மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம் ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின ரொளிகிளர் அத்தக வடிதொழ வருள்பெறு கண்ணொடு முமையவள் வித்தக ருறைவது விரிபொழில் வளநகர் விளமரே.
|
1
|
பட்டில கியமுலை யரிவைய ருலகினி லிடுபலி ஒட்டில கிணைமர வடியின ருமையுறு வடிவினர் சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர் விட்டில கழகொளி பெயரவ ருறைவது விளமரே.
|
2
|
அங்கதி ரொளியின ரரையிடை மிளிர்வதொ ரரவொடு செங்கதி ரெனநிற மனையதொர் செழுமணி மார்பினர் சங்கதிர் பறைகுழன் முழவினொ டிசைதரு சரிதையர் வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.
|
3
|
மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப் பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள் பாடல ராடிய சுடலையி லிடமுற நடநவில் வேடம துடையவர் வியனக ரதுசொலில் விளமரே.
|
4
|
பண்டலை மழலைசெ யாழென மொழியுமை பாகமாக் கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர் விண்டலை யமரர்கள் துதிசெய வருள்புரி விறலினர் வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.
|
5
|
Go to top |
மனைகடொ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர் கனைகட லடுவிட மமுதுசெய் கறையணி மிடறினர் முனைகெட வருமதி ளெரிசெய்த வவர்கழல் பரவுவார் வினைகெட வருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.
|
6
|
நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல் செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர் பொறிகமழ் தருபட வரவினர் விரவிய சடைமிசை வெறிகமழ் தருமல ரடைபவ ரிடமெனில் விளமரே.
|
7
|
தெண்கடல் புடையணி நெடுமதி லிலங்கையர் தலைவனைப் பண்பட வரைதனி லடர்செய்த பைங்கழல் வடிவினர் திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர் சேர்வினார் விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.
|
8
|
தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற அண்டல்செய் திருவரை வெருவுற வாரழ லாயினார் கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனி லளியினம் விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.
|
9
|
ஒள்ளியர் தொழுதெழ வுலகினி லுரைசெயு மொழிபல கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவ மறிகிலார் பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர் வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.
|
10
|
Go to top |
வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச் சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய அந்தணர் புகலியு ளழகம ரருமறை ஞானசம் பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை பறையுமே.
|
11
|