நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில் ஆடலனஞ்சொ லணியிழையாளை யொருபாகம் பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
|
1
|
அங்கமொராறும் மருமறைநான்கும் மருள்செய்து பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத் திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.
|
2
|
நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மே னிரைகொன்றை சீரிடங்கொண்ட வெம்மிறைபோலுஞ் சேய்தாய ஓருடம்புள்ளே யுமையொருபாக முடனாகிப் பாரிடம்பாட வினிதுறைகோயில் பரங்குன்றே.
|
3
|
வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம் தளிர்போன்மேனித் தையனல்லாளோ டொருபாகம் நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.
|
4
|
பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத் துன்னியசோதி யாகியவீசன் றொன்மறை பன்னியபாட லாடலன்மேய பரங்குன்றை உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை யுறுநோயே.
|
5
|
Go to top |
கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனன்மூழ்கத் தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில் புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப் படைநவில்வான்ற னன்னகர்போலும் பரங்குன்றே.
|
6
|
அயிலுடைவேலோ ரனல்புல்குகையி னம்பொன்றால் எயில்படவெய்த வெம்மிறைமேய விடம்போலும் மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப் பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.
|
7
|
மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள் பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச் சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.
|
8
|
முந்தியிவ்வையந் தாவியமாலு மொய்யொளி உந்தியில்வந்திங் கருமறையீந்த வுரவோனும் சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.
|
9
|
குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல பண்டானீழன் மேவியவீசன் பரங்குன்றைத் தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.
|
10
|
Go to top |
தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன் படமலிநாக மரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத் தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி விடமலிகண்ட னருள்பெறுந்தன்மை மிக்கோரே.
|
11
|