அன்றித் தொலையா வென்றித் தொகு திறல் அவ் இரணியனை ஆகம் கீண்ட அம் கனகத்திருமாலும், அயனும், தேடும் ஆர் அழலை; அநங்கன் உடல் பொடி ஆய் வீழ்ந்து மங்க, நகத் தான் வல்ல மருந்து தன்னை; வண் கயிலை மாமலைமேல் மன்னி நின்ற, செங்கனகத்திரள் தோள், எம் செல்வன் தன்னை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
2
|
உயர்ந்த நகத்தாலன்றிப் பிற கருவிகளால் அழியாதவனும் தன் ஆற்றலால் பலரையும் வென்று கூட்டிய வெற்றிகளை உடையவனும் ஆகிய இரணியனை மார்பைப் பிளந்தவனும் , அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்தவனும் ஆகிய திருமாலும் , நான்முகனும் தேடும் அணுகுதற்கரிய நெருப்புப் பிழம்பானவனும் , மன்மதன் உடல் எரிந்து சாம்பராய் உருக்குலைந்து மங்கவும் அவன் மனைவி இரதி அவனைப் பெற்று நகுமாறு செய்யவல்ல அமுதம் ஆனவனும் , வளவிய கயிலை மாமலைமேல் நிலைத்து நின்றவனும் , செம்பொன் நிறங்கொண்டு திரண்ட தோள்களைப்பெற்ற செல்வனும் ஆகிய சிவ பெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் . | |
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை, உம்பர் மணி முடிக்கு அணியை, உண்மை நின்ற பெருகு நிலைக் குறியாளர் அறிவு தன்னை, பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை, பின்னும் முருகு விரி நறுமலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை, மெய்த் தவத்தோர் துணையை, வாய்த்த திருகுகுழல் உமை நங்கை பங்கன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
3
|
நினைந்துருகும் அடியாருடைய மனத்தில் ஊற்றெடுக்கும் தேன் ஆனவனும் , தேவர்களுடைய மணிகள் இழைத்த மகுடங்களுக்கு அணியாய் நிற்கும் திருவடிகளை உடையவனும் , உண்மைக் கண்ணே நின்றாராய் உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொற்களை ஏற்றுப் பெருகுநிலையாகிய வீடு அடைதலையே குறிக் கோளாய்க் கொண்டவருடைய அறிவாய் விளங்குபவனும் , தன்னை விரும்பித் தொழும் அந்தணருக்கு விளங்கித் தோன்றும் மறைப் பொருள் ஆனவனும் , பிற்படுவோராம் மணங்கமழும் தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் முற்பட்ட பரமகாரணன் ஆனவனும் , மெய்யான தவத்தைச் செய்வார்க்கு அமைந்த உறுதுணைவனும் , சுருண்ட குழலினையுடைய உமைநங்கைக்கு வாய்த்த பங்கனும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் . | |
கந்த மலர்க் கொன்றை அணி சடையான் தன்னை; கதிர்விடு மா மணி பிறங்கு கனகச்சோதிச் சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானை; சராசர நல்-தாயானை; நாயேன் முன்னைப் பந்தம் அறுத்து, ஆள் ஆக்கி, பணி கொண்டு, ஆங்கே பன்னிய நூல்-தமிழ்மாலை பாடுவித்து, என் சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
4
|
மணங்கமழும் கொன்றை மலரையணிந்த சடையானும் சிறந்த மரகதமணி உமிழும் ஒளியுடனே விளங்கும் பொன்னின் ஒளிபோல அழகிய மலரணிந்த உமையின் ஒரு பாகத்தொடு தன் பாகம் விளங்குபவனும் , இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களுக்கு நற்றாய் ஆனவனும் , நாயேனுடைய பழைய வினையை அறுத்து அடிமை கொள்ள என் தொண்டினை மதித்துக் கொண்டாற் போல முன்னையோர் உரைத்த இலக்கண நெறியின் அமைந்த தமிழ் மாலையை யான் பாடச் செய்து அதனால் என் மனத்துமண்டிய மயக்கத்தைப் போக்கிய திருவருளைச் செய்தவனும் ஆகிய சிவ பெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் . | |
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன் தன்னை, நளிர்மலர்ப்-பூங்கணை வேளை நாசம் ஆக வெஞ்சினத்தீ விழித்தது ஒரு நயனத்தானை, வியன்கெடில வீரட்டம் மேவினானை, மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம் கொண்ட மைந்தன் தன்னை, செஞ் சினத்த திரிசூலப்படையான் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
5
|
நஞ்சுபொருந்திய கண்டத்தை உடைய தலைவனும் குளிர்ந்த மலர்களாகிய அழகிய அம்புகளைக் கொண்ட மன்மதன் அழியுமாறு கொடிய சினமாகிய நெருப்பு எழ விழித்த ஒரு நெற்றிக் கண்ணினனும் , கெடில நதிக்கரையில் விளங்கும் பரந்த அதிகை வீரட்டம் மேவினவனும் , மேகம் தவழும் நீண்ட சோலைகளை உடையதும் மாடவீதிகள் நிறைந்ததும் மதிலால் வளைப்புண்டதுமாகிய ஆரூரைத் தனது இடமாகக் கொண்ட மைந்தனும் , சினத்தால் சிவந்து தோன்றும் திரிசூலப் படையினனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியிற் கண்டேன் . | |
| Go to top |
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான் தன்னை, கடவூரில் வீரட்டம் கருதினானை, பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன் தன்னை, பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை, பன்னிய நால்மறை விரிக்கும் பண்பன் தன்னை, பரிந்து இமையோர் தொழுது ஏத்தி, பரனே! என்று சென்னிமிசைக்கொண்டு அணி சேவடியினானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
6
|
கங்கையைத் தன் ஒப்பற்ற சடையின் ஒரு பால் மறைத்தவனும் , கடவூர் வீரட்டானத்தைச் சிறந்த இடமாகக் கருதினவனும் , காவிரி சூழும் ஐயாற்றில் விளங்கும் எம் புனிதனும் , பூந்துருத்தி நெய்த்தானம் ஆகிய பதிகளில் நிலைபெற்றவனும் , தான் உரைத்த நான்மறைகளின் பொருளைத் தக்கவர்க்கு விளங்க விரித்து உரைக்கும் இயல்பினனும் , தேவர்கள் அன்பு கொண்டு வணங்கிப் புகழ்ந்து ` பரனே ` என்று முழங்கித் தம் தலைமீது அணியாகச் சூடிக் கொள்ளும் சிவந்த அடிகளை உடையவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் . | |
எத்திக்கும் ஆய் நின்ற இறைவன் தன்னை; ஏகம்பம் மேயானை; இல்லாத் தெய்வம் பொத்தித் தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே, போத வாங்கி, பத்திக்கே வழி காட்டி, பாவம் தீர்த்து, பண்டை வினைப் பயம் ஆன எல்லாம் போக்கி, தித்தித்து, என் மனத்துள்ளே ஊறும் தேனை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
7
|
எல்லாத் திக்குகளுமாய் நின்ற இறைவனும் , ஏகம்பத்தில் பொருந்தி நிற்பவனும் , தெய்வத்தன்மை இல்லாத ஒன்றைத் தெய்வமாக மனத்துட் கொண்டு தம் மயிரைப் பறிக்கும் சமணருடைய பொய் ஒழுக்கப் படுகுழியில் நான் புக்கழுந்தி வீழாமல் , தன் திருவடியாகிய கரையில் புகும்படி என்னைஎடுத்துப் பத்திக்குரிய வழியைக் காட்டிப் பாவத்தைத் தீர்த்து பழைய வினைப் பயனாக விளைவன எல்லாவற்றையும் விலக்கி என் மனத்துள்ளே ஊறுந் தேனாய்த் தித்திப்பவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங் குடியில் கண்டேன் . | |
கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னை; கற்றார்கள் உற்று ஓரும் காதலானை; பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ, அன்று, பொரு சரம் தொட்டானை; நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க, நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து, என்றும் செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
8
|
உண்மை நூல்களைக் கல்லாதார் மனத்தை அணுகாது அகலும் கடவுளும் , மெய்ந்நூல்களைக் கற்றவர்கள் ஆராய்ந்து அடையும் அன்பனும் , பிறர்க்குத் துன்பமிழைத்தலாகிய பிழைபட்ட நெறியை விரும்பினவருடைய புரங்கள் மூன்றும் அழிந்து விழுமாறு போர் செய்யவல்ல அம்பினைத் தொடுத்தவனும் நிலையற்ற புலாற்குடிலாகிய உடலிடத்து நரைதிரை மூப்புப் பிணி இறப்பு முதலியவற்றால் நிகழும் மாறுபாடு நீங்க நலங்கள் நிறைவதற்குரிய தவத்தை என்பால் செய்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்லாத செவ்விய நெறியிலே என்னைச் செலுத்துபவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் . | |
அரிய பெரும் பொருள் ஆகி நின்றான் தன்னை; அலைகடலில் ஆலாலம் அமுது செய்த கரியது ஒரு கண்டத்து, செங்கண் ஏற்று, கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை; உரிய பல தொழில் செய்யும் அடியார் தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பு இலானை; தெரிவை ஒருபாகத்துச் சேர்த்தினானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
9
|
கிடைத்தற்கரிய பெரும்பொருளாய்த் திகழ்பவனும் , அலையை உடைய கடலிடத்துத் தோன்றிய ஆலால நஞ்சினை உண்ணக் கழிந்த கண்டத்தினனும் , சிவந்த கண்களையுடைய இடபத்தின் மேலேறி ஒளிவிடும் சிறந்த மாணிக்க மணிபோல் விளங்குந் தோற்றத்தை உடையவனும் , தத்தம் நிலைக்கு ஏற்ற தொண்டினைச் செய்யும் அடியார்க்கு உலகங்களைக் கற்பம் முடியுமளவும் ஆள அளிப்பவனும் , அழிவில்லாதவனும் , உமையம்மை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானை நான் செங் காட்டங்குடியில் கண்டேன் . | |
போர் அரவம் மால்விடை ஒன்று ஊர்தியானை, புறம் பயமும் புகலூரும் மன்னினானை, நீர் அரவச் செஞ்சடை மேல் நிலா வெண்திங்கள் நீங்காமை வைத்தானை, நிமலன் தன்னை, பேர் அரவப் புட்பகத்தேர் உடைய வென்றிப் பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடியச் செற்ற சீர் அரவக் கழலானை, செல்வன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
|
10
|
போரிடத்து எழுப்பும் ஒலியையுடையதும் பெருமை மிக்கதும் ஆகிய ஒரு விடையை ஊர்தியாக உடையவனும் , புறம்பயத்தும் புகலூரிலும் நிலைத்து நின்றவனும் , கங்கையும் , பாம்பும் நிலவும் செஞ்சடைமேல் நிலாக்காலும் வெண்டிங்கட்பிறையை என்றும் நீங்காதவாறு வைத்தவனும் , நிமலனும் , மிக்க ஒலியுடைய புட்பக விமானத்தையுடையவனாய் , வெற்றியால் மூவுலகங்களிலும் விளங்கிய புகழுடைய கொடிகள் அரக்கனாகிய இராவணனுடைய முடிகள் பொடியாகும்படி ஒலிக்கும் அழகிய கழலினனும் , செல்வனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் . | |
| Go to top |