நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.
|
1
|
கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.
|
2
|
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார் கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல் தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
|
3
|
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே.
|
4
|
தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
|
5
|
Go to top |
பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத் திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார் விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரே.
|
6
|
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே.
|
8
|
அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும் குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே.
|
9
|
நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித் துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.
|
10
|
Go to top |
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர் சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
|
11
|