தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக்
கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.
|
1
|
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே,
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம்
தாது விண்ட(ம்), மது உண்டு மிண்டி(வ்) வரு வண்டு இனம்
கீதம் பாட(ம்), மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே.
|
2
|
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர்,
எந்தைபெம்மான்! என நின்று இறைஞ்சும் இடம் என்பரால்
மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக்
கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே.
|
3
|
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு காலர்கள்
எள்கல் இல்லா இமையோர்கள், சேரும்(ம்) இடம் என்பரால்
பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டு, பிரியாது போய்,
கிள்ளை, ஏனல் கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும் கேதாரமே.
|
4
|
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண் பொருள்களால்,
வாழி, எந்தை! என வந்து இறைஞ்சும் இடம் என்பரால்
மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய,
கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே.
|
5
|
Go to top |
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர் மூழ்கி, நீள் வரைதன் மேல்
தேறு சிந்தை உடையார்கள் சேரும்(ம்) இடம் என்பரால்
ஏறி மாவின் கனியும் பலாவின்(ன்) இருஞ் சுளைகளும்
கீறி, நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும் கேதாரமே.
|
6
|
மடந்தை பாகத்து அடக்கி(ம்), மறை ஓதி வானோர் தொழ,
தொடர்ந்த நம்மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால்
உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர, கல் அறைகள் மேல்
கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே.
|
7
|
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை, அருவரைதனால்
வெருவ ஊன்றி, விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால்
குரவம், கோங்கம், குளிர் பிண்டி, ஞாழல், சுரபுன்னை, மேல்
கிரமம் ஆக வரிவண்டு பண் செய்யும் கேதாரமே.
|
8
|
ஆழ்ந்து காணார், உயர்ந்து எய்தகில்லார், அலமந்தவர்
தாழ்ந்து, தம் தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால்
வீழ்ந்து செற்று(ந்) நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினைக்
கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண, முத்து உதிரும் கேதாரமே.
|
9
|
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள், மாசு உடம்பினர்,
இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால்
அடுக்க நின்ற(வ்) அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளைக்
கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.
|
10
|
Go to top |
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான்,
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர்,
வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே.
|
11
|