வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை, மறையவனை, வாய்மொழியை, வானவர் தம் கோனை, புள் வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை, பொன்நிறத்தின் முப்புரிநூல் நான் முகத்தினானை, முள் வாய மடல்-தழுவி, முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து, விரை நாறும் முருகு விரி பொழில் சூழ், கள் வாய கருங்குவளை கண் வளரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
1
|
ஒரு மேக-முகில் ஆகி, ஒத்து உலகம் தான் ஆய், ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தான் ஆய், பொரு மேவு கடல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய், புனைந்தவனை, புண்ணியனை, புரிசடையினானை, திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திருத் தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் கருமேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
2
|
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை, இறையவனை, மறையவனை, எண் குணத்தினானை, சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை, விடையானை, சோதி எனும் சுடரை, அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி, அன்னங்கள் விளையாடும் அகன் துறையின் அருகே கரும்பு உயர்ந்து, பெருஞ் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
3
|
பூளை புனை கொன்றையொடு புரிசடையினானை, புனல் ஆகி, அனல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய், நாளை இன்று நெருநல் ஆய், ஆகாயம் ஆகி, நாயிறு ஆய், மதியம் ஆய், நின்ற எம்பரனை, பாளை படு பைங்கமுகின் சூழல், இளந் தெங்கின் படு மதம் செய் கொழுந் தேறல் வாய் மடுத்துப் பருகி, காளை வண்டு பாட, மயில் ஆலும் வளர் சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
4
|
செருக்கு வாய்ப் பைங்கண் வெள் அரவு அரையினானை, தேவர்கள் சூளாமணியை, செங்கண் விடையானை, முருக்குவாய் மலர் ஒக்கும் திருமேனியானை, முன்னிலை ஆய் முழுது உலகம் ஆய பெருமானை, இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர், எங்கும் கருக்கு வாய்ப் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
5
|
Go to top |
விடை அரவக் கொடி ஏந்தும் விண்ணவர் தம் கோனை, வெள்ளத்து மால் அவனும் வேத முதலானும் அடி இணையும் திருமுடியும் காண அரிது ஆய சங்கரனை, தத்துவனை, தையல் மடவார்கள் உடை அவிழ, குழல் அவிழ, கோதை குடைந்து ஆட, குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல், கடைகள் விடு வார் குவளைகளை வாரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
6
|
அருமணியை, முத்தினை, ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை, அருமறையின் பொருளைத் திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக் குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேல் கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
|
7
|
இழை தழுவு வெண்நூலும் மேவு திருமார்பின் ஈசன், தன் எண்தோள்கள் வீசி எரி ஆட, குழை தழுவு திருக்காதில் கோள் அரவம் அசைத்து, கோவணம் கொள் குழகனை, குளிர்சடையினானை, தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடந் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே, கழை தழுவித் தேன் கொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
8
|
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை, குண்டலம் சேர் காதவனை, வண்டு இனங்கள் பாடப் பனி உதிரும் சடையானை, பால் வெண் நீற்றானை, பல உருவும் தன் உருவே ஆய பெருமானை, துனிவு இனிய தூய மொழித் தொண்டை வாய் நல்லார், தூ நீலம் கண் வளரும் சூழ் கிடங்கின் அருகே கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில்-சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
9
|
தேவி, அம்பொன்மலைக்கோமன் தன் பாவை, ஆகத் தனது உருவம் ஓருபாகம் சேர்த்துவித்த பெருமான்; மேவிய வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத முதலானை; தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப, துறைக் கெண்டை மிளிர்ந்து, கயல் துள்ளி விளையாட, காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .
|
10
|
Go to top |
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கைக் கோனைச் செற்றவனை, செஞ்சடை மேல் வெண் மதியினானை, கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டு முள்ளூரில் கண்டு கழல்-தொழுது, உரையின் ஆர் மதயானை நாவல் ஆரூரன், உரிமையால் உரை செய்த ஒண் தமிழ்கள் வல்லார் வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும், தாம் போய், வானவர்க்கும், தலைவராய் நிற்பர், அவர் தாமே .
|
11
|