![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=DO3apSOzhk0 Add audio link
2.041
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருச்சாய்க்காடு (சாயாவனம்) - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு குயிலுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயாவனேசுவரர் திருவடிகள் போற்றி
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.
1
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக வுடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே யிடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.
2
நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
3
கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.
4
கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பான்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினா ரோங்கினா ரெனவுரைக்கு முலகமே.
5
Go to top
சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாக மெரிகொளுவச் செற்றுகந்தான் றிருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி யொளிதிகழு மலைமகடோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.
6
மங்குல்தோய் மணிமாட மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின் னிசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.
7
தொடலரிய தொருகணையாற் புரமூன்று மெரியுண்ணப்
படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையாற் றடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா வடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.
8
வையநீ ரேற்றானு மலருறையு நான்முகனும்
ஐயன்மா ரிருவர்க்கு மளப்பரிதா லவன்பெருமை
தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.
9
குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணருஞ் சாக்கியரு மலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டி லாடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.
10
Go to top
நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருச்சாய்க்காடு (சாயாவனம்)
2.038
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
Tune - இந்தளம்
(திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
2.041
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மண் புகார், வான்புகுவர்; மனம்
Tune - சீகாமரம்
(திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
4.065
திருநாவுக்கரசர்
தேவாரம்
தோடு உலாம் மலர்கள் தூவித்
Tune - திருநேரிசை
(திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
6.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
Tune - திருத்தாண்டகம்
(திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000