மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே முறைமையால் எல்லாம் படைக்கின் றானே ஏத்தவனாய் ஏழுலகு மாயி னானே இன்பனாய்த் துன்பங் களைகின் றானே காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
1
|
தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
2
|
முற்றாத பான்மதியஞ் சூடி னானே முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே உற்றாரென் றொருவரையு மில்லா தானே உலகோம்பும் ஒண்சுடரே யோதும் வேதங் கற்றானே யெல்லாக் கலைஞா னமுங் கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச் செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
3
|
கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே காலங்க ளூழிகண் டிருக்கின் றானே விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே வேதனாய் வேதம் விரித்திட் டானே எண்ணவனா யெண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
4
|
நம்பனே நான்மறைக ளாயி னானே நடமாட வல்லானே ஞானக் கூத்தா கம்பனே கச்சிமா நகரு ளானே கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த அம்பனே அளவிலாப் பெருமை யானே அடியார்கட் காரமுதே ஆனே றேறுஞ் செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
5
|
Go to top |
ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி யமைந்தவனே யளவிலாப் பெருமை யானே கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடுமூ விலையதோர் சூல மேந்திப் பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற் சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
6
|
வானவனாய் வண்மை மனத்தி னானே மாமணிசேர் வானோர் பெருமான் நீயே கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே கடிய அரணங்கள் மூன்றட் டானே தானவனாய்த் தண்கயிலை மேவி னானே தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந் தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
7
|
தன்னவனாய் உலகெல்லாந் தானே யாகித் தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே என்னவனா யென்னிதயம் மேவி னானே யீசனே பாச வினைகள் தீர்க்கும் மன்னவனே மலைமங்கை பாக மாக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித் தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
8
|
எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே அறிந்தார்தாம் ஓரிருவ ரறியா வண்ணம் ஆதியும் அந்தமு மாகி யங்கே பிறிந்தானே பிறரொருவ ரறியா வண்ணம் பெம்மானென் றெப்போதும் ஏத்து நெஞ்சிற் செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
9
|
மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ணச் சூலக் கையவனே கடியிலங்கைக் கோனை யன்று கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற மெய்யவனே யடியார்கள் வேண்டிற் றீயும் விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ் செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
|
10
|
Go to top |