விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக் காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
1
|
வேதமோர் நான்காய்ஆ றங்க மாகி விரிகின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக் கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக் குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக் காதலால் வானவர்கள் போற்றி யென்று கடிமலர்கள் அவைதூவி ஏத்த நின்ற பாதியோர் மாதினனைப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
2
|
தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த் தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக் கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக் காண்கின்ற கதிரவனும் கதியு மாகிக் குடமுழவச் சரிவழியே அனல்கை யேந்திக் கூத்தாட வல்ல குழக னாகிப் படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
3
|
நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை நிறைமதிய முடன்சூடி நீதி யாலே சீராரும் மறையோதி யுலக முய்யச் செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட காராருங் கண்டனைக் கச்சி மேய கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப் பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப் பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
4
|
வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான் விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின் கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக் கொலைப்பகழி உடன் கோத்துக் கோரப்பூசல் ஆடினார் பெருங்கூத்துக் காளி காண அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு பாடினார் நால்வேதம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
5
|
Go to top |
புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலால் புதுப்பந்தர் அதுஇழைத்துச் சருகால் மேய்ந்த சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப்பெய்தார் திறலால் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
6
|
இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார் இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார் அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர் அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர் தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித் தத்துவனைச் சாந்தகிலின் அளறு தோய்ந்த பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
7
|
அண்டவர்கள் கடல்கடைய அதனுள் தோன்றி அதிர்த்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம் எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு இமைப்பளவி லுண்டிருண்ட கண்டர் தொண்டர் வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும் பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
8
|
ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையிற் சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத் தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் காலத்தா லுதைசெய்து காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர் பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
9
|
வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான் மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோடிச் சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத் தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி ஏந்துதிரள் திண்டோளுந் தலைகள் பத்தும் இறுத்தவன்தன் இசைகேட்டு இரக்கங் கொண்ட பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.
|
10
|
Go to top |