கருத்தன் கடவுள் கனலேந் தியாடும் நிருத்தன் சடைமே னிரம்பா மதியன் திருத்த முடையார் திருப்பறி யலூரில் விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே.
|
1
|
மருந்த னமுதன் மயானத்துண் மைந்தன் பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான் திருந்து மறையோர் திருப்பறி யலூரில் விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.
|
2
|
குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன் விளிந்தா னடங்க வீந்தெய்தச் செற்றான் தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
|
3
|
பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச் செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன் சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில் விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.
|
4
|
கரிந்தா ரிடுகாட்டி லாடுங்க பாலி புரிந்தார் படுதம் புறங்காட்டி லாடும் தெரிந்தார் மறையோர் திருப்பறிய லூரில் விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
|
5
|
Go to top |
அரவுற்ற நாணா வனலம்ப தாகச் செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான் தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில் வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.
|
6
|
நரையார் விடையா னலங்கொள் பெருமான் அரையா ரரவம் மழகா வசைத்தான் திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில் விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
|
7
|
வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ் இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம் திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில் விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.
|
8
|
விளங்கொண் மலர்மே லயனோத வண்ணன் துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான் இளம்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும் விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.
|
9
|
சடையன் பிறையன் சமண்சாக் கியரோ டடையன் பிலாதா னடியார் பெருமான் உடையன் புலியி னுரிதோ லரைமேல் விடையன் றிருப்பறியல் வீரட்டத் தானே.
|
10
|
Go to top |
நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன் வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப் பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க் கறுநீ டவல மறும்பிறப் புத்தானே.
|
11
|