பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.
|
1
|
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.
|
2
|
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.
|
3
|
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.
|
4
|
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு
பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.
|
5
|
Go to top |
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.
|
6
|
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.
|
7
|
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி
பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.
|
8
|
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.
|
9
|
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!
|
10
|
Go to top |
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.
|
11
|