சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.015   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநாட்டியத்தான்குடி - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு மலர்மங்கையம்மை உடனுறை அருள்மிகு கரிநாதேசுவரர் திருவடிகள் போற்றி
சுந்தரர் திருவாரூரில் இனிதுறையும் நாட்களில் சோழ மன்னனுடைய சேனைத்தலைவரும் திருக்கோயில் திருவமுதுக்கு வேண்டும் செந்நெல்லைச் சேகரித்தளிக்கும் திருத்தொண்டரும் வேளாளருமாகிய கோட்புலி நாயனார் தம் ஊராகிய திருநாட்டியத் தான்குடிக்கு எழுந்தருளுமாறு சுந்தரரை வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோட்கிசைந்த சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியாரும் வரவேற்றுத்தம் திருமாளிகைக்கு அழைத்துச்சென்று திருவமுது செய்வித்தார். தம்மக்களாகிய சிங்கடி, வனப்பகை யென்னும் பெண்கள் இருவரையும அழைத்து வணங்கச்செய்து, தம்பிரான் தோழராகிய தாங்கள் என் பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்தம் அன்பின் திறமறிந்த சுந்தரர் இவர்கள் என் குழந்தைகள் என்று சொல்லி அன்போடு மடிமீதிருத்தி உச்சி மோந்து அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். இங்ஙனம் கோட்புலியாரின் மகளிரைத் தம் மகள்களாக ஏற்றருளிய சுந்தரர், திருநாட்டியத்தான்குடிக் கோயிலையடைந்து பூணாண் ஆவதோர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=14CaylRE330  https://www.youtube.com/watch?v=NdPYONZNHaI   Add audio link Add Audio

பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்; புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்;
பேணீர் ஆகிலும் பெருமையை உணர்வேன்; பிறவேன் ஆகிலும் மறவேன்;
காணீர் ஆகிலும் காண்பன், என் மனத்தால்; கருதீர் ஆகிலும், கருதி,
நானேல், உம் அடி பாடுதல் ஒழியேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .

1
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே . உனக்கு அணிகலமும் , அரைநாணும் சிறுமையையுடைய பாம்பாதல் கண்டு அஞ்சேன் ; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன் ; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும் , யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன் ; வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும் , உன்னை மறவேன் ; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும் , உன்னை கண்ணாரக் காண்பேன் ; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும் , நானோ , என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன் , இஃது என் அன்பிருந்தவாறு .

கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று, இடுகாட்டு எல்லியில் ஆடலைக் கவர்வன்;
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய், திப்பிய மூர்த்தீ!
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல மணியே! மாணிக்க வண்ணா!
நச்சேன், ஒருவரை, நான் உம்மை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.

2
உண்மையான தெய்வத் திருமேனியை உடையவனே , துன்பங்களை உளவாக்கவும் களையவும் வல்ல உயர் வுடையவனே , மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே , திரு நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உன்னையன்றி வேறொருவரையும் விரும்பேன் ; உயரஎழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி நின்று இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பியிருத்துவேன் ; இழிபுடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிற்றற்குரிய காரணத்தைச்சொல்லியருளாய் !

அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன்; யாதினுக்கு ஆசைப்படுகேன்?
பஞ்சு ஏர் மெல் அடி மாமலை மங்கை பங்கா! எம் பரமேட்டீ!
மஞ்சு ஏர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே! மாணிக்கவண்ணா!
நஞ்சு ஏர் கண்டா! வெண்தலை ஏந்தீ! நாட்டியத்தான் குடி நம்பீ! .

3
பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களை யுடைய , பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனே , மேலான இடத்தில் உள்ள , எங்கள் பெருமானே , மேகங்களின்மேற் செல்லுகின்ற வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின் கண் வைத்த உயர்வுடையவனே , மாணிக்கம் போலும் நிறத்தை யுடையவனே , நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தையுடையவனே , வெள்ளிய தலையை ஏந்தியவனே , திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , அஞ்சாமலே உனக்கு நான் தொண்டுபுரிய வல்லேன் ; அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன் ? ஒன்றிற்கும் ஆசைப்படேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

கல்லேன் அல்லேன், நின் புகழ்; அடிமை கல்லாதே பல கற்றேன்;
நில்லேன் அல்லேன், நின் வழி; நின்றார்-தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன்; பொன் அடி பரவ-மாட்டேன்; மறுமையை நினைய,
நல்லேன் அல்லேன், நான் உமக்கு அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.

4
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன் ; அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லா வற்றையும் கற்றேன் ; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன் ; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன் ; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவு மிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன் ; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

மட்டு ஆர் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதார் தமைக் கருதேன்;
ஒட்டீர் ஆகிலும் ஒட்டுவன், அடியேன்; உம் அடி அடைந்தவர்க்கு அடிமைப்
பட்டேன் ஆகிலும் பாடுதல் ஒழியேன்; பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான் மறக்கில்லேன்-நாட்டியத்தான் குடி நம்பீ! .

5
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியே , தேன் நிறைந்த பூவை யணிந்த கூந்தலையுடைய மலை மகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன் ; நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும் , நான் உனக்கு அடியவனாய் , உன்னொடு ஒட்டியே நிற்பேன் ; உன் திரு வடியையே பற்றாக அடைந்த அடியார்க்கு அடியவனாகிய பெருமையை நான் பெற்றுடையேனாயினும் , உன்னைப் பாடுதலை விடமாட்டேன் ; உன் புகழைப் பாடியும் , உனது பெருமைகளை ஆராய்ந்தும் யாவருமறிய உன்னொடு நட்புக் கொண்டேனாதலின் , உன்னை நான் மறக்கமாட்டேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .
Go to top

படப் பால்-தன்மையின், நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன்;
குடப் பாச்சில்(ல்) உறை கோ! குளிர் வானே! கோனே! கூற்று உதைத்தானே!
மடப் பால்-தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறை ஓதீ! மங்கை பங்கா!
நடப்பீர் ஆகிலும் நடப்பன், உம் அடிக்கே; நாட்டியத்தான் குடி நம்பீ! .

6
மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் , நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே , யாவர்க்கும் , தலைவனே , இயமனை உதைத்தவனே , அடியவர் அகங்களில் பால் தயிர் நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற , வேதத்தை ஓதுபவனே , உமையை ஒரு பாகத்தில் உடையவனே , திரு நாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால் , நான் பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிடமாட்டேன் . நீ என்னை விட்டு நீங்குவாயாயினும் , நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

ஐவாய் அரவினை மதி உடன் வைத்த அழகா! அமரர்கள் தலைவா!
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணை தர நினைந்தேன், உள்ளம் உள்ளளவும்;
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன்; உகவீர் ஆகிலும் உகப்பன்;
நைவான் அன்று, உமக்கு ஆட்பட்டது, அடியேன்; நாட்டியத்தான் குடி நம்பீ! .

7
ஐந்து தலைப் பாம்பினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே , தேவர்கட்குத் தலைவனே , திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் அன்று உனக்கு ஆட்பட்டது , துன்பத்தால் வருந்துதற்கு அன்று ; துன்பத்தினின்றும் உய்ந்து , இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன் ; அதனால் , நீ என்னை விரும்பாதொழியினும் , நான் உன்னை விரும்பியே நிற்பேன் ; ஆதலின் , நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன் ; இஃது என்அன்பிருந்தவாறு .

கலியேன், மானுட வாழ்க்கை ஒன்று ஆக; கருதிடின் கண்கள் நீர் பில்கும்;
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன்; பசுவே ஏறிலும் பழியேன்;
வலியே ஆகிலும் வணங்குதல் ஒழியேன்; மாட்டேன்; மறுமையை நினையேன்;
நலியேன் ஒருவரை, நான் உமை அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.

8
திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , யான் இம்மானுட வாழ்க்கையை ஒருபொருளாக நினைத்துச் செருக்கேன் ; இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால் , கண்களில் நீர் பெருகும் . ஆதலின் , பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும் , அதுபற்றி உன்னை இகழேன் ; நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப்பழியேன் ; எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும் , உன்னை வணங்குதலைத் தவிரேன் ; மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன் ; உன்னையன்றி வேறொருவரை நீங்காது நின்று இரக்கமாட்டேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டார் ஆகிலும், கொள்ளக்
கண்டாலும், கருதேன்; எருது ஏறும் கண்ணா! நின் அலது அறியேன்;
தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு தொழுதேன், என் வினை போக;
நண்டு ஆடும் வயல்-தண்டலை வேலி நாட்டியத்தான் குடி நம்பீ! .

9
எருதினை ஏறுகின்ற , எனக்குக் கண்போலச் சிறந்தவனே , நண்டுகள் விளையாடும் வயல்களையும் , சோலையாகிய வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே , சமணரும் , சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும் , அதனை நேரே கண்டாலும் அதனை யான் ஒரு பொருளாக நினையேன் ; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன் ; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு , அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழத் தொடங்கினேன் . இஃது என் அன்பிருந்தவாறு .

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன், கோட்புலி, சென்னி
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான் குடி நம்பியை நாளும் மறவா,
சேடு ஆர் பூங்குழல் சிங்கடி அப்பன்-திரு ஆரூரன்-உரைத்த,
பாடீர் ஆகிலும், பாடுமின், தொண்டீர்! பாட, நும் பாவம் பற்று அறுமே.

10
அடியவர்களே , பிற பாடல்களை நீர் பாட மறந்தாலும் , பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும் , சோழனது நாட்டில் உள்ளதும் , பழமையான புகழை யுடையதும் , ஆகிய திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை , அவனை ஒரு நாளும் மறவாத , திரட்சியமைந்த , பூவை யணிந்த கூந்தலையுடைய , ` சிங்கடி ` என்பவளுக்குத் தந்தையாகிய , திரு வுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள் . பாடின் , உங்கள் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநாட்டியத்தான்குடி
7.015   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பூண் நாண் ஆவது ஓர்
Tune - தக்கராகம்   (திருநாட்டியத்தான்குடி கரிநாதேசுவரர் மலர்மங்கையம்மை)

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group