ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும் ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை எழுபிறப்பும் எனையாளா வுடையான் தன்னை ஊராரும் படநாகம் ஆட்டு வானை உயர்புகழ்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னுஞ் சீராரும் வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
|
1
|
ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா அமரர்தொழுங் கழலானை யமலன் தன்னைச் சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன் சுடர்இரவி அயிலெயிறு தொலைவித் தானை ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும் உயர்புகழார் தரும்ஓமாம் புலியூர் மன்னும் தீதில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
|
2
|
வருமிக்க மதயானை யுரித்தான் தன்னை வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத் தருமிக்க குழலுமையாள் பாகன் தன்னைச் சங்கரன்எம் பெருமானைத் தரணி தன்மேல் உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி உத்தமர்வாழ் தரும்ஓமாம் புலியூர் மன்னும் திருமிக்க வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
|
3
|
அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் தன்னை ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும் உயர்புகழ்நான் மறைஓமாம் புலியூர் நாளும் தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
|
4
|
பாங்குடைய எழில்அங்கி யருச்சனைமுன் விரும்பப் பரிந்தவனுக் கருள்செய்த பரமன் தன்னைப் பாங்கிலா நரகதனைத் தொண்ட ரானார் பாராத வகைபண்ண வல்லான் தன்னை ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர் உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றும் தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
|
5
|
Go to top |
அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை ஆராத இன்னமுதை அடியார் தம்மேல் வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியைஎன் மருந்து தன்னைப் பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப் பொழில்கெழுவு தரும்ஓமாம் புலியூர் நாளும் திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
|
6
|
மலையானை வருமலையொன் றுரிசெய் தானை மறையானை மறையாலும் அறிய வொண்ணாக் கலையானைக் கலையாருங் கையி னானைக் கடிவானை அடியார்கள் துயர மெல்லாம் உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம் புலியூர்எம் உத்தமனைப் புரம்மூன் றெய்த சிலையானை வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
|
7
|
சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச் செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச் சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத் தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம் ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர் உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற் சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் தன்னைச் சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.
|
8
|
இப்பாடல் கிடைக்கவில்லை.
|
9
|