திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும் கரைதரு மகிலொடு கனவளை புகுதரும் வரைவிலா லெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள் அரவரை யழகனை யடியிணை பணிமினே.
|
1
|
கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும் வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற் செண்டுசேர் விடையினான் றிருந்தடி பணிமினே.
|
2
|
கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும் தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமு மாங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள் ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.
|
3
|
வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு சங்கமா ரொலியகில் தருபுகை கமழ்தரு மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள் எங்கணா யகன்றன திணையடி பணிமினே.
|
4
|
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன் மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட் கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.
|
5
|
Go to top |
சந்திரன் கதிரவன் றகுபுக ழயனொடும் இந்திரன் வழிபட விருந்தவெம் மிறையவன் மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள் அந்தமி லழகனை யடிபணிந் துய்ம்மினே.
|
6
|
சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட நடநவில் புரிவின னறவணி மலரொடு படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள் அடல்விடை யுடையவ னடிபணிந் துய்ம்மினே.
|
7
|
சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக் கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன் மரவமர் பூம்பொழின் மயேந்திரப் பள்ளியுள் அரவமர் சடையனை யடிபணிந் துய்ம்மினே.
|
8
|
நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன் ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர் மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள் யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.
|
9
|
உடைதுறந் தவர்களு முடைதுவ ருடையரும் படுபழி யுடையவர் பகர்வன விடுமினீர் மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள் இடமுடை யீசனை யிணையடி பணிமினே.
|
10
|
Go to top |
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள் நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல் நம்பர மிதுவென நாவினா னவில்பவர் உம்பரா ரெதிர்கொள வுயர்பதி யணைவரே.
|
11
|