வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்:
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல்ஆ(ய்,) மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; எம் ஐயா, அரனே! ஓ! என்று என்று
திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந் தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தி யினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாத வனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக!/n ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவ பிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக் கின்ற மலைபோலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெரு மானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவ னுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினைமுழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்./n வானமாகி நிறைந்தும் மண்ணாகி நிறைந்தும் மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே! உன்னுடைய மிக்க சிறப்பை, கொடிய வினையை உடையவனாகிய யான், புகழுகின்ற விதம் சிறிதும் அறி கிலேன். புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும் பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், பூதகணங்களாகியும், வலிய அசுரராகி யும், முனிவராகியும், தேவராகியும் இயங்குகின்ற இந்த நிலையியற் பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள் களுள்ளே எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான் மெலிவடைந்தேன். எம் பெருமானே! இப்பொழுது உண்மையாகவே, உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு பெற்றேன்./n நான் உய்யும்படி என் மனத்தில் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே! மாசற்றவனே! இடபவாகனனே! மறைகள், ஐயனே என்று துதிக்க உயர்ந்து ஆழ்ந்து பரந்த நுண் பொருளானவனே! வெம்மை யானவனே! தண்ணியனே! ஆன்மாவாய் நின்ற விமலனே! நிலையாத பொருள்கள் யாவும் என்னை விட்டு ஒழிய, குருவாய் எழுந்தருளி மெய்யுணர்வு வடிவமாய், விளங்குகின்ற உண்மை ஒளியே! எவ் வகை யான அறிவும் இல்லாத எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே! அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற நல்ல ஞானமயமானவனே! தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே! எல்லா உலகங்களையும் படைப்பாய்; நிலை பெறுத்துவாய்; ஒடுக்குவாய்; அருள் செய்வாய்; அடியேனைப் பிறவியிற் செலுத்துவாய்; உன் தொண்டில் புகப் பண்ணுவாய்; பூவின் மணம் போல நுட்பமாய் இருப்பவனே! தொலைவில் இருப்பவனே! அண்மையில் இருப்பவனே! சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளாய் உள்ளவனே! சிறந்த அன்பரது மனத்துள் கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடின போல இன்பம் மிகுந்து நின்று, எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!/n ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால் உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே மாசற்றவனே! உன்பொருட்டுப் பொருந்தின அன்பை உடையேனாய், மனம் கசிந்து உருகுகின்ற நன்மையில்லாத சிறியேனுக்குக் கருணைபுரிந்து பூமியின்மேல் எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத் தாயினும் மேலாகிய அருள் வடிவான உண்மைப் பொருளே!/n களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, பூப்போன்ற சுடரே! அளவிலாப் பேரொளியனே! தேனே! அரிய அமுதே! சிவபுரத்தை யுடையானே! பாசமாகிய தொடர்பையறுத்துக் காக்கின்ற ஆசிரியனே! அன்போடு கூடிய அருளைச் செய்து என் மனத்தில் உள்ள வஞ்சம் அழிய, பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய நதியே! தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே! ஆராயாதார் மனத்தில் மறைகின்ற ஒளியை யுடையானே! என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிராய் நின்றவனே! சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே! அன்பர் பொருட்டு அவைகளை உடையவனே! அன்பர்களிடத்து அன்புடைவனே! கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, தன்மையினால் அல்லாதவனும் ஆகின்ற பேரொளியை யுடையவனே! நிறைந்த இருளானவனே! புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே! முதல்வனே! முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே! என்னை இழுத்து ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய சிவபெருமானே! மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே! ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத இயற்கையில் நுட்பமாகிய அறிவே! போதலும் வருதலும் நிற்றலும் இல்லாத புண்ணியனே! எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே! காண்பதற்கரிய பெரிய ஒளியே! மகாநதி போன்ற இன்பப் பெருக்கே! அப்பனே! மேலோனே! நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும் சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகி யும் மாறுபடுதலையுடைய உலகத்தில் வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவாய் விளங்கும் தெளிவானவனே! தெளி வின் தெளிவே! என் மனத்துள் ஊற்றுப் போன்ற பருகுதற்குப் ெபாருந்திய அமிர்தமே! தலைவனே!/n வெவ்வேறு விகாரங்களையுடைய ஊனாலாகிய உடம் பினுள்ளே தங்கிக் கிடக்கப்பெற்று ஆற்றேன் ஆயினேன். எம் ஐயனே! சிவனே! ஓ என்று முறையிட்டு வணங்கித் திருப்புகழை ஓதியிருந்து அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப் பிறவியையடையாமல், வஞ்சகத்தை யுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை அறுக்க வல்லவனே! நடு இரவில் கூத்தினைப் பலகாலும் பயிலும் தலைவனே! தில்லையுள் நடிப்பவனே! தென்பாண்டி நாட்டையுடையவனே! துன்பப் பிறப்பை அறுப்பவனே! ஓவென்று முறையிட்டுத் துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்க, சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்./n