மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .
|
1
|
கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும், கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி, மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக் குலைகளை மறிக்கும் ஆறு உந்தி, ஓடு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் பாடும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை.
|
2
|
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு, கூட்டு எய்தி, புல்கியும், தாழ்ந்தும், போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் சொல்லும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, தொடர்ந்து அடும் கடும் பிணித் தொடர்வு அறுத்தானை .
|
3
|
பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்து, இழிந்து, அருவிகள் புன்புலம் கவர,
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி, கடல் உற விளைப்பதே கருதி, தன் கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
அறியும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை .
|
4
|
பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும், பொன்மலர் வேங்கையின் நல் மலர் உந்தி, இழிந்து இழிந்து, அருவிகள் கடும் புனல் ஈண்டி, எண் திசையோர்களும் ஆட வந்து இங்கே சுழிந்து இழி காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் ஒழிந்திலேன், பிதற்றும் ஆறு; எம்பெருமானை, உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை .
|
5
|
Go to top |
புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும், நல் மலர் உந்தி, அகழும் மா அருங் கரை வளம் படப் பெருகி, ஆடுவார் பாவம் தீர்த்து, அஞ்சனம் அலம்பி, திகழும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் இகழும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை .
|
6
|
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும், வணக்கியும், மராமரம் பொருது, கரையும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், காம்(பு) பீலி சுமந்து, ஒளிர் நித்திலம் கை போய், விரையும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் உரையும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, உலகு அறி பழவினை அற ஒழித்தானை .
|
7
|
ஊரும் மா தேசமே மனம் உகந்து, உள்ளி, புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள, காரும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், கவரி மா மயிர் சுமந்து, ஒண் பளிங்கு இடறி, தேரும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் ஆரும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை .
|
8
|
புலங்களை வளம்படப் போக்கு அறப் பெருகி, பொன்களே சுமந்து, எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப, இலங்கும் ஆர் முத்தினோடு இனமணி இடறி, இருகரைப் பெரு மரம் பீழந்து கொண்டு எற்றி, கலங்கு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன் விலங்கும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, மேலை நோய் இம்மையே வீடு வித்தானை .
|
9
|
மங்கை ஓர்கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார் திரிபுரம் நீறு எழச் செற்ற அம் கையான் கழல் அடி அன்றி, மற்று அறியான்-அடியவர்க்கு அடியவன், தொழுவன், ஆரூரன்- கங்கை ஆர் காவிரித் துருத்தியார் வேள்விக்-குடி உளார், அடிகளைச் சேர்த்திய பாடல் தம் கையால்-தொழுது, தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்று அமருலகம் ஆள்பவரே .
|
10
|
Go to top |