சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.129   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சே உயரும் திண் கொடியான்
பண் - மேகராகக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=UTv5Fo4z8ms
1.130   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புலன் ஐந்தும் பொறி கலங்கி,
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=rZnYYLAHzqE
1.131   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=g8kcAS4LkJk
1.132   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=knCU4ih-2bI
1.133   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்
பண் - மேகராகக்குறிஞ்சி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AbtH6ieiJGM
1.134   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கருத்தன், கடவுள், கனல் ஏந்தி
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் )
Audio: https://www.youtube.com/watch?v=zlaSEA7kXxw
1.135   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு சேர்வது ஒர் மேனியர்,
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nkTMgUi7HWk

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.129   சே உயரும் திண் கொடியான்  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
சே உயரும் திண் கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அவன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்
தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட,
செங்குமுதம் வாய்கள் காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல்
கண் காட்டும் கழுமலமே.

[1]
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய
மலைச் செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான்,
அமரர் தொழ, அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும்
இறைவனது தன்மை பாடிக்,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப்
பாட்டு அயரும் கழுமலமே.

[2]
அலங்கல் மலி வானவரும் தானவரும்
அலைகடலைக் கடைய, பூதம்
கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணி
கண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு,
ஊன் சலிக்கும் காலத்தானும்
கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய
மெய்யர் வாழ் கழுமலமே.

[3]
பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச்
சயம் எய்தும் பரிசு வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு
சிலை வளைத்தோன்  பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு
மகிழ்வு   எய்தும் கழுமலமே.

[4]
ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்கள்-
ஒடு, வன்னி, மத்தம், மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர்
செஞ்சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளி
மலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு
சுதை மாடக் கழுமலமே.

[5]
தரும் சரதம் தந்தருள்! என்று அடி நினைந்து,
தழல் அணைந்து, தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர்
தோழமை அளித்த   பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப,
அது குடித்துக் களித்து வாளை,
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய,
அகம் பாயும் கழுமலமே.

[6]
புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன் ஐந்து ஆய்,
நிலன் ஐந்து ஆய் கரணம் நான்குஆய்,
அவை அவை சேர் பயன் உரு ஆய், அல்ல உரு
வாய், நின்றான்; அமரும்கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு
கொம்பு உதைப்ப  கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேரப்
புள் இரியும்  கழுமலமே.

[7]
அடல் வந்த வானவரை அழித்து, உலகு
தெழித்து உழலும் அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல்
பணிகொண்டோன் மேவும் கோயில்
நட வந்த உழவர், இது நடவு ஒணா
வகை பரலாய்த்து என்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல்
கரை குவிக்கும் கழுமலமே.

[8]
பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு
கேழல் உரு ஆகிப் புக்கிட்டு,
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா
வகை நின்றான் அமரும் கோயில்
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள்
கொண்டு அணிந்து, பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து
நின்று, ஏத்தும் கழுமலமே.

[9]
குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை
மெய்த்தவம் ஆய் நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும், உணராத
வகை நின்றான் உறையும் கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி,
இவை இசைய மண்மேல்-தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க,
மேல்படுக்கும் கழுமலமே.

[10]
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள்
ஈசன்தன் கழல்மேல், நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்தான் நயந்து சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்,
தூமலராள் துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான்
அடி சேர முயல்கின்றாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.130   புலன் ஐந்தும் பொறி கலங்கி,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

[1]
விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன் பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி, அம் சொலீர், பலி! என்னும் அடிகள் கோயில்
கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி,
திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே.

[2]
கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை-
பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்
கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு
    உலர்த்தி, கூதல் நீங்கி,
செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.

[3]
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரின் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர்,
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில்
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

[4]
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

[5]
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி,
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,
தேம்தாம் என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

[6]
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில்
குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

[7]
அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்,
மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி,
செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.

[8]
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று
சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

[9]
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்!
எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில்
செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.

[10]
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.131   மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே-
தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.

[1]
வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்
காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி,
மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே.

[2]
தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அங்கி,
மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில்
கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின், குலை கொள்சோலை,
முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே.

[3]
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண் உளோர்கள்,
செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக,
மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக,
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே.

[4]
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காது
உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு
கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின்
முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.

[5]
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு
வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும் மறிய மோதி,
தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து,
முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே.

[6]
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர் வேண்ட,
நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில்
திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய்முதுகுன்றமே.

[7]
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும்
பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை பெயர்த்த ஞான்று,
மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே
முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே.

[8]
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும்,
ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத்
தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த
மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.

[9]
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும், விரவல் ஆகா
ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்!
ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று,
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே.

[10]
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு,
தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.132   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர்
நெறி அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும்
பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலை ஆமே.

[1]
பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து
ஆக, புத்தேளிர் கூடி,
மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட
கண்டத்தோன் மன்னும் கோயில்
செறி இதழ்த் தாமரைத்தவிசில்-திகழ்ந்து ஓங்கும்
இலைக் குடைக் கீழ், செய் ஆர்செந்நெல்
வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம்
வீற்றிருக்கும் மிழலை ஆமே.

[2]
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம்
புரம் மூன்றும், எழில் கண்ணாடி
உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்
சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம்
முகம் காட்ட, குதித்து    நீர்மேல்
விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம்
வாய் காட்டும் மிழலை ஆமே.

[3]
உரை சேரும் எண்பத்து நான்கு
நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய்,
அங்கு அங்கே நின்றான்கோயில்
வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல
நடம் ஆட, வண்டு பாட,
விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள்
கை ஏற்கும் மிழலை ஆமே.

[4]
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி,
காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய்,
பேணு மூன்று உருஆகி, பேர் உலகம்
படைத்து அளிக்கும் பெருமான் கோயில்
தாணு ஆய் நின்ற பரதத்துவனை,
உத்தமனை, இறைஞ்சீர்! என்று
வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப
போல் ஓங்கு மிழலை ஆமே.

[5]
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று,
ஐம்புலனும் அடக்கி, ஞானப்
புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள்
இருக்கும் புராணர் கோயில்
தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம்
அந்தி திகழ, சலசத்தீயுள்,
மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட,
மணம் செய்யும் மிழலை ஆமே.

[6]
ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு
மலர்க்கையன், இமயப்பாவை
கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும்
குணம் உடையோன், குளிரும் கோயில்
சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி,
மது உண்டு, சிவந்த வண்டு
வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்
பண் பாடும் மிழலை ஆமே.

[7]
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி,
கை மறித்து, கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள்
நெரித்த விரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த
சக்கரத்தை வேண்டி, ஈண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி
விமானம் சேர் மிழலை ஆமே.

[8]
செந்தளிர் மா மலரோனும் திருமாலும்,
ஏனமொடு அன்னம் ஆகி,
அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த,
வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி,
நெய் சமிதை கையில் கொண்டு,
வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர்
சேரும் ஊர் மிழலை ஆமே.

[9]
எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர்
சாக்கியரும், என்றும் தன்னை
நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு
அருள்புரியும்  நாதன் கோயில்
பண் அமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசை கேட்டு,
விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்து
ஓடும் இழியும் மிழலை ஆமே.

[10]
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்
பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள்
  பயிலும் நாவன்,
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,
இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும்
இயல்பினோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.133   வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்,
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.

[1]
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச்
சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம்
குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம்,
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[2]
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து,
பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்,
விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்-
திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[3]
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து,
காலன் மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்,
மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்,
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[4]
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து,
பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ,
வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி
சேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[5]
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய எய்து,
ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து,
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்,
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.

[6]
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து,
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து,
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்,
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[7]
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான்,
அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம்,
கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள்,
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வில்வினை மாய்ந்து அறுமே.

[8]
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும்
மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்!
விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.

[9]
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை,
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள்,
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்,
சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.134   கருத்தன், கடவுள், கனல் ஏந்தி  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் திருப்பறியலூர் (பரசலூர்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவீரட்டம் திருவடிகள் போற்றி )
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்-
திருத்தம் உடையார் திருப் பறியலூரில்,
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.

[1]
மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன்,
பெருந்தண்புனல் சென்னி வைத்த பெருமான்-
திருந்து மறையோர் திருப் பறியலூரில்,
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே.

[2]
குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன்
விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்-
தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில்,
மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

[3]
பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்-
சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில்,
விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே.

[4]
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி,
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திருப் பறியலூரில்,
விரிந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

[5]
அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக,
செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்-
தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில்,
வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே.

[6]
நரை ஆர் விடையான், நலம் கொள் பெருமான்,
அரை ஆர் அரவம் அழகா அசைத்தான்-
திரை ஆர் புனல் சூழ் திருப் பறியலூரில்,
விரை ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

[7]
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும்படி தான் இருந்து, ஏழை அன்னம்
திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில்,
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே.

[8]
வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன்,
துளங்கும் மனத்தார் தொழ, தழல் ஆய் நின்றான்-
இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே.

[9]
சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான்; அடியார் பெருமான்;
உடையன், புலியின் உரி-தோல் அரைமேல்;
விடையன்-திருப் பறியல் வீரட்டத்தானே.

[10]
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன்,
வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை,
பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு
அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.135   நீறு சேர்வது ஒர் மேனியர்,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் திருப்பராய்துறை ; (திருத்தலம் அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி )
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.

[1]
கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை,
வந்த பூம்புனல், வைத்தவர்
பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை
அந்தம் இல்ல அடிகளே.

[2]
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார்;
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை
ஆதி ஆய அடிகளே.

[3]
தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு
நூலும் தாம் அணி மார்பினர்
பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை,
ஆல நீழல் அடிகளே.

[4]
விரவி நீறு மெய் பூசுவர், மேனிமேல்;
இரவில் நின்று எரி ஆடுவர்;
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே.

[5]
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.

[6]
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்;
சடையில் கங்கை தரித்தவர்;
படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.

[7]
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார், விரல் ஒன்றினால்;
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் தன்னை, அடிகளே.

[8]
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த்
தோற்றமும் அறியாதவர்;
பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே.

[9]
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள்,
உரு இலா உரை கொள்ளேலும்!
பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை
மருவினான் தனை வாழ்த்துமே!

[10]
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list