பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான் விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர் அண்ணல் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
|
1
|
ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு சோதி வானவன் றுதிசெய மகிழ்ந்தவன் றூநீர்த் தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர் ஆதி சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
|
2
|
மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள் செறுவில் வாளைகள் சேலவை பொருவயற் றேவூர் அறவன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
|
3
|
முத்தன் சில்பலிக் கூர்தொறு முறைமுறை திரியும் பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் றன்னடி யார்கள் சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழிற் றேவூர் அத்தன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
|
4
|
பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால் கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் தேடு வார்பொரு ளானவன் செறிபொழிற் றேவூர் ஆடு வானடி யடைந்தன மல்லலொன் றிலமே.
|
5
|
Go to top |
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் திங்கள் சூடிய தீநிறக் கடவுடென் றேவூர் அங்க ணன்றனை யடைந்தன மல்லலொன் றிலமே.
|
6
|
வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத் தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் றக்க தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.
|
7
|
தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுக னெரிந்து வெருவ வூன்றிய திருவிர னெகிழ்த்துவாள் பணித்தான் தெருவு தோறுநற் றென்றல்வந் துலவிய தேவூர் அரவு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே.
|
8
|
முந்திக் கண்ணனு நான்முக னும்மவர் காணா எந்தை திண்டிற லிருங்களி றுரித்தவெம் பெருமான் செந்தி னத்திசை யறுபத முரறிருத் தேவூர் அந்தி வண்ணனை யடைந்தன மல்லலொன் றிலமே.
|
9
|
பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள் கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுடென் றேவூர் ஆறு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே
|
10
|
Go to top |
அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன் நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன் எல்லை யில்புகழ் மல்கிய வெழில்வளர் தேவூர்த் தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.
|
11
|